நித்ரை நிலை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தெரியாத ஆனந்தம் ஆனந்தமே இல்லை. இங்கே உசந்த கவிதைப் புஸ்தகம் இருக்கிறது; ஆனால் நமக்குக் கண் தெரியவில்லை என்றால் என்ன ப்ரயோஜனம்? ஆத்மா மட்டுமே இருப்பதன் ஆனந்தத்தை அநுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்ள முடியாத நித்ரை இப்படிப்பட்டதுதான். ஆதைத் “தெரிந்த ஆனந்த”மாக உணர்வதே ஸமாதி நிலை. எத்தனையோ ஸாதனை செய்தே அதைப் பெற முடியும். தெரியாத ஆனந்ததத்தில் துக்கமும் தெரியாமலிருப்பதாக உள்ள நிம்மதியைத்தான் போனால் போகிறதென்று பகவான் எல்லாருக்கும் நித்ரையில் தந்திருக்கிறான். தன் சாந்த சௌக்யத்தை ஜீவன் தெரிந்துகொண்டு ஆத்மாவாக ப்ரகாசித்துக் கொண்டிருப்பதான ஸமாதி நிலையை எல்லாருக்கும் தரவில்லை. அவன் க்ருபையை ந்மபி, அதற்கான ஸாதனையைச் செய்தவர்களுக்கே தருவான்.

சற்று முன்னாடி ஒரு உபமானம் சொன்னேன். குடத்துக்குள்ளே இருக்கிற தீபத்தின் ஒளி அதன் ஓட்டைகள் வழியாக வெளியே துளித்துளி தெரிகிறமாதிரிதான் ஆத்மானந்தத்தில் துளித்துளி, இந்த்ரிய விஷய அநுபவங்களில் உண்டாகிறதென்று சொன்னேன். இது ஜாக்ரத் ஸ்திதியில் (விழிப்பு நிலையில்) நாம் விஷயங்களை அநுபவிக்கும்போது. ஸுஷுப்தியில் (தூக்கத்தில்) எப்படியிருக்கிறதென்றால் உபமானத்தை இன்னும் கொஞ்சம் விஸ்தாரம் பண்ண வேண்டும். குடம் என்பதற்குப் பதில் கூடை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஸாதாரணமாக பல த்வாரங்களுள்ள குடம் இருப்பதில்லை; குடத்துக்குள்ளே தீபத்தை வைக்க ப்ரமேயமும் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால், காற்றடிக்கும்போது தீபத்தின் மேலே ஒரு கூடையைப் போட்டுக் கவிழ்த்து விடுவதுண்டு. அப்போது கூடையில் இடுக்குகள் வழியாய் தீபத்தின் ரச்மிகள் கொஞ்சங் கொஞ்சம் வெளியில் வரும். ஜாக்ரத்தில் இப்படி இருக்கிறதென்று வைத்துக்கொண்டால் ஸுஷுப்தியில் எப்படியிருப்பதாக சொல்வது? கூடையின் விளிம்பைப் பிரம்புகளை ஒரு மாதிரி முறுக்கிப் பண்ணியிருக்கும். அதனால் அதைப் போட்டுக் கவிழ்க்கிறபோது விளிம்பு பூமியிலே முழுக்கப் பதியாமல் அங்கங்கே கொஞ்சம் தொட்டும் தொடாமலுமாகத் தானிருக்கும். இதனால் பெரிய காற்றாக அடிக்கிறபோது, கூடைக்குக் கீழாக காற்று போய்தீபம் அணைந்தவிடப்போகிறதெயன்று, ஒரு கம்பளியையும் எடுத்துக் கூடை மேல் போட்டுவிட்டால் எப்படியிருக்கும்? அதன் ‘நெசவிலே நம் கண்ணுக்குத் தெரியாத அதி ஸூக்ஷ்மமான இடுக்குகள் இருக்குமாதலால், இப்போதும் தீபம் எரிவதற்கான அளவு காற்று உள்ளே போகத்தான் செய்யும். ஆனாலும் நம் பார்வையிலோ, கூடையின் இடுக்குகளை கம்பளி மறைத்து விடுவதால் முன்னே தெரிந்த தீப ரச்மிகள்இப்போது அடியோடு தெரியாது. தூக்கத்தில் இப்படித்தான், உள்ளே ஆத்ம ஜ்யோதி ஸ்வஸ்தமாக இருந்துகொண்டிருக்கும் போதிலும், அதன் ஒளி விழிப்பு நிலையில் ஏதோ துளித்துளி விஷயாநுபவத்தில் தெரிகிற மாதிரி கூட இல்லாமல் எல்லாம் ஒரே இருட்டாகிவிடுகிறது. விழிப்பு நிலையின் பிக்கல் பிடுங்கல் தூக்கத்திலில்லைதான் என்றாலும், அதே ஸமயத்தில் விழிப்பிலே ஏதோ ஒரு நிழலாட்டமாகவாவது ஆத்மானந்தத்தில் துளி தெரிவதுங்கூடத் தூக்கத்திலே அடியோடு தெரியாமல் ஆத்மாநுபவத்தைக் குறித்தமட்டில் ஒரே இருட்டில் இருக்கிறோம். ஒரேயடியாக ஜ்யோதிஸிலேயே இருக்கிற, ஜ்யோதிஸாகவே இருக்கிற ஸமாதி நிலைக்கும் இதுற்கும் எத்தனை வித்யாஸம்?

நம் முயற்சி இல்லாமல், தூக்கம் என்பது தானாக நம்மைக் கவ்விக் கொள்கிறது. “தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வருகிறது” என்னும்போது அது நம்மை மீறிய சக்தி என்று தெரிகிறது. எனவே அதை நமக்கென்று கெட்டியாய்ப் பிடித்து வைத்துக்கொள்வதும் நம் கையில் இல்லை. ‘என்னவோ பாதி ராத்ரி முழிப்புக் கொடுத்துவிட்டது. அப்புறம் என்ன பண்ணியும் தூக்கம் வரலை. உடம்பை என்னவோ பன்றது’ என்கிறோம். அதாவது தூக்கம் என்பது எதுவோ ஒரு வெளி இயற்கைக் சக்தியாக நம்மை இஷ்டப்படி ஆட்டிவைப்பதுதான். தூக்க மாத்திரை சாப்பிட்டு நாமே அதை வரவழைத்துக் கொள்வதாகத் தோன்றும்போதுகூட இதுதான் உண்மை நிலை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனத்துக்குப் புரியாத சாந்தாநந்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கனவு நிலை
Next