‘ஈச்வராத்மா’வுக்குப் பதில் ஏன் ‘பரமாத்மா’? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸரி, ‘ஜீவாத்மா’ என்பதுபோல, ‘ஈச்வராத்மா’ என்று சொல்லாமல் ஏன் ‘பராமாத்மா’ என்று சொல்லவேண்டும்?

ஈச்வராத்மா என்று ஏன் சொல்லவில்லையென்றால் ஈச்வரன் ஆத்மாவை அறிந்துகொள்ளாத நிலை என்று ஒன்று கிடையாது. ஈச்வரனும் ஆத்மாவும் இரண்டாகப் பிரிந்து ஸம்பந்தப் படுபவர்களல்லாததால் ‘ஈச்வர plus ஆத்மா = ஈச்வராத்மா’ என்று plus போட்டு வார்த்தை கொடுக்க முடியவில்லை. அவன் எப்போதும் ஆத்ம ஞானமுள்ளவன். அவன் நிஷ்க்ரிய, நிர்குணனாக இல்லாமல் மாயையினால் கார்யம் செய்கின்ற, ஸகுண (குணங்களுள்ள) ஈச்வரனாயிருக்கிறொனன்று அத்வைத சாஸ்த்ரங்களில் சொல்லியிருப்பதைப் பார்த்து, அப்படியானால் மாயா ஸம்பந்தத்தால் தன் நிஜ ஸ்வரூபத்தை அவன் மறந்து போய் வேறே மாதிரிதான் இருக்கிறானாக்குமென்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. ஜீவன் ஆத்ம ஸ்வரூபத்தை மறந்து போனாற்போல், ஈச்வரன் மறந்து போயிருப்பதாக அவை சொல்லவே சொல்லாது.

அதனால், ஈச்வராத்மா என்காமல், ஜீவாத்மாவுக்கு உயர்ந்தது என்று மட்டும் ‘பரம்’ போட்டுக் காட்டிப் ‘பரமாத்மா’ என்பது.*


* இவ்விஷயம் சில பக்கங்களுக்கு அப்பால் மீண்டும் விளக்கப்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தொடர்புகொண்ட இரண்டு வஸ்துக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அத்வைதக் கொள்கைகளில் சில
Next