அத்வைதக் கொள்கைகளில் சில : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆதார ஸத்யம் எப்படி ஈச்வரன் மாதிரித்தோன்றுகிறது, எப்படி ஜீவன் மாதிரித் தோன்றுகிறது என்பதில் அத்வைதிகளுக்குள்ளேயே இரண்டு மூன்று ‘தியரி’கள் இருக்கின்றன. பிம்ப ப்ரதிபிம்ப வாதம், அவச்சேத வாதம், ஆபாஸ வாதம் என்று இவற்றுக்குப்பேர். அந்த வித்யாஸங்கள், கட்சி ப்ரதி கட்சிகளை அதிகம் சொல்லப்போனேனால் உங்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். இப்போது மாயை நம் கண்ணைக் கட்டி இந்த ஸம்ஸாரக் காட்டில் விட்டிருப்பதை ஏதோ கொஞ்சமாவது தளர்த்திவிடப் பார்க்கலாமென்று உபந்நியாஸம் செய்ய ஆரம்பித்துவிட்டு, நானே நேர்மாறாகப் பண்ணிவிடக்கூடாது. அதனால் ரொம்பவும் சிக்கலான ‘தியரி’களில் ஆழமாகப் போகாமல் மேலெழிந்தவாரியாகச் சொல்லிக்கொண்டு போகிறேன்.

தியரிகளுக்குப் போனால், ‘ஜீவ மனஸ்’, ‘காஸ்மிக்’ மனஸ் என்று இரண்டு இல்லை’ என்று கூட ஒரு கட்சி சொல்லும். ‘அப்படியானால் ‘காஸ்மாஸை’ (ஜகத்தை) ஜீவ மனஸா பண்ணிற்று?’ என்று கேட்டால், ‘ஆமாம், அப்படித்தான்! உன் பார்வையில்தான் ஜகத் இருக்கிறது. அதற்குத் தனியாக இருப்பு இல்லை’ என்பதாக த்ருஷ்டி – ஸ்ருஷ்டிவாதம் என்று ஒன்றை சொல்வார்கள். இதை ‘ஏக ஜீவவாதம்’ என்றும் சொல்வதுண்டு. ஒரு ஜீவனுடைய த்ருஷ்டி என்கிற பார்வையில்தான் (அதாவது ஒரு ஜீவனுடைய மனஸின் வெளிப்பாட்டில்தான்) ஜகத் ஸ்ருஷ்டியே இருக்கிறது என்பார்கள். ஜகத்தின் இன்னொரு பெயரைக் கொண்டே இந்த வாதத்திலும் நியாயமிருப்பதாகச் சொல்வார்கள். ஜகத்துக்கு ‘லோகம்’ என்று பெயர் இருக்கிறது. ‘லோக்’ என்னும் தாதுவுக்குப் ‘பார்ப்பது’ என்று அர்த்தம். Look என்பது இதிலிருந்து வந்ததுதான். ‘லோகனம்’ என்றால் பார்ப்பது. இப்படி நம்மால் பார்க்கப்படுவதால் மட்டுமே இருப்பு உள்ளதாக எது இருக்கிறதோ அதுதான் ‘லோகம்’. Locality, locus என்றெல்லாம் இடம் ஸம்பந்தமானவற்றைச் சொல்வதும் ‘லோக்’தாதுவை வைத்துத்தான். தமிழிலும் பார்க்கப்படுவதாலேயே இருப்பு உள்ளது என்பதைக் குறிப்பதாகப் ‘பார்’ என்றே உலகத்துக்குப் பேர் இருக்கிறது. பரத்தை மறைத்தது பார் முதற் பூதம் என்று பரம அத்வைதத்தைத் (திருமூலர்) சொல்கிறபோது ‘பார்’ என்றே ஜகத்தைச் சொல்லியிருக்கிறது.

‘நீ பார்ப்பதால் உனக்கு லோகம் தெரிகிறது. பார்க்காவிட்டால், அதாவது மனஸை வெளியிலிருந்து உள்ளே திருப்பிவிட்டால் உனக்கு லோகம் மறைந்து போகிறது. இதை வைத்தே லோகம், location, பார் முதலான பேர்கள் ஜகத்துக்கு வந்திருக்கலாம். இதற்குத் தப்பர்த்தம் பண்ணி ஜீவன் பார்ப்பதால்தான் ஜகத்துக்கே இருப்பு இருக்கிறது. ஜீவன் பார்க்காவிட்டால் அதுவும் இல்லை என்று சொல்வது என்ன நியாயம்? ‘பூனை கண்ணை மூடிண்டா உலகம் அஸ்தமிச்சுப் போயிடுமோ?’ என்று பழமொழியே இருக்கிறதே!’ என்று கேட்கலாம்.

த்ருஷ்டி – ஸ்ருஷ்டி வாதம் சொன்னவர்களும் மஹா பெரியவர்கள்தான். அவர்கள் இருந்த ஒரு உசந்த நிலையிலிருந்து கொண்டு அவர்கள் எப்படிப் பார்த்தார்களோ அதையே சொன்னார்களென்று வைத்துக்கொள்ளவேண்டுமே ஒழிய அதை நம் கோணத்திலிருந்து ‘க்ரிடிஸைஸ்’ பண்ணுவது ஸரியல்ல. ஜீவ மனஸை ஈச்வரன் என்கிற Cosmic Mind மாயைக்கு அந்தண்டை (அப்பால்) சேர்க்கும்போது ஒரு கட்டத்தில் அந்த Cosmic Mind-லேயே ஜீவமனஸ் அப்படியே கலந்து அதுவாகவே ஆனாற்போன்ற பாவம் வரும். அதாவது, எதுவும் செய்யாத நிர்குண ஆத்மாவுக்குப் போவதற்கு முந்தி, அதற்குப்போகும்படிப் பண்ணுகிறானே, எல்லாவற்றையும் செய்கிற ஸகுண ஈச்ரவன், அவனோடு ஐக்யமாகிவிட்டது போன்ற ஒரு ஸ்திதி வரும். அப்போது அந்தப் பெரிய மனஸின் ஸ்ருஷ்டி, தன்னுடைய கல்பனை மாதிரியே தோன்றும். ஆனால் வாஸ்தவத்தில் ஜீவன் ஈச்ரவன் ஆவதில்லைதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'ஈச்வராத்மா'வுக்குப் பதில் ஏன் 'பரமாத்மா'?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஜீவன் ஈசனாக முடியாது
Next