இகத்திலேயே மோக்ஷம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதுவா? அதுதான் ‘இரண்டு இல்லை’ என்று சொல்லும் அத்வைதிகளுக்கு ஒன்றாகப் போய்விடும் இரண்டு! இஹம் – பரம் என்பதான இரண்டு. மற்றவர்களுக்கு மோக்ஷமேன்பது பரலோகம்தான். உடம்பை விட்டுவிட்டு இஹ லோகத்தை விட்டுப் போனால்தான் அவர்களுடைய வைகுண்ட – கைலாஸாதி மோக்ஷங்கள். அத்வைதிக்கு அப்படியில்லை. இஹ லோகத்தில், உடம்பிலே உயிரோடு இருக்கிறபோதே அவன் இந்த லோகம் ஒரு மாயா விளையாட்டுத்தான் என்றும், உடம்பு என்பது ‘தான்’ இல்லவே இல்லை என்றும் தெரிந்துகொண்டு விடுகிறான். வெளியிலே மற்றவர் கண்ணிலே இஹ லோகத்தில் அவன் வளைய வந்துகொண்டிருக்கிறாற்போலிருந்தாலும் அவன் ஆத்மாவிலேயே நிலைத்தவனாக அதிலேயே ரமித்தவனாக இருப்பான். அப்புறம் உடம்பு நசிக்கிறபோது நசிக்கும். இவனுக்கு அது ஒன்றும் பொருட்டாக இருக்காது. இவன் ஆத்மாவாகவே இருக்கிறபடி இருந்துகொண்டிருப்பான். ‘உடம்பால்தான் கஷ்டம். உடம்பைப் போக்கிக்கொண்டுவிட்டால் கஷ்டம் போய்விடுமா?’ என்று முன்னே கேட்டு, உடம்பு போய் ப்ரயோஜனமில்லை, கர்மா போகவேண்டும். அதற்கு ‘உடம்பு நான்’ என்பது போகவேண்டும் என்றெல்லாம் பதில்பார்த்தோம். அத்வைத அநுபூதிமானானவன் உடம்பிலிருக்கும்போதே அம்ருதமான (சாவில்லாததான) ஆத்மாவை அநுபவித்துக்கொண்டு மோக்ஷானந்தத்தில் இருக்கிறான். தான் உடம்பிலிருப்பதாக அவனுக்கு எண்ணம் இராது. இப்படி, நம் பார்வையில் உலக வாழ்ககையிலிருப்பவனாகத் தெரியும்போதே அத்வைத முக்தி நிலையிலுள்ளவனைத்தான் ஜீவன் முக்தன், ஜீவன் முக்தன் என்பது.

இப்படி இஹம்-பரம் இரண்டில், இஹத்திலுள்ளபோது கூட ஒருத்தன் ப்ரஹ்ம நிர்வாண நிலை அடைய முடியும் என்பதற்கு பகவான் வாக்கு அங்கீகார முத்ரை குத்தியிருக்கிறது. வேதத்திலேயே புருஷ ஸூக்தாதிகளிலும் உபநிஷத்துக்களிலும், சாவுக்களமான இஹத்திலேயே அம்ருத தத்வமாகிறவர்களைப் பற்றி வருகிறது. இப்படி, வேறே ஒரு லோகத்துக்குப் போகாமல் இங்கேயே அமரமான ஆனந்தத்தில், அதாவது மோக்ஷத்தில் சேர்வதென்பது அத்வைதம் ஒன்றுக்குத்தான் பொருந்தும்.

ஆசாநாசம் அந்த அத்வைத மோக்ஷம் வரை கொண்டு விடுவதை பகவான் சொல்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்ம ஞானமே ஆசா நாசம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  புத்தருக்கு முற்பட்ட கருத்து
Next