ஈச்வர உபாஸனை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆகவே ஜீவனின் இந்த்ரியம், மனஸ் ஆகியவற்றுக்கு அப்பால் ஆத்மா என்றே அத்வைத நூல்களில் பெரும்பாலும் சொல்லிக்கொண்டு போனாலும், ஜீவ மனஸுக்கு மேலேயும், (ஜகத் என்பது அடிபட்டுப்போய் எந்தக் கார்யமும் நினைப்பும் இல்லாமலிருக்கிற) ஆத்மாவுக்கு கீழேயும் ஜகத் காரணமான, ஜகத் வ்யாபாரத்தை நடத்துவதான ஒரு பரமாத்ம சக்தி இருக்கிறது. ஜீவனுக்குக் கர்மாப்படி ஜன்மாக்களைத் தந்து ஆட்டி வைத்துக்கொண்டிருப்பது அந்தப் பரமாத்ம சக்தியே. மனஸானது அந்தப் பரமாத்மாவான மஹா மனஸை உபாஸனை பண்ணின பின் தான் ஐகாக்ரியம் அடைந்து (ஒருமுகப்பட்டு), அப்புறம் அதற்கு ஆதராமாயிருக்கும் ஆத்மாவிலே போயக் கரையமுடியும். இப்படிதான் ஆசார்யாள் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்.

மனஸ் சுத்தமாவதற்காக சாஸ்தரப்படியான கர்மாவைப் பண்ணவேண்டும்; பலவற்றிலே சிதறிக்கொண்டிருக்கிற மனஸ் ஒருமுகப்படுத்துவதற்காகத் தன்னைப் பண்ணின மனஸான ஈச்ரவனை உபாஸிக்கவேண்டும்; இப்படிச் சுத்தப்படுத்தி ஒருமுகப்படுத்திய பிறகுதான் அது தன் ஸ்வரூபத்தையே ஆத்மாவில் இழப்பதற்குரிய பக்வத்தை அடையும்; அப்போதுதான் ஞான மார்க்கத்தில் ஆத்ம விசாரம் செய்யவேண்டும் என்று ஆசார்யாள் வைத்திருக்கிறார்.

சின்ன மனஸ் அந்தப் பெரிய மனஸை நினைத்து, அதனிடம் பணிவோடு பக்தி பண்ணிக்கொண்டுநின்றால் அந்தப் பெரிய மனஸ் இதற்கு அநுக்ரஹம் செய்ய நினைக்கிறது. ‘இதை மாயையிலிருந்து விடுவிக்கலாம்’ என்று அருளோடு நினைத்து, சின்ன மனஸினனான ஜவனுக்கு அத்வைதத்திலே ஆசையை, பிடிப்பை ஏற்படுத்தி இவனை ஆத்ம மார்க்கத்தில் போகப் பண்ணுகிறது. ஈச்வரன் என்கிற அந்த Cosmic Mind -ன் அநுக்ரஹத்தால்தான் ஒரு ஜீவனுக்கு அத்வைதத்தில் ருசியே ஏற்படுகிறது என்று அத்வைத சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது.

ஈச்வரானுக்ரஹாதேவ பும்ஸாம் அத்வைத வாஸநா*

ஆனபடியால் ஜீவாத்மாவின் ஸார பூதமான அடிப்படை உண்மை நிலை என்ன என்று பார்த்துக்கொண்டே போகிறபோது சரீர இந்த்ரியங்கள், அப்புறம் மனஸ், அப்புறம் அடி ஆதாரமாக ஆத்மா என்று சொல்லிவிட்டாலும், ஜீவமனஸுக்கு அப்புறம் அனேக ஜீவர்களையும் ஜகத்துக்களையும் கல்பிப்பதான ஈச்வரன் என்ற இன்னொரு பெரிய மனஸ் வருகிறது.


* தத்தாத்ரேயரின் ‘அவதூத கீதை’ முதல் ச்லோகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேதாந்த 'ஈச்வரன்' சிவனல்ல
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸத்ய ஆராய்ச்சி - ஜீவ கோணத்திலும், ஜகத் கோணத்திலும்
Next