ஜீவனும் ஆத்மாவும் ஒன்று என்றால், ஜீவ பாவத்தில் இருப்பதும் ஆத்மாவாக இருந்துகொண்டிருக்கும் நிலையும் ஒன்று என்றால், அப்போது ஜீவன் என்றோ ஆத்மா என்றோ ஒன்றை மட்டும் சொன்னால் போதும். இரண்டையும் சேர்த்து ஜீவாத்மா என்று சொல்லவேண்டியதில்லை. வேடிக்கையாகத் தோன்றலாம், சேர்த்துச் சொன்னதாலேயே இரண்டையும் பிரித்துக் காட்டினதாக ஆகிறது! ‘பால் பாயஸம்’ என்று சொல்கிறோம். பாலே பாயஸமில்லை. அதிலே பாலுக்கு வேறாக என்னமோ, சர்க்கரை கிக்கரை சேர்த்து, அதன் இயற்கையான தன்மையை (நிஜ ஸ்வரூபத்தை) வேறே மாதிரிமாற்றி, அதன் இயற்கை ருசியைக் கூட்டிப் பாயஸம் என்று இன்னொன்றைப் பண்ணியிருக்கிறது. அதனால் ‘பால் பாயஸம்’ என்று சொல்கிறோம்.
பாலும், சர்க்கரையும் போல வேறாக இன்றி, பாலும் milk-ம் ஒன்றேதான். பாலுக்கே ‘க்ஷீரம்’ என்றும் பெயர் இருக்கிறது. இப்படி ஒரே வஸ்துவை இரண்டு வார்த்தைகள் குறிக்கும்போது இரண்டையும் சேர்த்துப் பால் – மில்க், பால் – க்ஷீரம் என்று சொல்வதுண்டா?
‘ஜீவாத்மா’ (என்ற வார்த்தை) ஸமாசாரமும் இதிலிருந்து புரிகிறது. ஜீவனும் ஆத்மாவும் ஒரேயடியாக ஸம்பந்தமே இல்லாதவையாயிருந்தாலும், ‘ஜீவாத்மா’ என்று சேர்த்துச் சொல்ல முடியாது. பாலோடு ஸம்பந்தப்படுகிறவற்றைத்தான் பால் பாயஸம், பால் போளி, பால் சாதம் என்று சொல்ல முடிகிறதே தவிர அதோடு ஸம்பந்தப்பட முடியாத ரஸம், மோர் முதலியவற்றோடு சேர்த்துப் பால் ரஸம், பால் மோர் என்று சொல்ல இடமிருக்கிறதா? ஒன்றாகவேயும் ஆகிவிடாமல், ஒரேயடியாக ஸம்பந்தமே இல்லாமல் வேறு வேறாயும் இருந்துவிடாமல், ஒன்றோடொன்று ஸம்பந்தப்பட்டுக்கொண்டு மட்டுமிருக்கும்போது தான் இரண்டின் பேரையும் சேர்த்து ஒரு வார்த்தை உண்டாவது.
ஜீவனுக்கு தப்பான ஜீவத்வத்தோடு இருக்கும் ஸ்திதி, நிஜ ஸ்வரூபத்தை அறிந்து ஆத்மாவாயிருக்கும் ஸ்திதி என்று இரண்டு இருப்பதாலும், ஆனாலும் அந்த இரண்டில் ஸரியானது எதுவோ அதுவேதான் தப்பாகவும் ஆகி இருக்கிறது என்ற ஸம்பந்தமும் அதே ஸமயத்தில் இருப்பதாலும் ‘ஜீவாத்மா’ என்ற இரண்டையும் சேர்த்துச் சொல்கிறோம்.