இங்கெல்லாம்தான் மஹாசக்தனான ஈச்வரன் என்பவனின் க்ருபை வருகிறது. மாயையால் இந்த ஜீவனையும் லேகாத்தையும் தோற்றுவித்தவன் அவன்தான். அந்த மாயா ஸ்ருஷ்டிகளில் ஒன்றேயான மனஸ், தான் ஒன்றிலே இழுபடணும், அடங்கணும் என்று ஆசைப்படவேண்டுமனால் முடியுமே தவிர, தன்னைத்தானே அப்படிப் பண்ணிக்கொள்ளமுடியாது. அதன் ஸ்வபாவமே சஞ்சலம் என்றிருக்க, அது எப்படித்தானே அடங்கமுடியும்? “சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண” – என்று அர்ஜுனன் சொன்னபோது, “ஆமாம், ஸம்சயமே இல்லாமல் அது (சஞ்) சலமானதாகவும், அடக்க முடியாததாகவும்தான் இருக்கிறது” என்று பகவானும் ஒப்புக்கொள்கிறாரே: “அஸம்சயம் மஹா பாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்”. ஆகையால் உடனேயே அவர் அப்யாஸத்தாலும், வைராக்யத்தாலும் நாளாவட்டத்தில் அதை அடக்கலாம் என்று சொன்னபோதிலும், இந்த அப்யாஸத்தைப் பண்ணும்படியாகவும் அந்த மனஸ் ஜீவனை விட்டால்தானே முடியும்? சஞ்சல ஸ்வபாமுள்ள அது அப்படி விடுமா? அதே மாதிரி வைராக்யத்தை இவன் பழக்கிக் கொள்வதற்கும் ஆசாமயமான அது அநுமதிக்குமா? இதற்கெல்லாம் ஒரே பதில்தான் ஈச்வர க்ருபை. “ஐயோ, பாவம்! இந்த சஞ்சல மனஸைக் கொண்டும் ஜீவன் இப்படிப்பட்ட ஸாதனையில் இறங்கியிருக்கிறானே!” என்று ஈச்வரன்தான் இரங்கி இவனுடைய மனஸை அடங்கப் பண்ணி, உள்ளே இழுபட வைத்து, அப்யாஸ வைராக்யங்களில் ஜீவன் தீவ்ரமாகும்படி அருள் செய்வது.
ஜீவன் மாதிரியில்லாமல் ஈச்வரன் மனஸுக்கு மேற்பட்ட சக்தி. அதனாலே அவனுடைய க்ருபையில்தான் மனஸ் அடங்கமுடியும். அது தன்னைத்தானே அடக்கிக் கொள்ளவில்லை. ஈச்வரன்தான் மாயைக் கலப்பற்ற தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்திலே ஜீவமனஸை வசப்படுத்தி வைக்கிறான். ப்ரயாஸை, ப்ரயத்னம்தான் ஜீவன் செய்யக் கூடியது. அதற்கு மேலே மாயா நாடகத்தைப் பண்ணினவன்தான் ஸித்தியை அருள வேண்டியவன். ஆனபடியால், ஓயாமல் வேலை பண்ணிக் கொண்டேயுள்ள மனஸ் எப்படி வேலையே பண்ணாததும், தனக்கு அப்பாற்பட்ட தாயுமிருக்கிற ஆத்மாவிலே கரைந்து போக முடியும் என்று தர்க்க ரீதியில் கேட்பதில் அர்த்தமில்லை. அதைத்தானே மாயை இதுவாக்கியிருக்கிறது? இதே மாதிரி, திரும்ப இது அதுவாக ஆகவும்,இடம் கொடுத்து, தான் விலகிப்போய் விடுகிறது.
மனஸால் ஆத்மாவைப் பிடிக்க முடியாது. ஆனால் நமக்குத் தெரிந்தது, நம்மை ஸதா ஸர்வ காலமும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது, இந்த மனஸ்தான். அதனால் இதை வைத்துக்கொண்டுதான் நாம் ப்ரயாஸை, ப்ரயத்னம், ஸாதனை செய்தாக வேண்டும். மனஸினால் முடியக்கூடியது, உபத்ரவம் பிடித்த தன்னை எப்படியாவது தொலைத்துத் தலை முழுகிவிட்டு உபத்ரவமே இல்லாத ஆத்மாவாக ஆகிவிடவேண்டுமென்று நினைப்பதுதான். தன்னால் முடிந்த இந்த நினைப்பை அதுவிடாமல் வைராக்யத்தோடு அப்யஸித்துக் கொண்டேயிருக்கவேண்டும். அப்புறம் – க்ருபை என்று ஒன்று இருக்கிறதோல்லியோ? அது பாக்கி வேலையைப் பார்த்துக்கொண்டுவிடும். மனஸை இல்லாமல் பண்ணி ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அது அநுக்ரஹம் செய்துவிடும். இதைத்தான் பகவான்,
“தத் ப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி சாச்வதம் (கீதை18:62)
-ஈச்வர க்ருபையால் உயர்ந்த, சாச்வதமான, சாந்த நிலையை அடைவாய்” என்று சொன்னார்.