ஆத்மாநந்த கிரணமே வெளியின்பம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில் ஒரு ச்லோகத்தில்* இவ்விஷயத்தை நம் ஆசார்யாள் சொல்கிறார். நிறைய சின்னச்சின்ன த்வாரமுள்ள ஒரு கடத்துக்குள் ஒரு தீபமிருக்கிறாற்போல் உடம்புக்குள் ஆத்மா அறிவு ஜ்யோதிஸாக, ஆனந்த ஜ்யோதிஸாக இருக்கிறது. அதை மாயை ப்ரதிபலித்து கண், காது, மூக்கு முதலிய இந்த்ரிய த்வாரங்களின் வழியாக சின்னச் சின்ன ஞான, ஆனந்த ரச்மிகளாக வெளியே அனுப்புகிறது. இந்த ரச்மிகள் எந்தப்பொருள்களின் மேல்படுகின்றனேவா அப்பொருள்களும் கொஞ்சம் ப்ரகாசம் பெறுகின்றன. இந்த்ரிய ரச்மிகள் இந்த ப்ரகாசத்தைக் கொடுப்பது தாங்களே என்பதையும், தங்களுக்கும் முடிவாக ப்ரகாசம் தருவது ஆத்மாவே என்பதையும் அறியாமல், அந்த வெளிப்பொருள்களிலேயே இந்த ப்ரகாசம் இயற்கையாக இருப்பதாகவும் தாங்கள் அவற்றைத் தொட்டு அவற்றிடமிருந்து அதைப் பெறுவதாகவும் நினைத்து ஸந்தோஷிக்கின்றன. ஆத்மாவின் அறிவு, ஆனந்தம் ஆகியவற்றின் லவசேலத்தையே வெளிப் பொருள்களைப்பற்றித் தங்களுக்கு ஏற்படும் அறிவாகவும், வெளிப்பொருள்கள் தங்களுக்குத் தரும் ஆனந்தமாகவும் அசட்டு ஜீவன் எண்ணுகிறான்.

ஒரு பந்தம் போட்டிருக்கிறது. ஸூர்ய வெளிச்சம் கீற்று ஓட்டை வழியாக உள்ளே வருகிறது. இதை ஒரு குழந்தை பார்த்தால் அந்த இடத்தில் பந்தலேதான் ஒளியை ஸ்ருஷ்டித்து அனுப்பியிருக்கிறதென்று நினைக்கும். ஸூர்யனைப் பந்தல் மறைப்பது, அதன் இடுக்கு வழியாய் ஸூர்ய வெளிச்சம் வருவது எல்லாம் குழந்தைக்குத் தெரியாது. நாமும் அப்படித்தான் இருக்கிறாம். ஆத்ம ஜ்யோதிஸை மறைக்கிற நம் சரீரத்தில் அதன் லவலேசத்தைப் பாயவிடுவதாக இந்த்ரியாநுபவங்கள் இருக்கின்றன. நாமோ இந்த்ரியங்களுக்கு விஷயமாகும் வஸ்துகளிலிருந்தே அநுபவம் வருவதாக மயங்குகிறோம்! ஜ்யோதிஸை மறைக்கிற பந்தலிலிருந்தே வெளிச்சத்தை உண்டாக்கிக்கொள்ள முயற்சி செய்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நாம் தேஹத்தைக் கொண்டு நித்யானந்தத்தைப் பெற நினைப்பது. பந்தலைப் பிரித்துவிட்டால் எல்லாம் வெளிச்சமாய் விடுவது போல் தேஹ ப்ரக்ஞை போனால் ஆத்மாவுக்கே உரியதான பூர்ணானந்த ஸ்வரூபமாகி விடலாம்.

வெளிப்பொருள் அதுவாகவே ஆனந்தத்தைத் தரவில்லை என்பதைக் கொஞ்சம் ஆலோசித்தாலும் புரிந்துகொண்டுவிடலாம். காஷ்மீர் சால்வை அதுவே ஆனந்தம் தருவது என்றால் எக்காலத்திலும் ஒருத்தனுக்கு ஹிதமாகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் அது எத்தனைவிலை உயர்ந்ததாயிருந்தாலும், எத்தனை மழமழப்பாயிருந்தாலும் நல்ல கோடை காலத்தில் மேலே பட்டாலே தாங்காமல் தூக்கி எறிகிறோமே! அதனால் ஆனந்தம் அதிலேயே இல்லை என்று புரியத்தானே செய்கிறது, ரொம்பவும் அழகான ஒரு ராகத்தை நல்ல சாரீரமும் ஞானமும் உள்ள பாடகர் ஆலாபனை செய்கிறாரென்பதால் அது எப்போதும் ஆனந்தமளிப்பதாக உள்ளதா என்றால் – நமக்கு ரொம்பப் பிரியமானவர் “போய்” விட்டார் என்று சேதி வருகிறது, அப்போது ரேடியோவிலே அந்த ராகத்தை அந்த வித்வான் தேவகானமாகப் பாடுகிறொரென்றால் ஆனந்தமா தருகிறது? கேட்கப் பிடிக்காமல் நிறுத்தித்தானே விடுகிறோம்? ஜ்வரக்காரனுக்கு நல்ல பக்ஷணமோ, ஐஸ்க்ரீமோ ஆனந்தம் தருமா? சொல்லிக்கொண்டே போகலாம் – ஆனந்தம் வெளிவஸ்துவில் இல்லை என்று காட்டுவதற்கு. ஜீவனுடைய மனஸ் கலப்பதில்தான் ஆனந்தம் உண்டாகிறது. இவன் மனஸ் எதிலும் கலக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும்போது எந்த வஸ்துவாவது ஆனந்தம் தருகிறதா? இந்த மனஸின் ஆனந்தமோ நிலையாய் இருப்பதேயில்லை. இதற்கு எத்தனை ஆனந்தமோ அதைப்போல ஆயிரம் மடங்கு அழுகை என்றுதான் இத்தனை நாழி பார்த்தோம். இடுக்குவழியாக துளித்துளி வெளிச்சத்தை உள்ளே விட்டு, பாக்கி முழுக்க இருட்டையே தருகிற பந்தல் மாதிரி, துளித்துளி ஆனந்தத்தோடு ஏராளமான துக்கத்தையே மனஸ் தருகிறது. இதன் க்ருத்ரிமம் இல்லாமல் இதற்கு ஆதாரமான ஆத்மாவுக்குப் போனால்தான் சாச்வத ஆனந்தமென்பது.

ஜீவன் தானே நித்ய ஆனந்த ஸ்வரூபனான ஆத்மாவாக இருந்துகொண்டு, தாற்காலிக ஆனந்தங்களுக்காக வெளியே அலையாக அலைகிறான். இதைத் தன் வயிற்றுக்குள்ளிருந்தே வாஸனை எழும்புகிறது என்று தெரிந்துகொள்ளாத ஒரு கஸ்தூரி மான் வாஸனை உண்டாகுமிடத்தைத் தேடித்தேடித் திரிவதற்கு உபமித்து அத்வைத சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது.

மனஸ் அடிபட்டுப்போன ஸமாதியில் சைதன்ய மயமான இந்த ஆத்மானந்தம் நன்றாக அறியப்பட்டதாகும். சாந்தமான அந்த ஆனந்தம் எப்படியிருக்கும் என்று நமக்குத் தெரியாது.


* ‘நானா சித்ர கடோதர ஸ்தித’ எனத் தொடங்கும் நான்காவது ஸ்லோகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆனந்த ஞான சாந்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனத்துக்குப் புரியாத சாந்தாநந்தம்
Next