ஆனாலும் நெடுங்காலமாக நடைமுறையில் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு வழங்கி வருகிறது. நடைமுறை லோக நாடகத்தை வைத்து இப்படிப்பட்ட பாகுபாடு ஏற்பட்டிருக்கிறது.
லோகத்திலே என்ன பார்க்கிறோம்? ஜட லோகங்களும் ப்ரக்ருதியும் பலவிதமாகத் தொழில்படுகிறது. ஸூர்யனைச் சுற்றி க்ரஹங்கள் வருகின்றன. உலகத்தைச் சுற்றிச் சந்த்ரன் வருகிறது. இதனால் பகல் இரவு, அயனங்கள், பருவக் காற்றுகள் முதலியன உண்டாகின்றன. ஸூர்ய சக்தியில் பயிர் பச்சை வளர்கின்றன. இப்படிப் பல சேர்ந்து மநுஷ்ய ஜீவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதாக உலகத்தை ஆக்கித் தருகின்றன. மநுஷ்யர்களிலும் மற்ற ஜீவ ஜந்துக்களிலும் ஸ்த்ரீ-புருஷர்கள் சேர்ந்து இன வ்ருத்தி செய்துகொள்கிறார்கள். இன்னம் புத்தி, பலம் முதலியவற்றால் என்னென்னவோ செய்கிறார்கள். ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமான புத்தி, பலங்களைப் பெற்றிருக்கிறார்கள். பூர்வகர்மா என்று அவரவர் பண்ணியது அவர்களை ஜன்ம ஜன்மாவாகப் பிடித்துக் கொண்டு பலனை அநுபவிக்கும்படிப் பண்ணுகிறது. இப்படி எத்தனையோ ஸமாசாரங்கள் ஒரு ஆர்டரில் ஒன்று ஒன்று சேர்ந்திருப்பதில்தான் நடைமுறை லோகவாழ்க்கை என்பது ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் இதை எல்லாம் படைத்து, இன்னின்ன மாதிரி நடத்தி வைத்துக்கொண்டிருக்கிற ஒருத்தன் இருக்கவேண்டும் என்று தெரிகிறது. அவனைத்தான் பரமாத்மா என்பது. ‘பரம்’ என்றால் உயர்ந்த, ச்ரேஷ்டமான என்று அர்த்தம். ஸகல ஜகத் காரணனாகவும், அதன் கார்யங்களுக்கு அந்தர்யாமியான கர்த்தனாகவும் உள்ளே பேருயிராக அவன் இருப்பதால் ‘பரமாத்மா’ என்று சொல்கிறார்கள்.
அத்தைவ சாஸ்த்ரங்களை அநுஸரித்துப் பேசிக்கொண்டு போகிறபோது, ஜீவனின் சரீரம், இந்த்ரியம், அப்புறம் மனஸ் சித்தம் முதலிய அடங்கிய அந்தஃகரணம், அதற்கும் அப்புறம் மநோ இந்த்ரிய சேஷ்டையில்லாத வெற்றுவெளியான ஆத்மா என்று சொல்லிக்கொண்டு போய்விடும்படி ஆகிறது. பல ஜீவர்களும் ஒரே மாதிரியான அநுபவங்களைப் பெறும்படியான ஜகத் ஒன்று இருக்கிறதே! அதன் தோற்றம் எப்படி என்பதைச் சொல்ல இங்கே இடமேற்படவில்லை. இதில் அத்வைதிகளுக்கிடையிலேயே தத்வங்களை ரொம்பவும் வித்யாஸப்படுத்திக்கொண்டு போகும்போது வித்யாஸமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. (எனவே அத்வைதிகளின்) பொதுக்கருத்தை ‘ஸிம்பப்ளிஃபை’ பண்ணிச் சொல்கிறேன் :
மனஸ் இருப்பதால்தான் ஜீவனுக்கு ஜகத்தின் அநுபவம் ஏற்படுகிறது. ஜன்மாக்கள், உபத்ரவங்கள் எல்லாம் இதிலிருந்தே ஏற்படுகின்றனவாதலால் மனஸை இல்லாமல் பண்ணிக்கொண்டு ஆத்மாவாய் இருந்துடணும் என்று சொன்னேன். ஒரு தனி ஜீவனுக்கு ஜகத்தின் அநுபவம் மனஸினால் ஏற்படுகிறது. அதனால் மனஸை அடக்கி அந்த அநுபவத்தைப் போக்கிக்கொண்டு ஆத்மாநுபவம் அடையவேண்டும் என்பது ஸரி. ஆனால், இவன் தனி மனஸை அடக்கினவுடன் ஜகதநுபவம் இவனுக்குப் போகிறதே ஒழிய, அந்த ஜகத்தே இல்லாமல் போய்விடுகிறதா என்ன? மற்ற ஜீவர்கள் அவர்களுடைய மனஸ்களால் அதை அநுபவிக்கத்தானே செய்கிறார்கள்? ஜகத்தின் அழிவு இவன் மனஸினால் ஏற்படவில்லை என்பது போலவே, ஜகத்தின் தோற்றமும் இவனுடைய தனி மனஸின் கல்பனையில்லை என்பது ஸ்பஷ்டமாகிறது. இவனுடைய மனோ கல்பனையே ஜகத் என்றால், மற்ற ஜீவர்களுக்கும், ஸகல ஜீவர்களுக்கும் ஜகத் என்பது ஒரே மாதிரியாக, objective reality என்ற பொதுவான வெளிஉண்மை மாதிரியான ஒன்றாக இருக்காது. க்ரஹ நக்ஷத்ராதிகளின் ஸஞ்சாரத்திலிருந்து அணுக்குள்ளே எலெக்ட்ரான் – ப்ரோடான் ஸஞ்சாரம் வரையிலாக நடக்கிற எத்தனையோ விசித்ரங்களையெல்லாம் விசித்ரம் என்றாலும், ஒவ்வொன்றும் இஷ்டப்படி நடக்காமல் அநேக விதிகிளின்படியே இவை நடப்பதைக் கவனித்தோமானால் இவ்வளவையும் ஏதோ ஒரு தனி ஜீவ மனஸ் பண்ணினதாகச் சொல்வதற்கில்லை.
இந்த மனஸினால்தான் ஒரு ஜீவன் கர்மாக் கட்டில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறான் என்பதை கவனித்தோமானால் போதும்! எல்லாம் மனோ கல்பனை என்றால் எங்கேயாவது ஒரு ஜீவன் தானே தனக்கு இப்படி அவஸ்தையைக் கல்பித்துக்கொள்வானா? எல்லாம் மனோ கல்பிதமாயிருந்து, (இப்போது நமக்கு நன்றாகத் தெரிகிறபடி) பாபங்களைப் பண்ணுவதிலேயே மனஸுக்கு அதிகமான ப்ரவ்ருத்தியும் இருக்கிறதென்றால், அப்போது அந்த மனஸே இந்த பாபங்களுக்காக அநேக தண்டனைகளை அநுபவிக்க வேண்டுமென்று தன்னையே கஷ்டப்படுத்திக் கொள்ளுமா என்ன?
இதெல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு ஜிவனுக்கு அந்யமாக அநேக ஜீவர்கள் அவனுக்குத் தெரிகிறார்களே, அவர்களையெல்லாம் இவன் மனஸா படைத்தது? அப்படிப் படைத்திருந்தால் அதில் யார் எப்படிப்பட்டவர் என்று இவனுக்குத் தெரியவேண்டுமே! ஆனால் நடைமுறையில் கொஞ்சங்கூட அப்படிக் காணோமே! எத்தனை பழகினாலும் ஒருத்தர் எப்படிப்பட்டவர் என்று தீர்மானம் செய்து கொள்ள முடியாமலிருக்கிறதே! யோக்யர் என்று நினைத்து பலரிடம் ஏமாந்து போகிறோம். தப்பானவர் என்று நாம் நினைத்த ஒருவர் யோக்யர் என்று அப்புறம் தெரிந்து கொள்கிறோம்.
இன்னொன்று: உங்கள் மனஸின் கல்பனைதான் மற்றவர் என்று நீங்கள் நினைத்தால், அவர்களில் ஒவ்வொருவரும் அவனுடைய மனோ ஸ்ருஷ்டிதான் நீங்கள் என்று நினைக்கலாம்! எல்லா ஜீவர்களும் ஏதோ ஒரு ஜீவனின் மனோ கல்பனை என்றால், இந்த ஒரு ஜீவன் தன்னுடைய மனஸை அழித்து அத்மாவாகி முக்தி அடைந்தவுடன், மற்ற அத்தனை பேருமே இல்லாமல் அல்லவா போய் விடவேண்டும்? ஆனால் நடைமுறையிலோ எத்தனையோ மஹான்கள் மநோநாசம் செய்து அத்வைத முக்தி அடைந்திருக்கிறார்களென்றாலும், ஜீவ ப்ரபஞ்சமும் ஜட ப்ரபஞ்சமும் இருந்துகொண்டுதானே இருக்கின்றன?* இப்படி ஆலோசித்துக்கொண்டு போனால் மற்ற ஜீவ ஜகத்துக்களால் ஒருவன் பெருகிற அநுபவத்துக்குத்தான் அவனுடைய மனஸ் காரணமே தவிர, அந்த ஜீவ – ஜகத்துக்களுக்கே அது காரணமில்லை என்று தெரியும். ஆனாலும் இவற்றுக்கெல்லாம் ஒரு காரண வஸ்து இருந்தாலொழிய இவை தோன்றியிருக்க முடியாது. இத்தனை சன்ன பின்னலிலும் அநேக விதிகளைத் துளிக்கூட வழுவாமல் அநுஸரிப்பதாகவும் ஜகத் வ்யாபாரம் இருக்க முடியாது.
* இவ்விஷயம் இவ்வுரையில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.