ஸத்ய ஆராய்ச்சி – ஜீவ கோணத்திலும், ஜகத் கோணத்திலும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனால் இதை விட்டுவிட்டாற்போல, இந்த்ரியம் – அதற்கு ஆதாரமான மனஸ் (ஜீவனை ஒரு தனி ஆஸாமி போலக் குறுக்கி காட்டுவதே இதுதான்) – அந்த மனஸுக்கு ஆதாரமான ஆத்மா என்று சொல்லிக்கொண்டு போவதற்குக் காரணம், ஜீவனுடைய நிலையிலிருந்து அவனுடைய உள் ஆதாரத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதான். சரீரம்தான் முதலில் தெரிகிறது. இது ஜீவனுடைய தனிப்பட்ட சரீரம்தான். அப்புறம் அதற்குள்ளே அதை ஆட்டிவைக்கும் இந்த்ரிய ருசிகள் தெரிகின்றன. இந்த இந்தரிய ருசிகளும் ஒரு தனி ஜீவனுக்கு உரியவைதான். அப்புறம் இதற்கும் உள்ளேயிருந்து இந்த ருசிகளை உண்டாக்கி ஆட்டிவைப்பதான மனஸ் என்பது தெரிகிறது. இதுவும் தனிப்பட்ட ஜீவனைச் சேர்ந்ததுதான், Individual mind -தான். கடைசியிலே அடையப்போகிற ஆத்மாதான் ஜீவனுடைய ஸார பூதமான ஆதார ஸத்யம். அதனாலே, அதை, ந்யாயமாகப் பார்த்தால், தனி ஜீவனுடையது என்று சொல்லவேகூடாது என்றாலும் – தனி ஜீவத்வம் அடிபட்டுப்போனால்தான் அந்த ஆத்மாவின் அநுபவமே உண்டாகும் என்னும்போது அதை இவனுடையது என்று சொல்வது ந்யாயமில்லை என்றாலும்-அதுதான் தன்னுடைய உண்மை நிலை என்று ஒரு ‘உடைய’ போட்டு ஜீவன் நினைப்பதால், எதற்குமே அது உடைமையாயிருக்க முடியாதாயினும் அதையும் நம்முடைய பாவனையைக் கொண்டு தனி ஜீவனைச் சேர்ந்த விஷயமாகவே வைக்க இடமேற்படுகிறது. இப்படியாக ஒரு ‘இன்டிவிஜுவல்’ (தனிப்பட்ட) ஜீவனின் ஸொந்தமான உள்தத்வம் என்று அவனை மையப்படுத்தி உள்ளே உள்ளே போய்ப் பார்க்கிறபோது இந்த்ரியங்களைக் கொண்ட சரீரம் – இந்த்ரியங்களை ஆளும் மனஸ் (மனஸை அங்கமாகக் கொண்ட அந்தஃகரணம்) – அதற்கும் ஆதாரமான ஆத்மா என்றே போய் முடிந்துவிடுகிறது. இவனொருத்னையே ஆராய்ந்துகொண்டு போனதால், இவனை மட்டுமில்லாமல் மற்ற ஜீவ ப்ரபஞ்த்தையும், ஜட ப்ரபஞ்சத்தையும் கல்பித்த ஈச்வரனை இங்கே மனஸுக்கும் ஆத்மாவுக்கும் நடுவே கொண்டுவராமலே சொல்லிக்கொண்டு போகும் படியாக ஆகிறது.

ஆனால் ஸத்ய தத்வத்தை ஜீவனுடைய நிலையிலிருந்து, ஜீவனுடைய Point of view -விலிருந்து பார்க்காமல், ஜீவ ஜட ப்ரபஞ்சமான ஜகத்தின் கோணத்திலிருந்து ஆராய்ந்து கொண்டு போனால் அப்போது ஈச்வர தத்வம் வந்துவிடும்.

ஜகத்துக்கு ஆதார ஸத்யம் என்பதாக எந்த மூலவஸ்து ஆராயப்படுகிறதோ அதற்குத்தான் ‘ப்ரஹ்மம்’ என்று பெயர். ‘ப்ருஹ்’ என்றால் ‘பெரியதானது’. பெரியதிலெல்லாம் இதுவே பெரியது என்பதால் ‘ப்ரஹ்மம்’ என்று பெயர். ஸகல ஜீவ – ஜட லோகங்களுக்கும், அதாவது சேதனமான கோடானு கோடிவித ஜீவ ஜந்துக்களுக்கும், எத்தனை விஸ்தாரம் என்று கணக்குப் பண்ணுவதற்கே தலை சுற்றுகிற மாதிரி கோடி கோடி கோடி மைல்கள் பரவியிருக்கிற கோடாநுகோடி நக்ஷத்ராதிகளுக்கும் எது காரணமோ அதான் பெரிசில் எல்லாம் பெரிசு? அதனால் ‘ப்ரஹ்மம்’ என்று பெயர். இப்படி அதுவே ஸர்வகாரணம், ஸர்வாதாரம், ஸகலத்துக்கும் மூலம் என்றால் அப்போது ஜீவனுக்கும் அதுவேதானே ஆதாரமான மூலவஸ்துவாக இருக்கவேண்டும்? இப்படி ஜீவனுக்கு ஆதரமாயிருப்பதைதானே அவனுடைய நிஜ ஸ்வரூபமான ஆத்மா என்பதாகச் சொன்னோம்? அதனாலே ஆத்மாவேதான் ப்ரஹ்மம் என்று ஆகிவிடுகிறது. ஜீவனுடைய ‘பாயின்ட்’டிலிருந்து அவனுக்கு அடிப்படையான ஸத்யம் எது என்று பார்த்துக்கொண்டே போய் நாம் முடிவாக அடைந்த ஆத்மா எதுவோ அதையே தான் ஜகத்தின் ‘பாயின்டி’லிருந்து அதற்கு எது அடிப்படை என்று பார்த்துக்கொண்டு போகும்போது ‘ப்ரஹ்மம்’ என்கிறோம் என்று தெரிகிறது.

ஆத்மாவே ப்ரஹ்மம் என்று சொல்வதைவிட ப்ரஹ்மமே ஆத்மா என்பதுதான் பொருத்தமானது. ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றேதான் என்றாலும்கூட, ஒரு ஜீவனைக் குறித்ததாகவே நினைக்கப்படும் ஆத்மாவை ஸர்வ ஜீவ – ஜட காரண வஸ்துவான ப்ரஹ்மம் என்பதைவிட, ‘ப்ரஹ்மமேதான் ஆத்மா; அதாவது, ஸகல ப்ரபஞ்சங்களாகவும் எது தோன்றுகிறதோ, அதுவேதானப்பா நீயாகவும், நானாகவும், அவனாகவும் இப்படி நாநா ஜீவர்களாகத் தோன்றுவது’ என்று சொல்வதுதான் பொருத்தம். அதுதான் அழகு. ஜீவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருப்பவன் ப்ரஹ்மமேதான். இவனுடைய ஆத்மாதான் ஸர்வாத்மா. ஸர்வ ஆத்மா என்றால் பல ஆத்மா இல்லை. ஆத்மா ஒன்றுதான். ஸர்வத்துக்கும் அந்த ஒன்றே ஆத்மா. ஸர்வ ஜீவ ஜகத்துக்களகாவும் அந்த ஒன்றே மாயா சக்தியாலே வேஷம் போட்டுக்கொண்டு தோன்றுகிறது. இப்படிச் சொல்கிறபோதுதான், அதாவது ஜீவனின் ‘பாயின்ட்’டில் ஆதாரமென்ன என்று பார்க்காமல், ஜகத்தின் ‘பாயின்ட்’ டிலிருந்து ஆதாரத்தை ஆராய்ச்சி பண்ணும்போதுதான், ஆத்மாவுக்கு அடுத்தாற்போல், அது மாயையாலே போட்டுக்கொண்டுள்ள ஈச்வரன் ரூபமான Cosmic Mind வந்துவிடும். அப்புறம்தான் அது சின்ன மனஸ்களான நம் மனஸ்களை உண்டு பண்ணி, நமக்குத் தனி அஹங்காரத்தைக் கொடுத்து ஜீவர்களாக ஆக்குவது. இந்த ஈச்வரனேதான் இந்த்ரிய மூலமாக ஜீவ மனஸ் பலவித அநுபோகங்களை எதிலிருந்து பெறுகிறேதா அந்த ஜகத்தையும் தோற்றுவிப்பது.

இன்னொரு தினுஸாகச் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈச்வர உபாஸனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஜீவ ஆத்மா, ஈச்வர ஆத்மா
Next