ஆசையும் ஆத்மாவைக் குறித்ததே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நாம் அறிந்த ஆனந்தமெல்லாம் சின்ன ஜீவ நானான அஹங்காரம் என்ற Ego -வுடையதே. இது ஆசைப்பூர்த்தியாலேயே ஆனந்தமடைவது. ஆத்மாவோ ஆசையே இல்லாதது. அன்யமான இன்னொன்றைக் குறித்துத்தானே ஆசை ஏற்படமுடியும்? ஆத்மாவுக்கு அன்ய வஸ்து எதுவும் தெரியாதே! ஆனாலும், எப்படி சின்ன ஜீவ நானின் சைதன்யமும் ஆத்ம சைதன்யத்திலிருந்து வந்ததுதானோ அப்படியே இந்த ஆசையும்கூட ஆத்மாவிடம் இதற்குள்ள ஆசையிலிருந்துதான் வந்தது. இப்படிச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். தனியொன்றாக மாத்திரமே இருப்பது ஆத்மா. அதாவது, ஆத்மா அத்வைத வஸ்து. இது எப்படி த்வைத ரீதியில் மட்டுமே வைக்கக்கூடிய ஆசை என்பதற்கு ஆஸ்பதமாயிருக்க முடியும் என்று ஆச்சரியமாயிருக்கலாம். ஆத்மாவைக் கொஞ்சம்கூட அறிந்து கொள்ளாத ஜீவ மனஸ் அதனிடம் எப்படி ஆசை வைக்க முடியும் என்றும் கேட்கலாம்.

ஆனாலும் உபநிஷத்திலே இப்படித்தான் சொல்லியிருக்கிறது. யாஜ்ஞவல்க்ய மஹர்ஷி தம்முடைய பத்னி மைத்ரேயிக்கு உபதேசம் பண்ணுமிடத்தில்* இவ்விஷயம் சொல்கிறார். ‘ஆசை’ என்ற வார்த்தையைச் சொல்லாமல் ‘ப்ரியம்’ என்று சொல்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று ரொம்ப நெருங்கிய ஸம்பந்தமுள்ளவைதான்; ஒன்றேகூட என்று சொல்லிவிடலாம். நாம் ஆசைப்படுகிற வஸ்துக்களிடமெல்லாம் நமக்கு ப்ரியம் இருக்கிறது. நமக்கு அப்ரியமானவற்றிடம் ஆசையில்லை. அவர் (யாஜ்ஞவல்க்யர்) என்ன சொல்கிறாரென்றால்,’பெண்டாடிக்கு அகமுடையானிடம் ப்ரியம் இருக்கிறதென்றால் அவனை முன்னிட்டே அவள் ப்ரியம் வைக்கிறாள் என்று அர்த்தமில்லை. ஆத்மாவை (தன்னை) முன்னிட்டே அவனிடம் இவள் பரியம் வைக்கிறாள். இப்படியேதான் அவன் இவளிடம் ஆசை வைப்பதும். புத்ரபாசம் என்ற ப்ரியம் அந்தப் பிள்ளைகளையே முன்னிட்டு அல்ல, ஆத்மாவை முன்னிட்டுத்தான். வித்தம் (பொருள்) ப்ரியமாயிருப்பதும் இதே காரணத்துக்காகத்தான்’ என்று சொல்லிக்கொண்டு போகிறார். நான் முன்னே சொன்னது நினைவிருக்கலாம்: பொருளாசை கொண்ட ஒருவர் பிள்ளைக்காகப் பொருளை விட்டார், செலவிட்டார், அப்புறம் பிள்ளையை இரண்டாம் பெண்டாட்டிக்காக விட்டார்; தமக்கு உடம்பு ஸரியில்லாதபோது அவளையும் விட்டு தாம் மட்டும் போஷாக்குப் பண்ணிக் கொண்டார்; அப்புறம் அந்த உடம்பிலேயும் ஞானேந்த்ரியத்துக்காகக் கர்மேந்த்ரியத்தை விட்டார் (அதுகளை வெட்டி ஆபேரஷன் பண்ண ஸம்மதித்தார்) என்று சொன்னேன். இதற்கு மேலே மனஸின் ஆனந்தத்துக்காக எல்லா இந்திரியத்தையுமே விட்டு விட்டுக் குடித்துவிட்டுக் கொம்மாளம் போட்டார், மனஸையும் விட்டு விட்டு அவருக்கே இன்னதென்று இனம் தெரியாத உயிரின் ஆனந்தத்துக்காக (உயிர் ஆனந்தப்படுமா, படாதா என்ற கூட அவருக்கத் தெரியாது. அது என்ன என்றும் தெரியாது. ஆனாலும் அது இருந்தால் போதும் என்பதற்காகவே) எத்தனை வருஷமானாலும் மனஸின் வியாபாரம் இல்லாமல், அதாவது மனஸையும் விட்டுவிட்டு, ‘கோமா’வில் தன்னை வைத்திருக்கச் சொன்னார் – என்று கூட்ஸில் வாகன்களைக் கோத்துக்கொண்டு போவது போல நீளமாகச் சொல்லிக்கொண்டு போனேன். ஆழ்ந்து உள்ளே போனால் இந்த ஆசைக்கெல்லாம் ஆஸ்பதமாகும் உயிர்மூலம்தான் ஆத்மா என்பது புரியும். அதனிடம் நமக்கு (அதாவது சைதன்யாபாஸ ஜீவனுக்கு) ப்ரியம், ஆசை இருப்பதும் இதிலிருந்து தெரியும்.

பணத்திடம் ஆசை பணத்துக்காகவே இருந்தால் அந்தப் பணத்தைப் பிள்ளைக்காகச் செலவழிக்கத் தோன்றாது. பிள்ளையாசையும் அவனுக்காகவே இருந்தால் இளையாளுக்காக அவனைத் திரஸ்கரிக்கத் தோன்றாது. இப்படியே இளையாள் ஆசையும் அவள் பொருட்டே இல்லை என்று தெரிகிறது. ஒன்றைவிட ஒன்று அகித ஆசையாக முதலில் பணம், அப்புறம் பிள்ளை, பெண்டாட்டி, தன் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரியங்கள் என்று போய் உயிர்மூலமாயுள்ள தன்னுடைய நிஜத் “தானி”டம்தான் முடிந்த முடிவான ஆசை என்று தெரிகிறது. முடிவு என்றாலும் ஆரம்ப ஆசையிலிருந்து எல்லாமே அதை வைத்துத்தான். சின்ன ‘நானா’ன தன்னுடைய ஸொந்த மனஸின் த்ருப்திக்காகத்தான் பணம், பிள்ளை, பெண்டாட்டி, சரிரம் முதலியவற்றில் ஆசை. இவை ஒவ்வொன்றிடமும் மனஸ் ஒரே மாதிரி த்ருப்திப்படாமல் ஒன்றைவிட இன்னொன்றிடம் அதிக த்ருப்தி காண்பதால்தான் ஒவ்வொன்றாக ஆசையை விட்டுக்கொண்டே போயிற்று. உடம்புக்கு அப்புறம் மனஸ் தன்னிடமே ஆசைப்பட்டது; அதற்காக உடம்பையும்விடத் தயாராயிற்று. ஆனால் முடிவிலே மனஸ் தன்னையும் விலக்கிக்கொண்டு உயிரை மாத்திரம் இருக்கவிடும்போது, அதற்கே ஸரியாக விளங்காவிட்டாலும் அது ஆத்மாவிடம் கொண்டுள்ள ப்ரியத்தால்தான் இப்படிச் செய்கிறது என்று தெரிகிறது.

இப்படி இனம் தெரியாமல் இருக்கிற ப்ரியத்தை இனம் புரிவதாக ஆக்கிக்கொண்டால் இப்போதே மனஸை ஆத்மாவிலே ஒடுக்கி இல்லாமற் பண்ணிக்கொண்டு அத்மாவாக மட்டும் இருப்பதற்கு எண்ணம் வந்துவிடும். ‘ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்’ என்று பகவான் உபதேசம் பண்ணியபடி செய்து பார்க்கத்தோன்றும்.


* ப்ருஹதாரண்யகம் 2.4,5

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'உடைய' அல்ல, உடையவரே !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அஸுரப் படை அழிவு ஆத்ம ஜயமே
Next