மனம் நின்றபின் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆசை லேசில் கட்டுப்படாததுதான். ‘காமரூபம் துராஸதம்’ என்கிறார் —  துராஸதம் என்றால் கட்டுப்படாதது. ‘ஆனாலும் நீ மஹாபாஹு’ என்று அர்ஜுனனைப் பார்த்துத் தட்டிக்கொடுப்பதுபோல சொல்கிறார். ‘மஹாபாஹு’ என்றால் ‘பெருந்தோளன்’. கௌரவ-பாண்டவ யுத்தத்தையே allegorical-ஆக கேட்டதற்கும் நல்லதற்கும் நடந்த யுத்தமாகச் சொன்னால் — அதாவது ஆரம்பத்தில் சொன்ன தேவாஸுர யுத்தமாக வைத்துக் கொண்டால் — பெருந்தோளன் என்பது குறிப்பிடும் தோள்வலி (புஜபலம்) ஸாதகனின் ஸங்கல்ப பலத்தையே காட்டுவது. எத்தனை வழுக்கிவிட்டாலும், விடாமல் வழுக்கு மரத்தில் ஏறித்தான் தீர்வது என்று உறுதிப்படுத்திக்கொண்டு, வெளியிலே மறுபடி மறுபடிச் சிதறி ஓடுகிற மனஸை மனந்தளராமல் இழுத்து இழுத்துப் பிடித்து நிறுத்துகிற அப்யாஸத்தில் உறுதியாயிருப்பதுதான் இங்கே புஜபலம்.

மனஸ் நின்றுபோய் விட்டால் அப்புறம் ஆத்மா மட்டுமே பிரகாசிக்க ஆரம்பித்துவிடும். மனஸினால்தானே இந்த ப்ரபஞ்ச அநுபவம் அத்தனையும் நமக்கு வருகின்றன? இந்த அநுபவங்கள் அத்தனையும் மனமடங்கினால் அற்றுபோய்விடும். இந்த அநுபவங்களினால்தானே நமக்கு லோக வாழ்க்கையில் உள்ள எல்லாக் கஷ்டமும், பயமும் உண்டாவது? அவை எல்லாம் போய்விடும். இது அத்தனையிலும் நம்மை ஏவிவிட்ட ஆசைப் பிசாசு மனஸில் தோன்றுவதேயாதலால், மனஸ் நின்றுபோனவுடன் அந்தப் பிசாசும் அடங்கிவிடும். அப்புறம் பரம சாந்தம்தான். தேஹ, இந்த்ரிய, மநோ, புத்திகளின் கட்டுக்கள், கர்மாவின் கட்டுக்கள், உறவு சொத்து முதலான கட்டுக்கள், ஸம்ஸார பந்தம் எல்லாம் அறுந்து விடுபட்டுவிட்டு ஸ்வதந்த்ர ஆனந்தம். இதுதான் ஸமாதி நிலையின் அநுபவம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is புத்தருக்கு முற்பட்ட கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மெய்யறிவு ஆத்ம ஞானமே
Next