வேதாந்த ‘ஈச்வரன்’ சிவனல்ல : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஈச்ரவன் என்றவுடன் சிவன் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டுவிடக்கூடாது. பொதுவிலே ஈச்ரவ சப்தம் சிவனுக்குத்தான் உரியதாக இருக்கிறது. ஈச்வரன் கோவில், பெருமாள் கோவில் என்றே சிவ விஷ்ணு ஆலயங்களை வித்யாஸப்படுத்திச் சொல்வதாயிருக்கிறது. வைஷ்ணவர்கள் மஹாவிஷ்ணுவை ‘ஈச்வரன்’ என்று சொல்லாமல் ‘பகவான்’, ‘பெருமாள்’ என்று சொல்கிறார்கள். (‘பகவான்’ என்பதன் அடியாகப் பிறந்த) பாகவதன் என்றால் விஷ்ணு பக்தன் என்றே அர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பழைய வேதாந்த சாஸ்த்ரத்தில் – ராமாநுஜரின் விசிஷ்டாத்வைத வேதாந்தம் உள்படத்தான் சொல்கிறேன் – இப்படி இல்லை. ராமாநுஜ மதம் உள்பட எந்த வேதாந்த சாத்ஸத்ரமானாலும் அதில் ஜீவ ஜட ஸமூஹப் ப்ரபஞ்சத்தை எல்லாம் ஆக்கி அளித்து அழிக்கிற பரமாத்ம சக்தி எதுவோ அதை Cosmic Mind என்றேனே, அதை, ‘ஈச்வரன்’ என்ற பெயரால்தான் குறிப்பிடுவார்கள். மஹா விஷ்ணுதான் இந்த மஹாசக்தி என்று ஸித்தாந்தம் பண்ணினவர்களும் அவனை “ஈச்வரன்” என்றே குறிப்பிட்டார்கள்.

பிற்பாடு வைஷ்ணவர்கள் ‘ஈச்வரன்’ என்ற பெயர் வைத்துக்கொள்வதை நிறுத்திவிட்டாலும், ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்தின் (ஸித்தாந்தத்தின்) முதல் ப்ரவர்த்தகர் (ஆசார்யர்) என்று கருதப்படும் நாதமுனிகள் என்பவரின் தகப்பனார் பெயரே ஈச்ரவ பட்டர் என்பதுதான். ராமாநுஜருக்கும் முந்தி அந்த ஸித்தாந்தத்தில் இரண்டு பூர்வாசார்யர்களைச் சொல்வார்கள். ஆளவந்தார் என்பவர் ஒருவர். அவருக்கும் முந்தி இருந்தவர் நாதமுனிகள். நாதமுனிகளின் பேரர்தான் ஆளவந்தார். நாதமுனிகளின் தகப்பனாருடைய பெயர் ஈச்வர பட்டர் என்பது. எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பிடாமல் பொதுவில், ‘கடவுள்’, ‘ஆண்டவன்’ என்கிறாற்போல, ஜீவலோகத்தை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் சக்தியையே ‘ஈச்வரன்’ என்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈச்வரன் அல்லது ஸகுண ப்ரஹ்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈச்வர உபாஸனை
Next