போகவேண்டியது தேஹமல்ல; மனமே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதனால் இப்படியெல்லாமில்லாமல், சாச்வதமாய் ஸெனக்யத்துடன் சாந்தத்துடன் இருக்க வேண்டுமானால் அதற்கு மனமாயை விலகி ஆத்ம ஸத்யத்தில் நிலைத்து நின்றால்தான் முடியும். அந்த நிஜ நானை அடைந்தபோது தான் ‘தேஹம் நான்’ என்ற பாவம் போகும். அப்போது தேஹத்துக்கு வ்யாதி வக்கை வந்தாலும் பாதிப்பு இருக்காது.

‘தேஹத்தால்தானே பல தினுஸான கஷ்டங்கள்? தேஹத்தைப் போக்கிக்கொண்டு விடலாம்’ என்று ‘ஸூயிஸைட்’ பண்ணிக்கொள்கிறவர்களை முன்னே குறிப்பிட்டேன். இந்த தேஹம் போனாலும் உயிர் வெவ்வேறு உடம்புகளை, பேயுடம்பு, அப்புறம் ஏதோ ஒரு ஜன்மமாக ஸ்தூல உடம்பு என்று எடுத்துக்கொண்டேதான் போகும். அந்த உடம்புகளாலும் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்று சொன்னேன். ஆகையால் கஷ்டம் போக சாவு ஸொல்யூஷன் இல்லை என்றேன். ஸொல்யூஷன் என்னென்றால் உடம்பு போவதில்லை; உடம்பில் ‘நான்’ என்றிருக்கிற அபிமானம்தான் போகவேண்டும்; உடம்பை “நானாக” நினைக்கிற அஞ்ஞானம்தான் போகவேண்டும் என்றேன். அது மட்டும் போதாது. மனஸை “நான்” என்று நினைப்பதும் போகவேண்டும். தேஹத்தை “நான்” என்று நினைப்பதுபோய், அப்படி நினைக்கிற மனஸ்தான் “நான்” என்று நினைத்தால் அதுவும் பொய்யை மெய்யாக எடுத்துக் கொண்டுவிடுவதுதான். “நான்” என்ற நினைப்பே போக வேண்டும். நினைப்பு இருந்தால் நினைக்கிற மனஸ், நினைக்கப்படும் “நான்” என்று இரண்டு இருப்பதாக அர்த்தம். இரண்டு இருப்பது பயஹேது. அதனால் நினைப்பு போய், நினைக்கிற மனஸ் போய், நானாக மட்டுமே இருக்கவேண்டும். அதுதான் ஆத்ம ஸாக்ஷாத்காரம். அதுதான் நம் நிஜ நிலை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மன வாழ்க்கையின் குறைபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பிறவி, முக்தி குறித்த கொள்கைகள்
Next