மெய்யறிவு ஆத்ம ஞானமே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த ஆனந்தம் இருக்கிறதென்றால் அதை அநுபவிக்கிற ஆஸாமியும் ஒருத்தன் இருந்தாக வேண்டும். ஆனால், அவன் ஆனந்தத்துக்கு வேறாக இருந்துகொண்டு அதை அநுபவிப்பவன் என்றால், அப்போது த்வைதம் வந்துவிடும். த்வைதம் வந்துவிட்டால் பயந்தான். அப்புறம் ஆனந்தம் எப்படி இருக்க முடியும்? ஆனபடியால் அந்த ஆஸாமி தானே ஆனந்த ஸ்வரூபியாய் இருக்கவேண்டும்.

அந்த ஆஸாமியைத்தான் ஆத்மா, ஆத்மா என்று சொல்வது. ஆத்மா என்றால் “தான்”.

தான் என்று இதுவரைக்கும் மனஸை நினைத்துக் கொண்டிருந்துவிட்டோம். இதன் அநுபவங்களையே நமது ஸொந்த அநுபவமாக நினைத்தோம். இதுகளைப் பெறுவதில் தான் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கிறாற்போல் ஆனந்தத்துக்குப் பதில் துக்க பரம்பரையை ஸம்பாதித்துக்கொண்டோம்.

இதிலே பெரிய துக்கம் நிஜத்தைத் தெரிந்துகொள்ளாமல் பொய்யையே நிஜமாக நினைத்ததுதான்.

மனஸை “தான்” என்று, அதாவது அதுதான் நம் நிஜமான ஸ்வரூபமென்று நினைத்தது தப்பு அல்லவா? பொய்யல்லவா? அந்த மனஸ் அற்றுப்போய் விடுவது என்றும் ஒரு நிலை இருக்கிறதே! தூக்கத்தில், க்ளோரோஃபாரத்தில், ஸமாதி நிலையில் மனஸ் அற்றுத்தானே போய்விடுகிறது? அப்போதும் நாம், அதாவது, “தான்” என்னும் ஆத்மா இருக்கிறதே! ஆகையால் மனஸை நாமாக நினைத்து தப்பு, அது பொய் என்று நிச்சயமாகத் தெரிகிறது. ஆத்மாவை அறிவது — அதாவது ஆத்ம ஞானம் — தான் மெய்யை அறிவது. நாம் இதுவரை “நாமாக” நினைத்த மனஸ் பொய்யென்று தெரிந்தபின், நிஜ “நாமா”ன ஆத்மாவைத் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே நாம் செய்யவேண்டியது?

ஏதேதோ தெரிந்து கொள்கிறோம் – ஹிஸ்டரி, ஜாகரஃபி, அடாமிக் ஸயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் என்று என்னென்னவோ தெரிந்துகொள்கிறோம். பலவிதமான உண்மைகளைத் தெரிந்துகொள்வதுதான் மநுஷ்யனாகப் பிறந்ததற்குப் பயன். இப்படி அநேக கலைகள், விஞ்ஞானங்கள் தெரிந்தகொள்கிறோம். நமக்கு இன்பத்தைத் தரும் உபகரணங்களை உண்டாக்கிக் கொள்வதற்காகவும் இப்படி அறிவினால் “ஸர்ச்” (தேடுவது) , “ரிஸர்ச்” (ஆராய்ச்சி செய்வது) எல்லாம் செய்கிறோம். ஆனால் கடைசியில் பார்த்தால், இவற்றால் நம்மை மஹா புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டிருக்கிற நமக்கு ரொம்பவும் அவமானமாக, நம் அத்தனை புத்திசாலித்தனத்தையும் அசடாக்குவதாக ஒன்று தெரிகிறது. அதாவது உண்மை, உண்மை என்று நினைத்து நாம் தேடிப்போன எல்லாவற்றையும் எந்த மனஸினால் தேடினோமோ, எந்த மனஸின் திருப்திக்காகத் தேடினோமோ, எந்த மனஸினால் உண்மைகள் என்று அவற்றைத் தெரிந்துகொண்டோமோ அந்த மனஸே உண்மையில்லை, அது உண்மையான “நாம்” இல்லை என்று தெரிகிறது. (மனஸ் என்பதை இங்கே புத்தியையும் உள்ளடக்கியதான அந்தஃகரணம் என்ற அர்த்தத்திலேயே சொல்லிக்கொண்டு போகிறேன்.) நம்முடைய ப்ரமாதமான ஸர்ச், ரிஸர்ச்சகள் நம்முடைய ஸந்தோஷத்துக்கான உபகரணங்களைப் பெருக்கி கொள்வதிலே முடிகிறது என்பதும் இப்போது அசட்டுத்தனமாகிறது. ஏனென்றால் இங்கே நாம் சொல்கிற ஸந்தோஷமும் மனஸின் ஸந்தோஷம்தானே? நிஜமாக நாமாக இல்லாத ஒன்றின் ஸந்தோஷத்துக்கான உபகரணங்களை உண்டாக்கி கொள்வதற்காகவே நாம் இத்தனை பாடுபடுகிறோம் என்றால் அது கொஞ்சங்கூட புத்திசாலித்தனமாகாததுதானே? நிஜ ஆஸாமியைத் தெரிந்துகொள்ளாமல், அவனுக்குச் செய்யவேண்டியதைச் செய்யாமல், வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறவனை நிஜ ஆஸாமியாக நினைத்துக்கொண்டு அவனுடைய அநுபோகங்களுக்காக நாம் ஸதா ஸர்வதா எதையாவது பண்ணிக்கொண்டு உபத்ரவப்படுகிறோமென்றால் இது ரொம்பவும் துக்கப்பட வேண்டிய விஷயம்தானே? பொய்யைப் போஷிக்கவா இந்தப் பாடு? இப்படி ஏமாந்தல்லவா போயிருக்கிறோம்? இனிமேலாவது மெய்யறிவு பெறவேண்டாமா?

இதைத்தான் நான், “ஆத்மாவை எதற்காகத்தெரிந்து கொள்வேண்டும்?” என்று கேட்ட ஒருத்தருக்குப் பதிலாகச் சொன்னேன். நம்முடைய லோக த்ருஷ்டியிலே பார்த்தால் அவரை ‘அத்ருஷ்டசாலி’ என்று சொல்லவேண்டும். ஸுகஜீவி. எந்தப் பிக்கல் பிடுங்கலும் அவருக்கு இல்லை. அதனால் “நீங்கள் என்னவோ அத்வைதம், ஆத்ம சாந்தி என்று உபந்யாஸம் பண்ணுகிறீர்கள். ‘அவற்றைப் பெற்றால்தான் ஸுகமுண்டு, இல்லாவிட்டால் ப்ரபஞ்சத்தின் துக்கத்துக்குத்தான் ஆளாகவேண்டும்’ என்கிறீர்கள். எனக்கென்னவோ ப்ரபஞ்சம் அப்படியொன்றும் துக்கமாகத் தெரியவில்லை. ஜீவனம் ஸெளக்யமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று இநத் வாழ்கையிலேயே இருந்தவிட்டாலென்ன? எதற்காக வாயைக் கட்டுகிறேன், மனஸைக் கட்டுகிறேன் என்றெல்லாம் வேண்டாத ச்ரமங்களை இழுத்துவிட்டுக்கொள்ள சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இதையே ஒரு மாதிரி மறைமுகமாகக் கேட்டார்.

அப்போது நான் அவரிடம், “நீங்கள் எவரையோ உபசாரம் பண்ணிப் போஷித்து வைத்துக்கொண்டிருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அவரால் உங்களுக்கு எதோ ஸந்தோஷங்கள் கிடைக்கிறதென்பதற்காக இப்படிப் பண்ணுகிறீர்கள். ஆனால் அப்புறம் தெரிகிறது, அவரை நீங்கள் யாரென்று நினைத்து உபசாரம் பண்ணினீர்களோ அவரில்லை இந்த மநுஷ்யர், அவர் மாதிரி வேஷம் போட்ட போலி ஆஸாமி என்று. அவர் தருகிற ஸந்தோஷமும் நீங்கள் நினைக்கிறமாதிரி நீடித்து நிற்கப் போகிறதில்லை என்றும் தெரிகிறது. அப்போது எத்தனை துக்கமாக இருக்கும்? அந்த மாதிரிதான் நம்முடைய நிஜஸ்வரூபமென்று மாயாவேஷ மனஸை நினைத்து அதைப் போஷிப்பதும், அது தருகிற ஸெளக்யத்தை ஆத்மானந்தமென்று நினைப்பதும்” என்று சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனம் நின்றபின்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மன வாழ்க்கையின் குறைபாடு
Next