இதைப் ப்ரக்ருதத்தில் (நடைமுறையில்) நம்முடைய பேச்சு வழக்கிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். என்னுடைய என்று ஒன்றைச் சொன்னால் அப்போது அந்த ஒன்று “நான்” அல்ல என்று ஆகும். “இது என் (னுடைய) தண்டம், இது என் கமண்டலம்” என்று சொன்னால் இந்த தண்டமே நானில்லை (நான் “தண்டமாக” இருந்தாலும் அது வேறு அர்த்தத்தில்! இந்த மூங்கில் கழி நானில்லைதானே?), இந்தக் கமண்டலமே நானில்லை என்றும், இந்தத் தண்ட, கமண்டலங்களைத் தன்னுடையதாகக் கொண்ட வேறே ஒரு ஆஸாமி இருக்கிறானென்றும் நன்றாகத் தெரிகிறதல்லவா? ‘உடைய’ போடுகிற ‘உடையவர்’ வேறு, அவ”ருடைய” னவாகிய உடைமைகள் வேறுதான். “என்னுடைய வீடு”, “என்னுடைய பிள்ளை”, “என்னுடைய பாங்க் டிபாஸிட்” என்றெல்லாம் சொல்லும்போது அதுகளே நீங்கள் அல்ல. அவை உங்கள் “உடையவை” – அதாவது அவை உடைமை, நீங்கள் உடைமையாளர். இதை இங்கிலீஷில் Possesive case என்கிறார்கள். Possession தானே உடைமை?
இப்போது உடம்பு (அதாவது (இந்த்ரியங்கள்) நானில்லை, மனஸ் புத்தி சித்த அஹங்காரம் முதலானவை சேர்ந்த அந்தஃகரணமும் நானில்லை என்பது எப்படி என்று காட்டுகிறேன். “என்னுடைய கை, என்னுடைய கால், என்னுடைய உடம்பு” என்றெல்லாம் அநேக ஸந்தர்பங்களில் சொல்கிறீர்களோ இல்லியோ? “என்னுடைய கண் பார்வை குறைந்து கொண்டே வருகிறது”, “என்னுடைய காது ஆபரேஷனுக்கு அப்புறம் நன்றாய்க் கேட்கிறது” என்றெல்லாம் இந்த்ரியங்களுக்கும் “உடைய” போடுகிறோமல்லவா? “என்னுடைய மனஸ் உனக்குத் தெரியாது”, “என் (னுடைய) புத்தியை ‘ஜோட்’டால் அடிச்சுக்கணும்” என்றெல்லாம் அந்தஃகரணத்தைக் குறித்தும் “உடைய” போட்டுச் சொல்கிறோம். அப்படியானால் இந்த “உடைமை”களுக்கெல்லாம் ஸொந்தக்காரனாக ஒரு “உடையவர்” இருக்கத்தானே வேண்டும்? அந்த உடைமையாளன்தான் “நான்!” “என்னுடைய நான்” என்று வார்த்தை வருமா? வரவே வராது. உடைமையாக இல்லாமல் உடைமையாளனாகவே இருக்கிற அசல்தான் ஆத்மா.
“என்னுடைய ஆத்மா” என்று நாம் பேச்சிலே எப்போதாவது சொன்னால் அது தப்பு. இதே போல இன்னொருத்தருடைய ஆத்மா என்று சொன்னாலும் தப்பு. ‘ஆத்மா’ என்றால் என்னவென்று தெரியாததால் நாம் பண்ணும் தப்பு. ஸாதாரணமாக ஆத்மாவைப்பற்றி எப்போது சொல்கிறோம்? யாராவது ரொம்பவும் கஷ்டப்பட்டால், “பாவம், அந்த ஆத்மா படாதபாடு படுகிறது” என்கிறோம். ஓயாமல் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருப்பவரை, ‘நிம்மதியில்லாத ஆத்மா’ என்கிறோம். ‘காலமானார்’ என்று பேப்பரில் போடும்போது, அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று போடுகிறார்கள். இந்த எல்லா இடத்திலுமே ‘ஆத்மா’ என்ற பத ப்ரயோகம் ஸரியில்லை. ஆத்மா பாடும் படாது, நிம்மதி இல்லாமலும் இருக்காது, அது புதிசாக சாந்தி என்ற ஒன்றை அடைய வேண்டியதுமில்லை. இங்கேயெல்லாம் மாயா ஸம்பந்தத்தால் ஜீவபாவம் பெற்றும் அந்தஃகரணத்தினால் செயல் புரிவதான ஆத்மாபாஸத்தைதான், ஆத்ம சைதன்ய மஹா ஜ்யோதிஸ்ஸின் ஒரு சின்னப் பொறியான ஜீவத்வத்தைத்தான், ஆத்மா என்று தவறாகச் சொல்கிறோம். Ego என்று சொல்கிறார்கள். சித்தம், புத்தி, மனஸ், கர்மேந்த்ரியங்கள், ஞானேந்த்ரியங்கள் இவற்றால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஜீவனுக்கு, இவையே “தான்” என்பதாக ஒரு உணர்வு இருக்கிறது. இதற்குப் பேர் “அஹங்காரம்”. சித்தம், புத்தி, மனஸ் என்று மூன்றோடு இந்த அஹங்காரத்தையும் சேர்த்தே அந்தஃகரணம் என்பது. அகண்டமானது ஆத்மா. அதன் கண்டமான ஆபாஸமே ஜீவபாவம் அடைந்து தன்னையே “நான்” என்று நினைப்பதுதான் அஹங்காரம்; ego என்பது. இந்த ego- வைத்தான் நாம் பெரும்பாலும் ஆத்மா என்ற தப்பாகச் சொல்லிவிடுகிறோம். ஸமுத்ரத்திலே ஒரு சொம்பை அமுக்கி, அந்த சொம்புக்குள் இருக்கிற நாலு ஆழாக்கு ஜலத்தை ஸமுத்ரம் என்கிறது போலத்தான், நாம் தனி ஜீவ அஹங்காரத்தை ஆத்மா என்பதும். சொம்பு ஜலம் ஸமுத்ரத்துடையது என்பது போல இதுவும் ஆத்மாவுடையதுதான். இதுவும் “நானி”ல் வராமல், “என்னுடைய” என்பதில்தான் வரமுடியும். ஆத்மாவுடைய ஆபாஸத்தில் வந்ததுதானே இது?
ஆனால் ஆத்மாவோ “தன்னுடையது” என்று எதைப் பற்றியும் எண்ணுவதில்லை. அதற்குத் “தான்” ஒன்றைத் தான் தெரியுமே தவிர, தனக்கு வெளி வஸ்துவாக, “தன்னுடைய” என்று சொல்லிக்கொள்ளும்படியாக ஏதொன்றும் இருப்பதாகத் தெரியாது. அதனிடமிருந்தே ஜீவனின் ஸர்வஸ்வமும் வந்திருந்தாலும் அது இவற்றோடு ஸம்பந்தப்படுவதில்லை.