புத்தருக்கு முற்பட்ட கருத்து : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘ஆசையால்தான் துக்கம். அது போய்விட்டால் நிர்வாணம்’ என்று புத்தர்தான் முதலில் கண்டுபிடித்துச் சொன்ன மாதிரிக் கொண்டாடிச் சொல்கிறார்கள். கீதையில் பகவான் நன்றாக அற்றுபடி செய்த ஸமாசாரம்தான் இது. ‘ப்ரஹ்ம நிர்வாணம்’ என்று பகவான் சொன்னதில். பூர்ணத்வத்தைக் காட்டும் ப்ரஹ்ம சப்தத்தை நீக்கிவிட்டு, சூன்யம் மாத்திரம் த்வனிக்கும் ‘நிர்வாணம்’ என்பதை புத்தர் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார். யுகாந்தரங்களாக வந்துள்ள நம்முடைய ஆத்மிக கலாசாரமே புத்தருக்குக் கொஞ்சம் முந்தி பிந்திதான் ஒரு ஒழுங்கு ரூபம் பெற்றது என்று திரித்துக் காட்டுவதிலேயே த்ருப்திப்பட்ட வெள்ளைக்கார சரித்ராசிரியர்களும், அவர்களுக்கு வார்ஸாக இருப்பதில் பெருமைப்படும் நம்மவர்களான ஆராய்ச்சியாளர்களுங்கூட புத்தருக்கு அப்புறம் கீதை வந்ததாகச் சொல்லவில்லை.

கீதைக்கும் ரொம்ப முந்தைய உபநிஷத்துக்களிலேயே இவ்விஷயம் சொல்லியிருக்கிறது.

ஜீவ தசையில் மநுஷ்யர்கள் அநுபவிக்கக்கூடிய அதிகப்படி ஆனந்தம், அதைவிட உயர்ந்ததான இரண்டு தினுஸு கந்தர்வர்களின் ஆனந்தம், அதையும்விட உயர்ந்த பித்ருக்களின் ஆனந்தம், அதற்கும் மேலான மூன்று தினுஸு தேவர்களின் ஆனந்தம், இதைவிடவும் மேம்பட்ட இந்த்ரனின் ஆனந்தம், இந்த்ர ஆனந்தத்துக்கும் உசத்தியான ப்ருஹஸ்பதியின் ஆனந்தம், அப்புறம் அதற்கும் மேலான ப்ரஜாபதியின் ஆனந்தம், ப்ரஜாபதியின் ஆனந்தத்தைவிட உசந்த ப்ரம்மாவின் ஆனந்தம் என்று ஒன்றுக்கு மேல் ஒன்று மேம்பட்டதான ஆனந்தங்களை ஒரு ஸாதகன் அநுபவித்துக் கொண்டே போவது பற்றி தைத்திரீய உபநிஷத்தின் ஆனந்தவல்லியில் சொல்லியிருக்கிறது. முன்னேயே இதைப் பற்றிக் கொஞ்சம் சொன்னேன். த்வைதத்திலிருந்து அத்வைதத்துக்குப் போகும்போது நடுவேயுள்ள அநேக நிலைகளில் இந்த ஆனந்தங்கள் ஏற்படுவதாக வைத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஆனந்தத்தைப் பற்றி ஸாதகனின் லக்ஷணத்தைத் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறது. அவன் ‘ச்ரோத்ரிய’களாகவும், ‘அகாமஹத’னாகவும் இருக்கவேண்டுமென்று லக்ஷணம் கொடுத்திருக்கிறது. உயர்குடிப் பிறப்பு, நல்ல ஸம்ஸ்காரங்களைப் பெறுவது, உத்தமமான வித்யா ஞானம் எல்லாம் சேர்ந்திருப்பவன்தான் ‘ச்ரோத்ரியன்’. இப்படி இருந்தால் மட்டும் போதாது, ‘அகாமஹத’னாகவும் அவன் இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. ‘காமஹதன்’ என்றால் ஆசையால் வதைக்கப்படுபவன். முதலில் ‘அ’ சேர்த்து ‘அகாமஹதன்’ என்று சொன்னால் ஆசையால் வதைக்கப்படாதவன் என்று அர்த்தம். அதாவது, ஆசை நீங்கியவனுக்குத்தான் ஒன்றுக்கு மேல் ஒன்றான ஆனந்தங்கள் லபித்து, முடிவில் ப்ரஹ்மானந்தம் ஸித்திக்கும் என்பது திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் இவன் ஒவ்வொரு ஆனந்தத்தையும் விட்டுவிட்டு மேலே மேலேயுள்ள ஆனந்தங்களுக்கு ஏறி, முடிவான ஆத்மானந்தம் வரை போகவே மாட்டான்.

உபநிஷத்துக்களில் ஆத்மஞானிகளை ‘வீதராகர்’ கள் என்று வர்ணித்திருக்கிறது. ‘ஆசை அழிபட்டவர்கள்’ என்றுஅர்த்தம். ‘கர்மத்தினாலோ, ப்ரஜைகளாலோ, தனத்தாலோ அமர தத்வத்தைப் பெறமுடியாது; த்யாகத்தினாலே பலர் அதைப் பெற்றிருக்கிறார்கள்’ 1 என்பது போல உபநிஷத்துக்களில் அநேக இடங்களில் ஆசா நாசமே ஆத்மா விடுதலைக்கு வழியாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

ரிஷிகள் சொன்னதைத்தான் க்ருஷ்ணர் திரட்டி எடுத்து ஸாரத்தைச் சொன்னார். ‘அந்த இடையன் உபநிஷத் பசுக்களிலிருந்து கீதைப் பாலைக் கறந்தான்; அர்ஜுனன் என்ற கன்றை முன்னிட்டுக் கொண்டு ஸத்புத்தி உள்ள எல்லாருக்காகவும் இப்படிப் பால் கரந்தான்’ என்று (கீதையில்) மங்கள ச்லோகம்!

ஆசையை அடக்கித் தன்னுள்ளே அடங்கும்படி கீதையில் உபதேசித்திருக்கிறார்.


1மஹாநாராயாணோபநிஷத் 12.3.4

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is இகத்திலேயே மோக்ஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனம் நின்றபின்
Next