பிறவி, முக்தி குறித்த கொள்கைகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்த நிஜமான ‘நானி’லே ஜீவபாவம், தனி மனஸ், உடம்பு முதலியன எப்படி வந்தன என்று கேள்வி கேட்கலாம். மாயாசக்தியைக் கொண்டுதான் ஆத்மா (அதாவது, நிஜமான ‘நாம்’) இப்படி ஜீவனாக ஒரு மனஸோடு, உடம்போடு தோன்றுகிறது என்று பதில் சொன்னால், எதற்காக ஆத்மா இப்படி மாயையோடு சேரவேண்டுமென்று கேள்வி பிறக்கிறது. இதற்கு ‘கன்வின்ஸிங்’காக ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. ‘ஆனந்த பூர்ணமாக, தான் மட்டுமாக இருந்த ப்ரஹ்மம் எதற்காக மாயை பண்ணி இப்படி அபூர்ணமாகவேண்டும்?’ என்று கேட்டால், ‘என்னவோ நமக்குப் புரியாத லீலை’ என்றுதான் பதில் சொல்லவேண்டியிருக்கிறது. அதற்கு மேலே சொல்லத் தெரியவில்லை. பூர்ணமான தானே அபூர்ணமாகக் குறைந்து நிறைந்த தன்னைத் தேடிப் பிடிப்பதற்காக் கண்ணாமூச்சி ஆடிக்கொள்கிற விளையாட்டு இது. எதற்காக ப்ரஹ்மம் இப்படி விளையாடணும் என்று கேட்டால் பதில் தெரியவில்லை.

“காரணம் இல்லாததுதானே விளையாட்டு? ஸரி, தப்பு, தர்க்கம் எல்லாம் வராததுதானே விளையாட்டு? ‘ஏதோ விளையாட்டுக்குச் சொன்னேன்’, ‘இதைப் பெரிசா நினைக்காம விளையாட்டுன்னு விட்டுடு’ என்றெல்லாம் இந்த அர்தத்தில்தானே சொல்கிறோம்? இப்படி ப்ரஹ்மத்தில் காரணமில்லாமல் விளையாட்டு, லீலை தோன்றுகிறது என்றால், ‘அதற்கு என்ன காரணம்?’ என்று கேட்பதில் அர்த்தமே இல்லையே!” என்று ஒரே போடாகப் போட்டு நம்மைப் பேசவிடாமல் பண்ணிவிடுகிறார்கள்.

இந்த ஜன்மாவில் ஏற்பட்டிருக்கிற இந்த உடம்பு பூர்வ ஜன்ம கர்மாவினால் வந்தது என்று பதில் சொல்லி விடலாம். போன ஜன்மா, அதற்கும் முந்தின ஜன்மா, இன்னும் இப்படியே பூர்வஜன்மங்கள் என்று போனால் ஆதியிலே எப்படி உடம்பு வந்தது என்றால், அப்போது கர்மாவினால் வந்திருக்க முடியாது. அப்படியிருந்தால், இம்மாதிரி கர்மா செய்வதற்கு அதற்கும் முந்தி ஒரு பூர்வ ஜன்மமும், உடம்பும் இருந்திருக்கவேண்டும். இப்படி இருந்தால், அது ஆதிஜன்மாவே இல்லை.

ஜன்மா உள்ளது ஜீவன். ஜன்மாவே இல்லாத நிலையிலேயே இருந்திருந்தால் ஒரே ஆத்மாதான் இருந்திருக்கும். ஆத்மாவுக்கு ஜன்மா கிடையாது. ஆனாலும் அது ஜன்மா எடுக்கும் ஜீவனாக ஆகியிருக்கிறது.

ஒன்றுக்கொன்று முரண் மாதிரி, ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ஆரம்பத்தில், ‘ப்ரஹ்மத்திடமிருந்துதான் ஜன்மம் ஏற்படுகிறது’ என்றும்1, பிற்பாடு ‘ஜன்மா என்கிறது சரீரத்தால் ஏற்பட்ட பாவனைதானே தவிர நிஜமில்லை; ஆத்மா ஸ்ருஷ்டிக்கப்படாமல் நித்யமாயிருப்பது’ என்றும்2 இருக்கிறது. பல ஜீவாத்மாக்கள் இருப்பதாகச் சொல்கிற த்வைதிகள் இந்த முரண்பாட்டை ‘ஸால்வ்’ செய்துகொள்ள முடியாது. அவர்கள், ‘ஆத்மா ஸ்ருஷ்டியற்ற நித்யப் பொருள்’ என்பது ஜீவாத்மாவைக் குறிப்பதாகச் கொண்டால், அத்ற்கு ப்ரஹ்மத்திடமிருந்து ஜன்மா ஏற்படுவதை ஒப்புக்கொள்ள முடியாது. நித்யமான, ஸ்ருஷ்டியில்லாத ஒன்றுக்கு இன்னொன்றிடமிருந்து எப்படி ஜன்மா ஏற்படமுடியும்? அத்வைதத்தில், லோக வ்யாவஹாரத்துக்காகத்தான் ‘ஜீவாத்மா’ என்று ஒன்றைச் சொல்கிறோமே தவிர, வாஸ்தவத்தில் ஜீவாத்மா பரமாத்மா என்று இரண்டு ஆத்மாக்களோ, இப்படி அநேகம் ஜீவாத்மாக்களோ இருப்பதாகக் கொள்வதில்லை. நம் கொள்கை, இருப்பது ஒரே ஆத்மா என்பதுதான். அதையேதான் ப்ரஹ்மம் என்பதும். அது ஸ்ருஷ்டியற்ற நித்யவஸ்து என்று ப்ரஹ்மஸூத்ரம் சொல்வதை நாம் அப்படியே ஒப்புக்கொள்கிறோம். இந்த ஒரே ஆத்மாவில் பல ஜீவர்களுடையவும் ஜகத்தினுடையவும் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஜீவத்தோற்றம் அதிலிருந்து ஏற்பட்டுள்ளதால் ப்ரஹ்மமாகிய ஆத்மாவிடமிருந்தே ஜன்மம் என்று சொல்லியருப்பதையும் நாம் ஏற்க முடிகிறது. ‘எதற்காக, எப்போது ஏன் இப்படி ஏற்பட்டு அப்புறம் கர்மாவினால் ஜன்மாந்தரங்கள் நடக்க வேண்டும்?’ என்றால்தான் புரியமாட்டேனென்கிறது.

இந்தப் புதிர்களை யோசித்தால் தலை சுற்றுகிறது. ஆதியிலே ஜன்மா எடுக்க ஜீவன் என்று ஒன்று இங்கே இருந்தது, அது எப்படி உண்டாயிற்று என்று கேட்டால், ஜீவன் எப்படி உண்டாயிற்று என்று கேட்காதே. அது உண்டாவதேயில்லை. பரமாத்மா என்கிற அநாதி தத்வமே தான் அது’ என்கிறார்கள். இன்னொரு விதமாகச் சொல்லும் போது மாயையானது ஆத்மாவிலே ஜீவன் என்ற பாவத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்கிறார்கள். ‘அப்படியானால் இந்த மாயை எப்போது தோன்றிற்று?” என்று கேட்டால் ‘ ‘எப்போது’ என்று மாயையைப்பற்றிக் கேட்பதே தப்பு ‘எப்போது’ என்பது காலத்தைக் குறிப்பது. மாயையால்தான் காலம் என்ற ஒன்றே காலாதீதமான ஆத்மாவில் ஏற்பட்டிருக்கிறது. காலமே மாயையால் உண்டாக்கியுள்ளபோது, மாயை எந்தக் காலத்தில் தோன்றினது என்று கேட்டால் என்ன அர்த்தம்?” என்று வாயை அடைத்து விடுகிறார்கள்.

ஆறுதலாகவும் ஒன்று அவர்கள் சொல்வதில் தெரிகிறது. ஜீவன்தான் அநாதியோ, மாயைதான் அநாதியோ அது எப்படியானாலும் இந்த இரண்டுமே அநாதியாக வேண்டுமானால் இருக்க முடியுமே தவிர ஆனந்தம் இல்லை என்று தெரிகிறது. அதாவது முடிவில்லாதது இல்லை. முடிவுள்ளதுதான் என்று தெரிகிறது. ஆதி, அந்தம் என்று இரண்டு. ஆதி தோற்றம், அந்தம் முடிவு. ஆதியந்தமில்லாமல் அநாதியாய், அனந்தமாயிருப்பது பரமாத்மா மட்டுந்தான். மாயைக்கு அந்தம் உண்டு. ஞானம் வந்தவுடன் அது இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். அப்போது ஜீவாத்மாவும் பரமாத்மாவில் அந்தம் அடைந்து அதுவே ஆகிவிடும். அப்புறம் ஜன்மா இல்லை, உடம்பு இல்லை; கஷ்டங்கள், த்வைதத்தால் ஏற்படும் ஆசை, பயம் முதலான எதுவும் இல்லை.

ஜீவாத்மா என்று தனியாய் ஒன்று அநாதியாயிருபப்து போலவே அனந்தமாகவும் இருக்கிறது என்பது த்வைதிகள் கட்சி. சாச்வதமாக ஜீவாத்மா என்று ஒன்றாகவே ஈச்வர ஸந்நிதானத்தில் ஆனந்தமாயிருப்பதுதான் மோக்ஷமான முடிவு நிலை; ஜனன – மரணம், மறுபடி சரீரம், ஸம்ஸாரம் என்பதற்கெல்லாம் அதுவே முடிவு என்கிறார்கள். அப்படியிருக்கும்போது அந்த ஈச்வரனே தங்களுக்குள்ளே அந்தர்யாமியாக இருப்பதை ஜீவாத்மாக்கள் தெரிந்துகொண்டு அதனால் ஜீவனுக்குள்ள பிடுங்கல் இல்லாமல் ஈச்வரனின் ஞான, ஆனந்தங்களைத் தாங்களும் அநுபவித்துக் கொண்டிருப்பார்கள் என்று த்வைதத்திலேயே ஒரு ‘மாடிஃபிகேஷன்’ செய்து விசிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். அந்தர்யாமி என்பதோடு நிற்காமல் இதற்கு மேலே இன்னம் கொஞ்சம் அத்வதைமாகவும் சிலர்3 அபிப்ராயப்படுகிறார்கள். (இவர்கள்) என்ன சொல்கிறார்களென்றால், ஸூர்ய வெளிச்சத்தில் நக்ஷத்திரங்கள் இருக்கிறாற்போல, மோட்சத்திலே ஈச்வர ஸந்நிதானத்தில் ஜீவாத்மாக்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஸூர்ய வெளிச்சத்தில் நக்ஷத்ரம் இருப்பது கொஞ்சமாவது தெரிகிறதோ? இல்லையல்லவா? அப்படியானால் நட்சத்ரங்கள் அப்போது அழிந்தா போய்விட்டன? அப்படியும் இல்லை. இதே மாதிரிதான் பரமாத்ம தத்வத்திலே ஜீவாத்ம தத்வம் தன்னுடைய தனித்தன்மை அப்படியே மங்கி அதன் ப்ரகாசத்திலேயே முழுகிக் கிடக்கிறது என்கிறார்கள். ‘முக்தியிலும் மும்முதல் உண்டு’ என்பதாக மோட்ச நிலையிலும் பசு (ஜீவாத்மா), பதி (பரமாத்மா), பாசம் (ஜகத்) இருக்கிறது என்பவர்களே அத்வைத slant (சார்பு) கொடுத்தும் இப்படிச் சொல்கிறார்கள். மோட்சத்திலே பரமாத்மாவோடு ஸம்பந்தம் எப்படி இருந்தாலும் ஸரி, இதைப்பற்றி ஸித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று எத்தனைமாறுபட்டாலும் ஸரி, அந்த ஸ்திதியை அடைந்த பிற்பாடு மறுபடி ஸம்ஸாரமில்லை, ஜன்மா இல்லை என்பதை எல்லாரும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.

இதைக் கொண்டே நாம் ஆறுதல் அடைவோம், த்ருப்திப்படுவோம்.


1 1-1-2
2 2-3-16, 17
3 சைவ ஸித்தந்தங்களில் சிலவற்றைப் பின்பற்றுவோர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is போகவேண்டியது தேஹமல்ல மனமே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தேவை விடுதலைக்கு முயற்சியே !
Next