த்வைத – விசிஷ்டாத்வைதங்களில் ஜீவாத்ம – பரமாத்மாக்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

த்வைதமாகவே நினைக்கப் பழக்கப்பட்டுவிட்ட நம்மில் எவருக்கும் தோன்றக் கூடியது ஸர்வசக்தனும், ஸர்வஜ்ஞனுமான பரமாத்மா வேறேதான்; அல்ப சக்தனும், கிஞ்சித்ஜ்ஞனுமான (சிற்றறிவினனுமான) ஜீவாத்மா அவனுக்கு வேறேதான் என்ற எண்ணமே. இவர்களை முறையே பேருயிர், சிற்றுயிர் என்றும் சொல்வதுண்டு. இப்படி ஒருவருக்கொருவர் மலைக்கும் மடுவுக்குமாக வித்யாஸமாயுள்ள இரண்டு பேர் நிச்சயமாக இருவேறு ஆஸாமிகளாகத் தானிருக்கவேண்டுமென்று தோன்றும். இதுதான் மத்வாசார்யார் ப்ரசாரம் செய்த த்வைதம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரு வேறு வ்யக்திகள் என்ற அபிப்ராயத்தைக் கொண்டதால் ‘த்வைதம்’ எனப்படுகிறது.

ஒரு குயவன் தனக்கு முற்றிலும் வேறாகப் பானை என்று ஒன்றைப் பண்ணிப் போடுகிற மாதிரி பரமாத்மா ஜீவாத்மாவை அடியோடு வேறு வஸ்துவாகப் பண்ணிவிடவில்லை என்றும், உடம்பை உயிர் இயக்குகிற மாதிரி ஜீவனின் உயிரை அதற்கும் உயிராக (‘உயிர்க்குயிராக’ என்கிறோமே, அப்படி) இயக்கும் அந்தர்யாமியாக அவன் இருக்கிறானென்றும் ராமாநுஜர் ஸித்தாந்தம் செய்தார். இதைத்தான் விசிஷ்டாத்வைதம் என்பது. அவரும் இந்த ஜீவாத்மாவானது பரமாத்மாவை த்வைதமாகப் பிரிந்திருந்து பக்திதான் பண்ணிக்கொண்டிருக்க முடியுமே தவிர, அந்தப் பரமாத்ம தத்வத்திலேயே ஜீவன் பிறிதற அத்வைதமாக ஒன்றிவிட முடியாது என்றுதான் மோக்ஷ நிலையை த்வைதமாக define செய்திருக்கிறார்.

ஸரி, இங்கேயெல்லாம் ஜீவாத்மா என்று சொல்வதிலே ஆத்மா என்பது என்ன? ஜீவனின் நிஜமான உள் உண்மைத் தத்வம் எதுவோ அதுதான். இது மனஸ் இல்லை, அந்தஃகரணம் இல்லை என்பதை த்வைதிகள் உள்பட எல்லா ஸித்தாந்திகளும் ஒப்புக்கொள்கிறார்கள். எதிலும் பட்டுக்கொள்ளாத ‘ஸாக்ஷி’ என்று ஒன்றைச் சொல்கிறார்கள். ஆனாலும் பட்டுக்கொள்ளாத ஸாக்ஷியின் ஸ்வாநுபவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், த்வைதமான ஈச்வராநுபவத்தைத்தான் மோக்ஷமென்பதான ஜீவாத்மாவின் ஸ்வதந்த்ர ஸ்வபாவ அநுபவ நிலையாகச் சொல்லி முடித்துவிடுகிறார்கள்.

ஜீவனின் நிஜ ஸ்வரூபமும் ஈச்வர ஸ்வரூபமும் சாச்வதமாக வேறேதான் என்கிற த்வைதிகள் விஷயத்தில் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டு தினுஸு ஆத்மாக்களை சொல்வதற்கு அதிக விளக்கம் அவச்யமில்லை. மோக்ஷத்தில் ஆத்மாவின் நிஜ ஸ்வரூபத்திலிருக்கும்போதும் அவர்களுடைய ஜீவன் அல்ப சக்தன் என்றே முடிந்துபோகிறான். இல்லாவிட்டால் இவன் எதற்காக மோக்ஷத்தில் ஈச்வரனுக்கு ஸேவை செய்துகொண்டிருக்க வேண்டும்? ஈச்வரனும் மஹாசக்தன் என்பதோடு முடிந்துபோகிறான். அந்த சக்திக்கு ஆதாரமாகவும், ஆனாலும் சக்தியைக் காட்டுவது என்று த்வைத கார்யமில்லாததால் செயலற்ற ஒரே சாந்தமாகவும் உள்ள ஸத்யம்தான் அவனுடைய நிஜ ஸ்வரூபம் என்கிறவரைக்கும் அவர்கள் போவதில்லை. இப்படி அநேக அல்ப சக்தர்கள் அவர்களை ஆள்பவனான ஒரே ஒரு மஹாசக்தன் என்று இரண்டு இருக்கும்போது இவர்களை ஜீவாத்மாக்கள் என்றும், இவர்களைவிட மிக உயர்வான ஈச்வரனைப் பரமாத்மா என்றும் சொல்வது பொருத்தந்தானே? ஸகல ஆதார, ஸகல காரண, நித்ய, சுத்த, முக்த, ஸச்சிதானந்த ப்ரஹ்மம் என்பதே அவர்களுக்கு ஈச்வரன்தான். அவனும் ஜீவர்களும் என்றைக்கும் வேறு வேறாக இருக்கவேண்டியவர்களே என்பது அவர்களுக்கு ஸித்தாந்தமாயுள்ளபோது, ஜீவனை ஜீவாத்மா என்றால், ‘பரமபதம்’ என்றும் ‘பரம் தாமம்’ என்றும் சொல்லும் அவர்களுடைய மோக்ஷ லோகத்தில் இருக்கிற ஈச்வரனைப் பரமாத்மா என்றுதானே சொல்லவேண்டும்?

ஒரே ஆத்மா என்று பரமார்த்த ஸத்ய நிலையில் சொல்லும் அத்வைதிகள், வ்யவஹாரத்தின் பார்வையில் அது ஒரு பக்கம் ஜீவனாக அந்தஃகரணத்தால் கட்டுப்பட்டிருப்பதையும், இன்னொரு பக்கம் இந்த ஜீவனுக்கு மிகமிக உயர்ந்த, பரமான, அகண்ட சக்தியோடு மாயையால் ஈச்வரனாக இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜீவாத்மா, பரமாத்மா என்று பேதம் கல்பித்தாற்போலப் பேசுகிறார்கள். த்வைதிகளோ இது வ்யவஹாரத்தை வைத்து வெறுமே கல்பித்த பேதம்தான் என்று நினைக்காமல், ‘இதுவேதான் ஸத்யம். கீழ்ப்பட்ட ஜீவாத்மாவாக ஒன்றும், மேம்பட்ட பரமாத்மாவாக இன்னொன்றும் சாச்வதமான பேதத்துடனேயே உள்ளன’ என்று சொல்கிறார்கள்.

ஜீவாத்மா, பரமாத்மா, என்ற வார்த்தைகளைப் பற்றி இன்னம் கொஞ்சம் ஆலோசனை (ஆலாபனை) பண்ணிப் பார்க்கலாம் :

த்வைதிகள் (விசிஷ்டாத்வைதிகளையும் த்வைதிகளில் சேர்த்தே சொல்கிறேன்) ஜீவனின் ஆத்மாவை அத்வைதிகள் சொல்லும் நிஷ்க்ரிய, நிர்குண வஸ்துவாகச் சொல்வதில்லை – அதாவது கார்யமும் குணமும் இல்லாத பொருளாகச் சொல்வதில்லை. ஆனாலும் அவர்களும்கூட இந்த்ரிய வ்யாபாரங்களில் போய் லோக விஷயாநுபோகங்களில் ஈடுபடுவதாகவே ஜீவனுக்குத் தற்போதுள்ள தன்மை அவனது நிஜமான தன்மை அல்ல என்றும், ப்ரக்ருதி சேஷ்டி தங்களிலிருந்து (இயற்கையின் சேஷ்டைகளிலிருந்து) விடுபட்டு ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட ஈச்வரனை அன்போடு நினைத்து அவனுக்கு ஆராதனை பண்ணிக் கொண்டிருப்பதுதான் ஜீவனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மாவின் ஸ்வபாவம் என்றும் சொல்கிறார்கள். அந்த நிலை இப்போது ஜீவனுக்குத் தெரியத்தானே இல்லை? அதனால் தற்போது தப்பாக உள்ள ஜீவனுக்கு இவன் ஸரியான நிலையில் இருக்கவேண்டிய ஆத்மாவைத் தெரிவிப்பதற்காக இரண்டையும் வேறுபடுத்தி, ஜீவன் வேறு ஆத்மா வேறு என்கிற மாதிரியாக ‘ஜீவாத்மா’ என்று பெயர் கொடுத்தார்கள்.

அத்வைதிகள் (பரமார்த்த நிலையில் ஜீவாத்ம பரமாத்ம பேதங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒரே ஆத்மாவைத்தான் சொல்பவர்களாயினும்) வ்யவஹார உலகத்தை ஒப்புக் கொள்ளும் கீழ் நிலையில் ‘ஜீவாத்மா’ என்ற ‘கான்ஸெப்டை’ ஏற்றுக்கொள்கிறார்கள். ஆத்மா என்ற நிஜத் ‘தானாக’ ஜீவன் தன்னைத் தெரிந்துகொள்ளாத வ்யவஹாரத்திலும் அவன் எதையோ ஒன்றைத் ‘தானாக’ நினைத்துக்கொண்டுதானே இருக்கிறான்? அதை ஜீவாத்மா என்று சொல்லிவிட்டுப் போவவோமென்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஜீவ ஆத்மா, ஈச்வர ஆத்மா
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தொடர்புகொண்ட இரண்டு வஸ்துக்கள்
Next