மனம் ஆத்மாவிடம் வசப்படுவது எப்படி? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘ஆத்மா மனஸுக்கு அப்பாற்பட்டது, மனஸோடு ஸம்பந்தப்படாமல் வெறுமே தானாக இருந்துகொண்டிருப்பது’ என்று சொல்லிவிட்டு, ‘மனஸை இழுத்து அடக்கி ஆத்மாவிடம் வசப்படுத்து” என்றும் சொன்னால் என்ன அர்த்தம்? மனோதீதமான, நிஷ்க்ரியமான (கார்யம் செய்யாததான) ஆத்மா மனஸை எப்படித் தன் வசத்தில் வைத்துக்கொள்ளும்?

ஸரி, மனஸுக்கு ஆத்மா அப்பாற்பட்டதுதான், அதற்குக் கார்யமும் இல்லைதான். ஆனாலும் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத மாயையால் இதே ஆத்மாதான் மனஸுக்கும் ஆதாரமாய் நிற்கிறது; அது இல்லாவிட்டால் மனஸால் ஒரு கார்யமும் பண்ண முடியாது என்றும் பார்த்தோமல்லவா? இப்படி மாயையால் ஆத்மாதான் மனஸ் என்று ஒன்றை அவிழ்த்துவிட்டு, அத வெளியிலே ஓடிக்கொண்டிருப்பதற்கும் சக்தி தருகிறது என்றால், அவிழ்த்து விட்டதைத் தனக்குள்ளேயே எப்படியோ இழுத்துக் கரைத்துக்கொண்டு விடும் என்பதையும் ஏற்க வேண்டியதுதானே?

மாயை என்பது என்ன? அதுதான் ஈச்வர சக்தி. அம்பாள் என்று அதைத்தான் சொல்வது. உயிரும், அறிவும், உணர்வுமாக உள்ள ஆத்ம சைதன்யத்தை மாயைதான் ஸூர்ய வெளிச்சத்தை ஒரு கண்ணாடி ப்ரதிபிம்பிக்கிறது போலப் பண்ணி இந்தச் சின்ன ப்ரதிபலிப்பின் ப்ரகாசத்திலே ஜீவனின் அந்தஃகரணம்* உயிர், உணர்ச்சி, அறிவு எல்லாவற்றையும் பெறும்படியாகச் செய்வது. அல்லது இன்னொரு தினுஸாகவும் சொல்வார்கள். எங்கேயும் நிறைந்திருக்கும்படியான ஆகாசத்தில் (வெட்டவெளியில், space -ல்) ஒரு குடம் இருக்கிறதென்றால் அந்தக் குடத்துக்குள்ளேயும் அந்த வெட்டவெளி இருக்கத்தான் இருக்கிறது. எங்கும் பரவியுள்ளதை மஹாகாசம் என்றும், குடத்துக்குள் இருப்பதை கடாகாசம் என்றும் சொல்வார்கள். இம்மாதிரியே மஹாகாசம் போலுள்ள அகண்ட ஆத்ம சைதன்யத்தை மாயை என்பது கடாகாசம் போலக் கண்டமாக்கி ஜீவ சைதன்யமாகப் பண்ணுகிறது. இப்படிப் பண்ணும் மாயா சக்தி இதை நீக்கவும் கூடும்தானே? தான் குறுக்கே வந்து ப்ரதிபலிக்காமல் விலகி ஜீவன் அப்படியே ஆத்ம சைதன்ய ஜ்யோதிஸ்ஸாக இருக்கும்படி அது விடக்கூடும்தானே? கட ரூபத்துக்குள்ளே அகண்டத்தைக் கண்டமாக்கிய அது அந்த ரூபத்தை அழிவித்து ஜீவனை ஆத்மாகாசமாகவே ஆக்கவும் கூடும்தானே?

“மனஸை அடக்கி ஆத்மாகிட்டே வசப்படுத்து” என்றவுடன் ஆத்மாவிலே மனஸ் எப்படி ஸம்பந்தப்படும் என்று கேட்கிறவர்கள், இன்னொன்றும் யோசித்துப் பார்கக்கணும். ‘மனஸை அடக்கு’, ‘மனஸை இழு’ என்றெல்லாம் சொல்வது மட்டும் எப்படி ஸாத்யம் என்று யோசித்துப் பார்க்கணும். அஞ்ஞான தசையிலுள்ள ஜீவனக்குத்தான் இந்த உபதேசமெல்லாம். ஞானமைடைந்து விட்டவனுக்கு உபதேசம் எதற்கு? அஞ்ஞான தசையில் உள்ள ஜீவத்தன்மைக்கே மனஸ்தான் காரணம். மனஸுக்கு மேற்பட்டதாக அஞ்ஞான ஜீவனிடம் எதுவும் கிடையாது. அப்படியிருக்கும்போது, “மனஸை இழு, அடக்கு” என்றால் எதைக்கொண்டு ஜீவன் இதைப் பண்ணமுடியும்? அவனிடம் உள்ள ஸர்வமுமே மனஸ்தான் என்றிருக்க, அதை வேறு எதனால் அவன் உள்ளே இழுக்கவோ அடக்கவோ முடியும்? மனஸ்தான் அவனுக்காக எல்லாம் பண்ணுவதும். அவனையே ஆட்டிப் படைத்து எல்லாம் செய்யப் பண்ணுவதும். அப்படியிருக்க அதை அடக்குவது, இழுப்பது என்பதாக என்னென்னவோ பண்ணுவது என்றால் எப்படி எது பண்ணும்? மனஸே தன்னை இழுத்துக்கொள்ளுமா, அடக்கிக் கொள்ளுமா? அடங்காமல் ஓடுவது தானே அதன் இயற்கையே?


* எண்ணங்களுக்கு ஆதாரமான சித்தம், உணர்ச்சிகளை அனுபவிக்கும் மனஸ், இவற்றின் தன்மைகளை ஆராயும் புத்தி, இதற்கெல்லாம் அடிப்படையான ‘நான்’ எனும் தனி ஜீவ பாவமான அஹங்காரம் என்ற நான்கும் அந்தஃகரணத்தில் அடங்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கனவு நிலை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈச்வர க்ருபையால்
Next