மனத்துக்குப் புரியாத சாந்தாநந்தம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆத்மா தெரியாமல் மனஸ் மட்டுமே தெரிவதான நம் நிலையில் ஆனந்தம் என்பது சக்தி நிறைந்த உணர்ச்சி என்றும், சாந்தம் என்பது உணர்ச்சி அடங்கிப்போன நிலை என்றுத் தோன்றுகிறது. எனவே, உணர்வு என்பதே ஒரு சக்தியாயுள்ளதால் ஆத்மாவின் சாந்தத்தில் எப்படி ஆனந்தத்தை உணரமுடியும் என்று தோன்றலாம். ஆனால் நம் மனஸுக்குப் புரிவதாகவும், நம் மனஸுக்கு ஒத்த விதத்திலும் ஆத்மாவின் சாந்தமும், ஆத்மாவின் ஆனந்தமும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? ஆத்மாதான் மனஸக்கு அப்பாற்பட்ட மனோதீத வஸ்துவாயிற்றே! அதன் அறிவு, உணர்வு, ஆனந்தம், சாந்தம் எல்லாம் எப்படியிருக்கும் என்று அதற்குத்தான் தெரிய முடியுமே தவிர மனஸுக்கு எப்படித் தெரியமுடியும்? நம் உடம்பிலேயே கண்ணுக்கு ஆனந்தமான ஒரு காட்சியைக் காது புரிந்துகொண்டு ஸந்தோஷிக்க முடிகிறதா? காதுக்கு ஆனந்தமான கானத்தைக் கண்ணால் ரஸிக்க முடிகிறதா? இப்படி யோசித்துக்கொண்டு போனால் நாம் ஸகல இந்த்ரியங்களுக்குமே புரியாத ஒரு ஆனந்தமும் இருக்கலாம் என்று தெரியும். ஆனந்தமாயுள்ளபோதே அது சாந்தமாயுமிருக்கலாம்.

சாந்தம் என்பது என்ன? சலனமில்லாமல் தனக்குள்ளேயே அடங்கியிருப்பதுதான். மனஸின் ஆனந்தம் இன்னொன்றின் அநுபோகத்திலேயே விளைவதால், அந்த இன்னொன்றை நோக்கி மனஸ் சலிப்பதாலேயே அநுபோகம் ஏற்படுவதால், அப்போது ‘சாந்தம்’ என்பதாகத் தனக்குள்ளேயே அடங்கியிருக்கும் நிலை ஏற்பட முடியாமலிருக்கிறது. ஆத்மவுக்கோ ‘இன்னொன்று’ என்று வெளியே எதுவுமே தெரியாமல் தன்னிலேயே அது ஆனந்திப்பதால், அப்போது தனக்குள்ளேயே அடங்கியிருப்பதன் சாந்தமும் கிடைக்கிறது.

மனஸுக்கு அதீத சக்திகள் உண்டாகும்போது, அது அமாநுஷ்ய ஆற்றல்களைப் பெறும்போது, மநுஷ்ய சக்திக்கு மேற்பட்ட கந்தர்வர்கள், பித்ருக்கள், தேவர்கள் ஆகியவர்களுக்குப் படிப்படியாக ஒருத்தரைவிட இன்னொருத்தருக்குப் பலமடங்கு ஆனந்தம் ஸித்திக்க முடியும் என்று தெரிகிறது. இப்படி வரிசையாக ஒன்றுக்குமேல் ஒன்றான ஆனந்தங்களைத் தைத்திரீய (உபநிஷ) த்தில் “ஆனந்தவல்லீ” என்றே பெயருள்ள அத்யாயத்தில் சொல்லியிருக்கிறது. அந்த ஆனந்தங்கள் என்ன என்று மநுஷ்யனுக்குப் புரியாது. காபி சாப்பிடுவதிலும், கச்சேரி கேட்பதிலும் மநுஷ்யனுக்கு என்ன ஆனந்தம் என்று ஒரு மாட்டுக்குப் புரியுமா? அப்படித் தான் இதுவும். இப்படிப்பட்ட பல ஆனந்தங்களின் முடிந்த முடிவான உச்சஸ்தானம்தான் ஆத்மானந்தம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்மாநந்த கிரணமே வெளியின்பம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நித்ரை நிலை
Next