மன வாழ்க்கையின் குறைபாடு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸந்தோஷமாக இருப்பதாகச் சொல்வது மனஸின் அநுபவங்களை வைத்துத்தான். ஆனால் ஸந்தோஷாநுபவம் பெறுகிற அந்த மனஸ்தான் நாமா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டாமா? எதெதையோ தெரிந்து கொள்வதிலும் எதெதையோ ஆராய்ச்சி பண்ணி உண்மைகளைக் கண்டுபிடிபப்திலும்தான் மநுஷ்ய ஜீவனின் பெருமையே இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறோம். அணுவிலிருந்து galaxy வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் உண்மைகளை தினந்தினமும் தெரிந்து கொண்டு கர்வப்படுகிறோம். இப்படித் தெரிந்து கொள்கிற நாம் வாஸ்தவத்தில் யார் என்று ஆராய்ச்சி பண்ணித் தெரிந்து கொள்ளவேண்டாமா? தன்னுடைய ஸத்யமான ஸ்திதியையே தெரிந்துகொள்ளாமல் மற்றவற்றைத் தெரிந்துகொண்டு, “ஸயன்ஸால் ஸத்யங்களைத் தெரிந்துகொள்கிறோமாக்கும்” என்று மார்தட்டிக் கொள்வது பரிஹாஸத்துக்கு இடமானதல்லவா? ஸத்ய ஸத்யமானதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும், அறிகின்ற அறிவை அறிய வேண்டும் என்றால் ஆத்ம சாஸ்த்ரத்தை அப்யஸிக்க வேண்டும்.

ஆத்ம சாஸ்த்ரங்களை இப்போதே தீவ்ரமாக அப்யஸிப்பதற்கில்லாத பெரும்பாலாருங்கூட, மெய்யான ஆத்மாவை அடியோடு மறந்து பொய்யான மனஸுக்காகவே ஸதாவும் பாடுபட்டுக் கொண்டிருப்பதாக இருக்கப்படாது. அப்படியிருந்தால் நாம் ஏமாளி என்று ஆகிவிடும். அதனால்தான், எப்படிப்பட்டவராயிருந்தாலும், தினம் ஒரு அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷமாவது, ‘நம்முடைய கார்யம், எண்ணம் லோகம் முதலான ஸகலமும் பொய்யாகப் போய்விடும் ஒரு பெரிய சாந்த பதம் ஆத்மா ஆத்மா என்று இருக்கிறது’ என்பதாக நினைப்பூட்டிக்கொண்டு, அந்த அஞ்சு பத்து நிமிஷம் சாந்தமாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது.

மனஸைக் கொண்டு அநுபவங்களைப் பெறுகிற லோக வாழ்க்கை ஒருத்தருக்கு இன்றுவரை ஸெளக்யமாக ஸந்தோஷமாக இருந்துவருகிறது என்பதற்காக அதுவே போதும் என்று இருந்து விடுவதற்கில்லை, நாளைக்கே இந்த ஸந்தோஷம் போய்விடலாம். ஏதாவது வ்யாதி வக்கை வரலாம். ஸொத்து திருட்டுப் போகலாம். ப்ரியமானவர்கள் செத்துப் போகலாம். மனஸுக்கு ஆசை, வெறி, கோபம், பயம் ,துக்கம் முதலானவை ஏற்படுமாறு எந்த நிமிஷத்தில் வேண்டுமானாலும் ஏதாவது நடந்துவிடலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மெய்யறிவு ஆத்ம ஞானமே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  போகவேண்டியது தேஹமல்ல மனமே
Next