ஜீவ ஆத்மா, ஈச்வர ஆத்மா : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஜீவனுக்கு ஆதாரம் என்ன என்று பார்த்தால் அவனுடைய மனஸ், அப்புறம் ஆத்மா என்று போகிற மாதிரி, ஜகத்துக்கு ஆதாரம் என்னவென்று பார்த்தால் இதையெல்லாம் பண்ணி ஜகத்துக்கு ஆதாரம் என்னவென்று பார்த்தால் இதையெல்லாம் பண்ணி, ஒன்றோடொன்று பின்னி வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிற ஈச்வரன் என்று தெரிகிறது. அப்புறம் ஆலோசித்தால் அவனுக்கும் ஆதார அடிப்படையாக ஒன்றும் பண்ணாமல் தானாக இருந்துகொண்டிருக்கிற ஒரு ஆதார ஸத்யம் இருப்பதாகத் தெரியவரும். ஜகத்தைப் பண்ணுகிறவன் ஈச்வரன் என்னும்போதே, அவன் அதைப் பண்ணாமல் தானாக இருக்கிற நிலை என்ன என்பதாக அவனுடைய நிஜ ஸ்வரூபத்துக்கு ஒரு basis-ஐத் தேடவேண்டியதாகத்தானே இருக்கிறது? ஜீவ மனஸுக்கு இதே மாதிரி ஆதாரத்தைத் தேடிக்கொண்டே போனபோதுதான், “ஸதாவும் எதையாவது பண்ணிக் கொண்டேயுள்ள இந்த மனஸுக்கு ஆதாரமாக எதையும் பண்ணாமல் வெறுமே இருந்துகொண்டு மட்டும் உள்ள ஆத்மா இருக்கிறது. அதன் இருப்பு தூக்கம், மூர்ச்சை முதலியவற்றால் ‘நெகடிவ்’ ஆகவும், ஸமாதியநுபவத்தால் ‘பாஸிடிவ்’ ஆகவும் தெரிகிறது” என்று தெரிந்து கொண்டோம். அந்த ஆதாரத்தினால்தான் மனஸ் வேலை பண்ணுவதே, அது இல்லாமற் போனால் மனஸே இல்லை என்று தெரிந்துகொண்டோம். இந்தத் தனி ஜீவ மனஸுக்குச் சொன்னது ஈச்ரவன் என்ற Cosmic Mind-க்கும் பொருந்தத்தான் வேண்டும். ஈச்வரனுக்கும் ஆதார ஸத்யமாக எதுவும் பண்ணாமல் இருந்து கொண்டு மட்டும் இருப்பதான ஒன்று இருந்துதான் ஆக வேண்டும். ஜீவனுக்கு ஒரு ஆத்மா உள்ள மாதிரி, ஈச்வரனுக்கும் ஒரு ஆத்மா இருக்கவேண்டும். அதுதான் பரமாத்மா எனப்படுவது.

‘இத்தனை நாம ரூபங்களும் குணங்களும் கார்யங்களும் கொண்ட ஜகத்துக்கு ஆதாரமான ஈச்வரன் தன்னில் தானாக ஆதார ஸத்ய நிலையில் இருக்கும்போது அவனுடைய நிஜ ஸ்வரூபமாக, அதாவது ஆத்மாவாக இருப்பது எப்படியிருக்கும்?’ என்று ஆலோசித்தோமானால், அது எந்த நாமமம், ரூபமும் குணமும், கார்யமும் இல்லாததாகத் தானிருக்குமென்று தெரியும்*. “அதெப்படி?” என்றால், அதற்கென்று தனியாக ஒரு குணம், ரூபம், கர்மம், நாமம் இருந்துவிட்டால் அது இதற்கு வித்யாஸமான மற்ற குண கர்மங்கள் நாம ரூபங்கள் ஆகியவற்றை எப்படி உண்டாக்க முடியும்? பல கலர்கள் பிறக்கிற மூலம் எது என்று த்ருஷ்டாந்தத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். ஊதாவில் ஆரம்பித்து சிவப்புவரையில் V-I-B-G-Y-O-R என்று ஏழு கலர்கள் சொல்கிறார்கள். இந்த ஏழும் எதிலிருந்து உண்டாயின என்றால், எந்த வர்ணமுமேயில்லாத வெளிச்சத்திலிருந்து – colourless light-லிருந்து வந்தது என்கிறார்கள். இதை விஞ்ஞான பூர்வமாகவே colour spectrum என்று நமக்கு நிரூபித்துக் காட்டுகிறார்கள். கலரேயில்லாத ஸூர்ய வெளிச்சத்திலிருந்தே மேக மண்டலத்தில் ஒளிச் சிதறல் (refraction) ஏற்பட்டு ஏழு கலரும் உள்ள அழகான வானவில் தோன்றுவதைப் பார்க்கிறோம். கலரில்லாத வைரத்தின் பட்டைகளில் வெறும் வெளிச்சம் பட்டு ஏழு வர்ணங்களையும் வாரிக் கொட்டும் விநோதத்தைப் பார்க்கிறோம். இதிலிருந்து, பல வர்ணங்களையும் உற்பத்தி செய்யக்கூடியது ஏழு வர்ணமுமே இல்லாததாக இருக்க வேண்டுமென்று தெரிகிறது- இப்படித்தான் நாநா பேதங்கள் கொண்ட குண கர்ம நாம ரூபங்களைக் கொண்ட ப்ரபஞ்சத்துக்கு ஆதாரனாக உள்ளவனின் அடிப்படையான நிஜ ஸ்வரூபம் எந்த குணமும் இல்லாததாக, எந்த கர்மாவும் செய்யாததாக, எந்த நாமமும் தரிக்காததாக, எந்த ரூபமும் கொள்ளாததாக இருக்கவேண்டும். அதுதான் அத்வைதிகள் சொல்லும் நிர்குண, நிஷ்க்ரிய, நாம ரூபரஹித ப்ரஹ்மம்.

ஜீவனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மா இப்படிப்பட்டதே என்று பார்த்தோம். இதிலிருந்து இன்னம் ஆலோசித்துக் கொண்டு போனால், ஈச்வரனின் நிஜஸ்வரூபமான ஆத்மா ஜீவனின் ஆத்மா மாதிரியான இன்னொன்றாக இருக்க முடியாததென்றும், இதுவும் அதுவும் ஒன்றாகவேதான் இருக்க வேண்டும் என்றும் தெரியும்.

எப்படி?

ஜீவனின் ஆத்மா என்று வைத்துக்கொண்டாலும் ஸரி, அல்லது ஈச்வரனின் ஆத்மா என்று வைத்துக்கொண்டாலும் ஸரி. எதுவானாலும் அது குணம், கார்யம், ஊர், பேர், உருவம், உடைமை எதுவுமே இல்லாதது என்று பார்த்தோம். அது இப்படி இப்படி இல்லாதது (“நேதி” என்று இதை வேதாந்தத்தில் சொல்வார்கள்), எதுவாகவுமே இல்லாதது என்று முடிவுக்கு வரும்போது அதை ஒரு ஸைஃபர் என்றுதான் கருதவேண்டியிருந்தது. ஸைஃபர் என்பது இல்லாத வஸ்து. எனவே அதிலே இரண்டு ஸைஃபர், மூன்று ஸைஃபர் என்று இருக்க முடியாது. ‘நம்பர்களாக இருக்கிறவற்றில்தான் ஒன்று, இரண்டு, மூன்று என்று வித்யாஸமாகப் பல இருக்கமுடியும். இல்லாத ஸைபராகப் பல இருக்க முடியாது. ஆகையினாலே, ஜீவனுக்கு ஆத்மாவாயிருக்கிற ஒரு ஸைஃபர், ஈச்வரனுக்கு ஆத்மாவாக உள்ள இன்னொரு ஸைஃபர் என்று இருக்க முடியாது. இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிடுகிறது.

ஜீவ – ஜகத்தின் கோணத்திலிருந்து பார்க்கும்போது இவற்றைக் குறித்த எதுவாகவும் அது இல்லை என்பதால் இப்படி ஸைஃபராக்கினது, ஆனால் அது வாஸ்தத்வதில் எப்படி ஸைஃபராக இருக்கமுடியும்? ஸர்வமும் அதிலிருந்து தான், அது இல்லாமல் எதுவுமே இல்லை, அதுதான் ஆதாரம், நிஜஸ்வரூபம் என்று சொல்லிவிட்டு அது ஸைஃபர் என்றால் எப்படி? ஆகையினால் நம்மை ஸென்டராக வைக்காமல், அதையே ஸென்டராக வைத்துக் பார்த்தால் அது ஸைஃபர் இல்லை; அதுவே பூர்ணம் என்று தெரியும். ஏழு கலரில் எதுவாகவும் இல்லை என்பதால் அவற்றுக்கு ஆதாரமாக ‘லைட்’ என்றே ஒன்று இல்லை என்றால் அது கொஞ்சங் கூட ஸரியில்லையே! கலர்களாக அது இல்லையே தவிர ஒளி என்ற ஒன்றாக இருக்கத்தானே செய்கிறது? அப்படியே ஜீவனின் ஆத்மா என்பது அவனுடைய இந்த்ரியாதிகள், மனஸ், கார்யங்கள், குணங்கள் முதலியன இல்லாததாயிருந்தாலும் அதுதான் ஸத்யம் என்ற இருப்பாகவே இருப்பது. ‘அது இல்லாமல் இது எதுவும் இல்லை. அதெல்லாம் அதன் துளிச்சாயைதான். மேகத்திலோ, ‘ப்ரிஸ’த்திலோ ஒளி சிதறி வர்ணமுண்டாகிற மாதிரி மாயையிலே ஆத்ம ஒளி சிதறித்தான் ஜிவனுடையதான அந்தஃகரணம் உண்டாகி, இந்தரியாதிகள் வரை விரிவடைந்திருக்கிறது’ என்பதால் அது பூர்ண வஸ்துவாகவே இருக்கவேண்டுமென்று ஏற்படுகிறது. அது பூர்ணம்தான் என்பதற்கு proof மஹான்களின் ப்ரத்யக்ஷ அநுபவத்தில் இருக்கிறது! ஆத்மாவிலே நிலைத்த அவர்கள்தான் கொஞ்சங்கூட எந்தவிதமான குறைவும், குறையும் இல்லாமல், நிறைந்த நிறைவோடு இருக்கிறார்கள். அந்த நிறைவுக்கு அதிகமாக எதையும் கூட்டமுடியாது. இப்படிக் கூட்டுவதற்கில்லாமல் நிறைவாக இருப்பதுதானே பூர்ணத்வம்? இப்படியே, இதைவிட, ஸ்பஷ்டமாக, தெரிவது – ஸகல ஜகத்தையும் உண்டாக்கி, ஸகல ஜீவர்களையும் ஆட்டிப் படைக்கும் ஈச்வரனுக்கும் ஆதார ஸத்யமாயுள்ள அவனுடைய ஆத்மா நிச்சயமாக பூர்ணமாகத்தானிருக்க வேண்டுமென்பது. ஜீவன் என்று தனியாக உள்ளவரையில் அந்தஃகரணம்தான் ஜீவனை இப்படித் தனியாக ஆக்கியிருக்கிற மாதிரியே, ஈச்வரன் என்று ஒருவனை ஆக்கியிருப்பதும் மாயையே. மாயையோடு சேர்ந்த பிரம்மமே ஈச்வரன். அப்புறம் அவனிடமிருந்து ஜிவ – ஜகத்துக்கள். அப்படியானால் ஈச்வரனின் ஆத்மா எப்படியிருக்கவேண்டும்? எல்லா ஜீவர்களின் தனித்தன்மை கொண்ட அந்தஃகரணங்களுக்கும் காரணமாய் இருக்கின்ற மாயையிலேயே நேராக எதன் ஒளி சிதறி ஜீவ ஸமூஹம் முழுதையும் பண்ணியிருக்கிறதோ, அதோடு ஜடமான ப்ரபஞ்சத்தையும் பண்ணியிருக்கிறதோ அது பூர்ண வஸ்துவாகத்தானிருக்க வேண்டும். “ஸர்வ பரிபூர்ண அகண்ட தத்வம்” என்று தாயுமானவர் சொல்கிறதாகத் தான் அது இருக்கவேண்டும் என்பதில் கொஞ்சங்கூட ஸந்தேஹமில்லை.

ஜீவனின் ஆத்மா பரிபூர்ணமானது; ஈச்வரனின் ஆத்மாவும் பரிபூர்ணமானது என்றால் அது ஒரு பூர்ணம், இது இன்னொரு பூர்ணம் என்று இருக்க முடியாது. எப்படி இரண்டு ஸைஃபர் இருக்க முடியாதோ, அப்படியே இரண்டு பூர்ணமும் இருக்கமுடியாது. ஸைஃபர் ஒன்றுதான். Infinity என்கிற அனந்தமும் ஒன்றுதான். “இரண்டும் ஒன்று” என்று சொல்லும்போதுகூட நம்பர் கொடுத்துவிடுகிறோம். ஆகவே ஒன்று என்பதுகூடத் தப்பு. இதனால்தான் ஆசார்யாள் இரண்டு இல்லை என்று பொருள்படும்படியாக “அத்வைதம்” என்று பேர் வைத்தாரே தவிர, ஒன்று என்று அர்த்தம் கொடுக்கும்படி “ஏகம்” என்று வைக்கவில்லை. ஆகக்கூடி, இரண்டு பூர்ணம் நிச்சயமாய் இருக்க முடியாது. பூர்ணம் என்றாலே அதற்குள் அடங்காததாக எதுவுமில்லை, அதைத்தவிர எதுவுமில்லை என்றுதான் அர்த்தம். அப்படியிருக்க ஒரு பூர்ணத்துக்கு அதிகமாக இன்னொன்று எப்படியிருக்க முடியும்? ஒரு பூர்ணத்துக்குள் இன்னொன்றை அடக்கினால் அதன் அங்கமாகிவிட்ட இது எப்படிப் பூர்ணம் என்ற பெயருக்கு உரியதாக முடியும்?

ஆக, ஜீவனின் ஆத்மாவும் ஈச்வரனின் ஆத்மாவும் நம்முடைய மாயா லோக பார்வையில் தெரிகிறபடி ஸைஃபராயிருந்தாலும் ஸரி, அல்லது வாஸ்தவமாய் அவை உள்ளபடி பூர்ணமாயிருந்தாலும் ஸரி, எப்படியானாலும் அவை இரண்டும் ஒன்றேதான்; வேறு வேறு இல்லை என்று தீர்மானமாகிறது. “இவை”, “இரண்டும்” என்று பிரித்துப் பன்மையில் சொல்வதே தப்பு. ஒரே ஆத்மா, அல்லது ஸத்யம், அல்லது ப்ரஹ்மம்தான் ஈச்ரவனாகவும் ஆகியிருக்கிறது, ஜீவனாகவும் ஆகிவிடுகிறது. இருந்தாலும் வ்யவஹாரத்தில் ஈச்ரவன், ஜீவன் என்கிறவை ஆத்மாவுக்கு வேறுமாதிரி தெரிகிறது. இதனால்தான் ‘ஜீவாத்மா’, ‘பரமாத்மா’ என்ற வார்த்தைகள் ஏற்பட்டது.


* இவ்விஷயமாக இதே பகுதியிலுள்ள “வண்டு ஸ்தோத்ர”த்தின் உட்பிரிவுகளான “நிற்குணமும் குனநிலயமும்“, “க்ருஷ்ண பக்தர்களான அத்வைதிகள்” என்பவற்றிலும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸத்ய ஆராய்ச்சி - ஜீவ கோணத்திலும், ஜகத் கோணத்திலும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  த்வைத - விசிஷ்டாத்வைதங்களில் ஜீவாத்ம - பரமாத்மாக்கள்
Next