கனவு நிலை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தூக்கம் என்பதை நாமாக மாத்திரை, இல்லாவிட்டால் ஏதோ ஒரு தைல ஸ்நானத்தால் வரவழைத்துக்கொண்டு விடலாம். ஆனால் அந்தத் தூக்கம் நிஜமாகவே ஆழ்ந்த தூக்கமாக இருக்கும்படியாக நம்மால் பண்ணிக்கொள்ள முடியாது. நல்ல ஆழ்ந்த தூக்கத்தில்தான் மனஸ் அடங்கியிருப்பது. ஆனால், எப்போதும் அப்படியில்லாமல் அரைத்தூக்கம், கால் தூக்கம், வீசம் தூக்கம், முக்கால் தூக்கம் என்னும்படியாகப் பல நிலைகளில் நாம் நித்ரையில் இழுத்துப்போகப் படுகிறோம். அப்போதெல்லாம் மனஸ் முணுக் முணுக்கென்றோ, அதைவிடச் சற்று அதிகப் பிரகாசமாகவோ வேலை செய்துகொண்டுதான் இருக்கும். இந்த நிலைகளில்தான் மனஸானது ஸ்வப்னங்களை உண்டாக்குகிறது. ஜாக்ரத்தில் (விழிப்பு நிலையில்) நாம் புத்தி பூர்வமாகச் செயற்பட்டதால் ஒரளவு அமுக்கிவைத்திருந்த ரொம்பவும் பயமூட்டுவதான, காமவிகாரம் மிகுந்ததான, அழவைப்பதான, அல்லது பேத்தல் என்று புத்தி ஒதுக்கி வைத்துவிட்டதான தாறுமாறான விஷயங்களை எல்லாம் இப்போது நம்முடைய அந்த புத்திக் கட்டுப்பாடு இல்லாமல் மனஸ் தன்னிஷ்டப்படி வெளியே விட்டு ஸ்வப்னங்களைப் படைக்கிறது. அதனால் ரொம்ப பயங்கரமாய் ஏதாவது ஸ்வப்னம் கண்டு “ஊழ் ஊழ்” என்று ஊளையிட்டுக்கொண்டு எழுந்திருக்கிறோம். இல்லாவிட்டால் குய்யோ முறையோ என்று அழுகிறோம். ‘பைத்தியம் மாதிரி இப்படி கன்னாபின்னா என்று ஸம்பந்தமில்லாததை எல்லாம் அஸம்பாவிதமாகச் சேர்த்துக் கனாக் கண்டிருக்கிறோமே’ என்று நினைக்கும்படியாக அநேக ஸ்வப்னங்கள் வருகின்றன. ரொம்பவும் மனஸை பக்தி, யோகம் என்று ஈடுபடுத்திப்பரிசுத்திக்காக, ப்ரம்மசர்யத்துக்காக ப்ரயத்னம் பண்ணிக் கொண்டிருக்கும் ஸாதகர்கள், “எங்களுக்கு இப்படித் தகாததால் ஸ்வப்னம் வந்துவிட்டதே” என்று எங்கள் மாதிரி இருக்கப்பட்டவர்களிடம் அழுது, பரிஹாரம் கேட்கிறார்கள்.

இதனாலெல்லாம், நம் ஸாதனையால் இயற்கைக்கும் மேலே உள்ள ஈச்வரனின் ப்ரஸாதமாகப் பெறப்பட்டு, நம்மால் உறுதிப்படுத்தி வைத்துக்கொள்ளக்கூடிய ஸமாதி நிஷ்டையாக இல்லாமல், தன்னிஷ்டப்படி நம்மைத் தன்னுடைய பல லெவல்களில் அடித்துக்கொண்டு போகிற தூக்கத்தால் தேவாஸுரயுத்தத்துக்கு முடிவுகாண நினைப்பது வழியேயில்லை என்று தெரிகிறது. தூக்கத்திலும் ஸ்வப்ன ரூபத்தில் அஸுர கணங்கள் எப்போது வேண்டுமானால் படை எடுக்கக்கூடும். எப்போதாவது வேண்டுமொனால் அம்பாள் தர்சனம், ஆலய தர்சனம் மாதிரி நல்ல ஸ்வப்னம் வரலாம். அதுவே அஸம்பாவிதமாக மாறியும்விடலாம். மனஸின் உழப்பறிசல், உள்ளே அடக்கிவைத்த ஆசையின் இழுபறி எல்லாம் தூக்கத்திலும் பிய்ததுக்கொண்டு கிளம்ப வழியிருப்பதால் தூங்கிக்கொண்டேயிருந்துவிட்டால் சாந்தி என்பது இல்லை. தூக்க மருந்துக்கும் ஸ்வப்னாவஸ்தை ஏற்படாமல் தடுப்பதற்கு சக்தியில்லாததால் அதைக் கொண்டும் பூரண சாந்தமான நித்ரை பெறமுடியாது. அப்படியே சாந்தமாக ஆழ்ந்து தூங்கினாலும் அது ஜடத்தனந்தானேயன்றிப் பேரானந்தமில்லை என்று முன்னேயே சொன்னேன்.

ஓயாமல் வெளியிலே ஓடிக்கொண்டிருக்கும் மனஸை உள்ளே இழுத்து, ‘உள்ளுக்குள்ளே உனக்கு அடி ஆதாரமாக ஒரு கார்யமுமில்லாமலிருக்கும் ஆத்மாவை நினை’ என்று பழக்கிக்கொண்டேயிருந்தால்தான், அது அப்படியே நினைத்து நினைத்து, களைத்து விழுந்தபோது, ஸாக்ஷாத் அந்த ஆத்மா மட்டுமே பிரகாசித்துக்கொண்டு விளங்கும். சாச்வத சாந்த சௌக்கியத்தை அநுபவிக்கலாம். வேறே வழி கிடையாது.

யதோ யதோ நிச்சரதி மனச் – சஞ்சல – மஸ்திரம் |
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத் ||

என்கிறார் பகவான். “ஸ்திரமாக ஒன்றில் நிற்காமல் சஞ்சரித்துக்கொண்டே இருக்கும் மனஸானது எதெதைப் பற்றி வெளியிலே ஓடினாலும், அது ஒவ்வொன்றிலிருந்தும் இந்த மனஸை இழுத்து அடக்கி ஆத்மாவிடேமே வசப்படுத்தி வைக்கவேண்டும்” என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நித்ரை நிலை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனம் ஆத்மாவிடம் வசப்படுவது எப்படி?
Next