ப்ரத்யக்ஷச் சான்றுகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மனஸ் விலகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திப்பதை புத்தியாலும் புஸ்தகத்தாலும் நிரூபிக்க முடியாது. அதற்கு நிருபணம் ப்ரத்யக்ஷமாக இப்படி மனஸ் அடிபட்டுப்போய் ஆத்மானந்தத்தில் ஆழ்ந்திருக்கும் மஹான்கள்தான்.

(ஸதாசிவ) ப்ரம்மேந்த்ராள் அப்படியிருந்தார். கையை வெட்டினால்கூடத் தெரியாமல் அவர் பாட்டுக்கு இருந்தார். கொடுமுடியிலே அவர் நிஷ்டைகூடிக் காவேரிக்கரையில் உட்கார்ந்தார். வெள்ளம் புரண்டுவந்து அவரை அடித்துக்கொண்டுபோய் அப்புறம் அவர் மேலேயே மண்மேடிட்டு விட்டது. பஹு நாள் கழித்து யாரோ அதைக் கொத்தினபோது உள்ளேயிருந்த அவருடைய கையிலே அடிபட்டு ரத்தம் பீய்ச்சி அடித்தது. “அடாடா, உள்ளே யாரோ ஆஸாமி இருக்காப்பல இருக்கே” என்று அவர்கள் இழுத்துப் போட்டார்கள். அவர் பாட்டுக்கு ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டு எழுந்திருந்து கால் போன போக்கில் போனார் என்கிறார்கள்.

‘அது முந்நூறு வருஷத்துக்கு முந்திய கதை. ஒரு வேளை கதை கட்டினதாகவும் இருக்கலாம். எப்படி நம்புவது?’ என்று கேட்கலாம். ஸமிப காலத்தில் நம்மகத்துப் பெரியவர்களே நேரில் பார்த்வர்களாகவும் இப்படிப்பட்ட மஹான்கள் இல்லாமல் போகவில்லை.

கும்பகோணத்தில் இருந்த மௌன ஸ்வாமிகளை நேரில் பார்த்தவர்கள் ஆச்சர்யமாகச் சொல்கிறார்கள். நேரம், காலம் தெரியாமல் அவர் பாட்டுக்கு அப்படியே நிஷ்டையில் இருப்பாராம். கண் திறந்த நிலையில் ஸமாதியில் போனாரானால், எத்தனை மணி, எத்தனை நாள் அவர் ஸமாதி ஸ்திதியலிருந்தாலும் திறந்த கண் கொட்டவே கொட்டாமல் நிலைகுத்திட்டபடி இருக்குமாம். விரலை முழிக்குள்ளே விட்டால் கூடு, இமை மூடாமல் இருக்குமாம். வாயிலே சிறிது ஆஹாரத்தைப் பக்தர்கள் திணிப்பார்கள். அது எதோ கொஞ்சம் உள்ளே போனால் உண்டு. இல்லாவிட்டால் அது வாயில் அப்படியே அப்பிக்கொண்டு, எறும்பெல்லாம் போட்டுப் பிடுங்கி உதடு வீங்கீத்தொங்கும். அதுவும் தெரியாமல் அவர் நிஷ்டையில் இருப்பார். முகத்திலே ஆத்ம ஜ்யோதிஸின் ப்ரகாசம் வீசிக்கொண்டிருக்கும்.

தூக்கத்திலும் மனஸ் இல்லைதானென்றாலும் அப்போது ஆத்ம ஞானமுமில்லாததால் ப்ரகாசத்துக்குப் பதில் வழக்கமாயுள்ள சோபைகூட இல்லாமல், “சொல்லக்கூடாதது” மாதிரிக் கிடக்கிறோம்! ஆத்மாநந்தத்தின் ப்ரதிபலிப்பாக ஸமாதியிலுள்ள மஹான்களுடைய முகத்திலோ ப்ரகாசமான மந்தஹாஸம் தவழ்ந்து கொண்டிருக்கும்.

இரண்டு மூன்று நாள் ஆஹாரப் பற்றும் பசையும் ஒட்டிக் கொண்டிருந்தும் மௌன ஸ்வாமி நிஷ்டை கலையாமலே இருந்தால் மற்றவர்கள் அதை எடுத்துப்போட்டு, வாயை சுத்தி பண்ணி, வேறு ஆஹாரத்தை வைத்துப் பார்ப்பார்களாம்.

வேறு யோகி ச்ரேஷ்டர்களைப் பற்றியும் இப்படியெல்லாம் சொல்கிறார்கள். சர்க்கரையை அவர்கள் நாக்கில் வைத்து அழுத்தினால் கூடத் துளி எச்சில் சுரக்காமல், எத்தனை நாழியானாலும் கரையாமல் அது அப்படியே இருக்குமாம். நம்முடைய இஹலோக ஆசைகளுக்கும் ஆனந்தங்களுக்கும் மரத்துப்போய், போக்ய வஸ்துக்களின் ருசி இழுப்புக்குக் கொஞ்சங்கூட ஆளாகாமல், இதற்கெல்லாம் அப்பாற்பட்ட பேரானந்தத்தை ருசித்துக் கொண்டு ஜீவன் அதிலேயே ஒன்றாகித் திளைத்திருக்க முடியும் என்பதற்கு இதெல்லாம் அத்தாட்சி.

இதேபோலக் காசியில் பாஸ்கராநந்தர் என்பவரை தினந்தினம் நேரில் பார்த்த பல பேரும் ஸாக்ஷி சொல்கிறார்கள்.

நமக்கே நன்றாகத் தெரியும், ரமண ஸ்வாமிகளை. புழுவும் பூச்சியும் போட்டுத் தொடை, ப்ருஷ்டபாகங்களைக் குடைந்தாலும் தெரியாமல் ஆத்மாராமனாக உட்கார்ந்திருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களின் அநுபவத்துக்குப் பெரிய சான்று இவர்களுடைய ஸந்நிதி விசேஷம்தான். இன்றைக்கு* நம் தேசத்தின் பல பாகத்திலிருந்தும் வெளி தேசங்களிலிருந்துங்கூடப் பலபேர் ரமணாச்ரமத்துக்கு வருகிறார்கள். “எத்தனையோ மனச்சஞ்சலங்களோடு போராடிக்கொண்டு போனோம். அவர் முன்னாடி போய் உட்கார்ந்ததும் அத்தனை சஞ்சலமும் எங்கே போச்சு என்று தெரியாமல் மறைந்து ஒரே சாந்தமாய் விட்டது” என்று சொல்கிறார்கள். இதிலே சிலபேர் அப்புறம் நல்ல ஸாதகராகிறார்கள். அப்படி ஆகாமல் ஸம்ஸார வாழ்க்கைக்கே திரும்புபவர்கள் கூட, ஆச்ரமத்தில் மட்டும் தங்கள் மனஸ் ஸம்ஸாரத்தில் ஒட்டாமல் கொஞ்ச நாழியாவது ஒரு அலாதியான அமைதியை அநுபவித்தது என்று சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர் என் மாதிரி லெக்சர் அடிப்பதில்லை. ஏதாவது கேட்டால் மட்டும் சொல்கிறார். ஆனாலும் அவர் எதுவும் பண்ணாமல் சும்மாயிருப்பதே மற்றவர்களுக்கு ஒரு சாந்தியை அளிக்கிறது என்கிறார்கள். தூங்குகிறவனைப் பார்த்தால் இப்படி ஆகிறதோ? ‘டல்’தானே அடிக்கிறது.

ஜீவனுள்ளதாக ஒரு அநுக்ரஹ சக்தி ஞானிகளிடமிருந்து மற்றவர்களுக்குப் பாய்வதாலேயே, இவர்களெல்லாரும் சூன்யமான ஒரு சாந்தத்தில் இருப்பவர்களில்லை, பூர்ணானந்தமான சாந்தத்திலே இருப்பவர்கள் என்று நிரூபணமாகிறது. அநுக்ரஹசக்தியாலே அந்த மாதிரி உயர்ந்த நிலை மற்றவர்களுக்கும் தாத்காலிகமாகவாவது கிடைக்கிறது என்றும் ‘ப்ரூவ்’ ஆகிறது. இதையே விஸ்தாரம் செய்து பார்த்தால், ஈச்வர க்ருபையால் ஜீவனுக்கு சாச்வதமாகவே மனஸ் விலகி ஆத்மாநுபவம் உண்டாக முடியும் என்பதை ஒப்புக்கொள்ள முடிகிறது.

குழந்தைபோல ஒரு வஸ்திரமில்லாமல் அன்று சுக ப்ரஹ்மமும், ஸமீபகாலத்தில் ஸதாசிவ ப்ரஹ்மமும் ஆனந்தமாக காடு, மலை, நதி என்று ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தார்களென்று படிக்கிறோம்.

ஆத்மாநுபவிகள் அடித்த சிலையாக நிர்விகல்ப ஸமாதி நிஷ்டையிலிருக்கும்போதுகூட அவர்கள் உள்ளே ஆனந்தமயமாயிருப்பது அவர்களுடைய வெளித்தோற்றத்திலிருந்தே தெரியும்.


* உரையின் இப்பகுதி ஸ்ரீரமண மஹர்ஷிகள் நம்மிடை ஸ்தூலமாக இருந்த காலத்தில் அருளப்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈச்வர க்ருபையால்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஜீவன் முக்தர்கள்
Next