ஜீவன் ஈசனாக முடியாது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எல்லாம் ஒன்று என்று அத்வைதம் சொன்ன ஆசார்யாளே நிர்குண நிலையிலே ப்ரஹ்மமும் ஜீவனும் ஒன்று என்றுதான் சொன்னாரே தவிர, ஸகுணத்தில் ஜீவனும் ஈச்வரனும் ஒன்று என்று சொல்லவேயில்லை. Cosmic Mind-இல் இவன் நன்றாகத் தோய்ந்திருக்கும்போது அந்த Mind-ஆன ஈச்வரனின் அதிசய சக்திகள் பல இவனுக்கும் வருமென்பது வாஸ்வதம்தான்; ஆனாலும் ஜகத் முழுதையும் நிர்வஹிக்கும் சக்தி என்பதாக ஈச்வரனுக்கு உள்ள ஐச்வர்யம் இவனுக்கு வராது என்று சொல்லியிருக்கிறார்.

‘ப்ரஹ்ம ஸூத்ர”த்தில் கடைசி அத்யாயத்தின் கடைசி பாதத்தில் முக்தனைப் பற்றி – அதாவது சிற்றின்பங்களே தெரிந்த மனஸாகிற கட்டை அறுத்து விடுபட்டு நித்யமான பேரின்பத்தை அடைந்தவனைப் பற்றி – சொல்லும்போது இவ்விஷயம் வருகிறது. இந்த மனஸ் போய் நிர்குண ப்ரஹ்மத்தில் கரைவதற்கு முந்தி, ஸகுண ஈச்வரனிடம் ஸாயுஜ்யம் எனும்படியான சேர்க்கையைப் பெறுகிற கட்டத்தில் அவனுக்கு எல்லா ஐச்வர்யமும், அதாவது ஈச்வரனுடைய ஸகல சக்திகளும் வந்துவிடுமா என்ற கேள்வி வருகிறது. அதற்குப் பதிலாக ‘ப்ரஹ்ம ஸூத்ர”த்தைச் செய்த பாதராயணர் (வ்யாஸர்), ‘மற்ற சக்தி எல்லாம் வரும், ஆனால் ஜகத் ஸ்ருஷ்டி -ஸ்திதி ஸம்ஹாராதி சக்திகள் ஜீவனுக்கு வரவே வராது’ என்று தீர்மானம் பண்ணிச் சொல்லியிருக்கிறார்.* இதற்கு பாஷ்யம் பண்ணும்போது தான் நம்முடைய ஆசார்யாள், ‘ஏனிப்படி எல்லாம் ஒரே ப்ரஹ்மமாயிருக்க, ஜீவனும் ஞானமார்க்கத்தில் போய் ப்ரஹ்மமாகவே ஆகிவிடமுடிகிறதென்கிறபோது ஈச்வரனாக மட்டும் ஆக முடியாது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.

செயலில்லாத நிலையில்தான் இரண்டு ஒன்றாக முடியுமே தவிர, செயல் இருக்கும்போது அப்படி ஆக முடியாது. ஏனென்றால் இரண்டு வஸ்துக்கள் ஒரே கார்யத்தைப் பண்ண முடியாது. நான் பேசுகிறேன், ஊர் சுற்றுகிறேன், உங்களை எல்லாம் ஏமாற்றுகிறேன் என்றால், இதுகளைப் பண்ணுபவனாக நான் ஒருத்தன்தான் இருக்க முடியுமே தவிர இன்னொருத்தனும் இதையே ஐக்யமாகிப் பண்ணுவது என்பது முடியாது. கார்யம் த்வைதம். இன்னொன்றை வைத்துதான் கார்யமென்று ஏற்படுகிறது. இன்னொன்று இல்லாமல் அத்வைதமாகத் தன்னில் தானாய் உள்ளபோது மட்டும்தான் கார்யமில்லை. கார்யமுள்ள த்வைதத்தில் எப்படி இரண்டு ஏகமாகப் போவதான ஐக்யம் ஏற்பட முடியும்? நிஷ்க்ரியமான (கார்யமில்லாத) ப்ரஹ்மம் ஜகத் கர்த்தாவாகி இருக்கிற நிலைக்குத்தான் ஈசவ்ரன் என்று பெயராதலால் அவன் த்வைதமாகத்தான் இருந்தாக வேண்டும். ஜீவனுக்குள்ளே அவனுடைய நிஜ ஸ்வரூபமாகக் கார்யமில்லாமலிருக்கிற அத்வைத ஆத்மா இந்தக் கார்யமுள்ள ஈச்வரனோடு ஐக்யமாகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆத்மா அபப்டியேதான் இருந்துகொண்டிருப்பது. அதை ஜீவனாகக் காட்டுகிற மாயா விலாஸத்தை ஈச்ரவன் விலக்கிவிட்டால் ஜீவன் அதுவாகவே ஆகிவிடுகிறான் என்பேதாடு ஸரி. அதை ஈச்ரவன் ஸகுண ரூபத்திலுள்ள தானாக ஐக்யம் பண்ணிக்கொள்வதற்கு இடமில்லை. அது நடக்கமுடியாத ஸமாசாரம். ஈச்வரன் என்ற த்வைத நிலையிலுள்ள வஸ்துவைப் பிடிப்பதும் அநுபவிப்பதும் த்வைத நிலையிலுள்ள ஜீவனுடைய மனஸ்தான். இந்த்ரியத்தில் இழுப்படடு சிற்றின்பத்தில் மாட்டிக்கொள்ளாத பரிசுத்த மனஸாகத்தான் இருக்கட்டும், வேறு எதுவாகத்தான் இருக்கட்டும், அது த்வைத நிலையிலுள்ள ஈச்வரன் என்ற இன்னொன்றை அநுபவிக்கிறது என்பதாலேயே தானும் த்வைத நிலையில் குணங்களோடும் கார்யங்களோடும் இருப்பதாகத்தான் இருந்தாக வேண்டும்.

இந்த லெவலில் மட்டும் நின்று பார்க்கிறபோது த்வைத – விசிஷ்டாத்வைதிகளின் ஸித்தாந்தப்படி அவர்கள் எதை மோக்ஷம் என்று சொல்லுகிறார்களோ அந்த மோக்ஷத்திலும் ஒன்றாய்ப் போய்விடுவதென்பது இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் ஜீவனின் அடி ஆழமான கார்யமற்ற ஆத்மா வரைக்கும் போகாதவர்கள். ஈச்வரனிடம் ப்ரேம பக்தி பண்ணுவது, தாஸ்யம் (பகவத் ஸேவை) பண்ணுவது இவைதான் ஒரு ஜீவனுக்கு மோக்ஷம் என்கிற சாச்வத ஆனந்தத்தைக் கொடுக்க கூடியவை என்ற கருத்துடையவர்கள் அவர்கள். இவர்களுடைய ஈச்வரனுக்கும் நிர்குணம் என்பது நிஜ ஸ்வரூபமில்லை என்கிறார்கள். ஸகுணம்தான் அவர்களுடைய முடிந்த முடிவு. அத்வைதிகளான நாம்தான் ஒரே ஆத்மாவிலேயே ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைச் சொல்கிற மாதிரி, ஒரே ப்ரஹ்மத்தையே ஜகத் கார்யமற்ற நிஷ்ப்ரபஞ்ச ‘நிர்குண ப்ரஹ்மம்’ என்றும், ஜகத் வ்யாபாரம் செய்யும் ப்ரப்ஞச ‘ஸகுண ப்ரஹ்மம்’ என்றும் ஜீவனுடைய நிலையிலிருந்து வித்யாஸம் கல்பித்து இரண்டு மாதிரிச் சொல்கிறோம். அவர்களுக்கு ப்ரஹ்மம் என்றாலே ஸகுண ப்ரஹ்ம ஈச்ரவன்தான். நிர்குணம் கிடையாது. அவர்களுடைய அடிபப்டை அபிப்ராயப்படிப் பார்த்தால் அப்படித்தான் முடிவு பண்ணவேண்டியதாகும். ஜீவாத்மாவுக்கு சாச்வதமான மோக்ஷ நிலை தாஸ்யம் தானென்றால், அப்போது ஈச்வரனும் அந்த பக்திப் பணியை சாச்வதமாக ஏற்றுக்கொள்கிறவனாக, ஏற்றுக்கொண்டு க்ருபையை வர்ஷிக்கிறவனாகவே இருந்தாகவேண்டும். ஒன்றை எடுத்துக்கொள்வது, க்ருபை புரிவது என்பதெல்லாம் கார்யத்தைச் சேர்ந்தவையே; த்வைதத்தைச் சேர்ந்தவையே. எனவே இதை சாச்வதமாகச் செய்யவேண்டியவன் ஈச்வரன் என்பதால் அவன் எப்போதும் ஜீவனை ஐக்யம் செய்தகொள்ளாதவனாக வெளியிலேதான் விட்டு வைத்திருக்கவேண்டும். அதாவது அவர்கள் சொல்கிற மோக்ஷப்படி பேதமாகவே வைத்திருக்க வேண்டும். தன்னை தாஸ்யம் பெறும் மஹாசத்கனாகவும் அவர்களை தாஸ்யம் செய்யும் அல்ப சக்தர்களாகவும்தான் வைத்திருக்கவேண்டும். இவனுக்கும் கார்யம் போகவில்லை, அவர்களுக்கும் கார்யம் போகவில்லை என்றால் இப்படி வேறாகத்தான் இருக்க முடியும்; ஐக்யமாக முடியாது. கார்யமில்லாமல் தூங்குகிறபோது ஒரு சக்ரவர்த்தியும் ஒரு ஆண்டிப் பரதேசியும் ஒரேவிதமான சாந்தாநுபவத்திலிருக்க முடியும். கார்யம் வந்து அவன் சக்ரவர்த்தியாயுள்ளபோது ஆண்டிப் பரதேசி அவன் மாதிரி இருப்பது எப்படி முடியும்?

‘ஸரி, ஈச்வரனோடு ஐக்யமாகி அவனேயாக ஜீவன் ஆக முடியாது என்றாலும் பரம கருணையால் அந்த ஈச்வரனும், தானும் ஈச்வரனாக இருந்துகொண்டு ஜீவனுக்கும் தன் ஜச்வர்ய சக்தி முழுவதையும் கொடுக்கலாமே!’ என்று கேட்டால், அப்படி மட்டும் அவன் செய்யவேமாட்டான். ஏனென்றால் அப்படிப் பண்ணினால் இவனொருவனிடம் அவன் பரம கருணை காட்டுவதே ஜகத் முழுதற்கும் அவன் மஹா கஷ்டத்தைக் கொடுப்பதாக ஆகிவிடலாம். எப்படியென்றால்; அவன் ஜகத் நிர்வாஹத்திலே இப்படியிப்படி இது இது இந்த இந்த ஸமயத்தில் ஸ்ருஷ்டி ஆகவேண்டும், ஸம்ஹாரம் ஆகவேண்டுமென்றெல்லாம் ஸங்கல்பித்து நடத்திக்கொண்டிருக்கிறான். ஒரே ஆஸாமியின் ஸங்கல்பமாக இது நடப்பதால்தான் ஜகத் வ்யாபாரம் சீராக, ஆர்டரோடு இருக்கிறது. ஜீவனுக்கும் பூரா ஈச்ரவ சக்தி ஏற்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஒரிஜனல் ஈச்ரவன் ஸ்ருஷ்டி செய்ய ஸங்கல்பிக்கும்போது இவன் ஸம்ஹாரம் பண்ண ஸங்கல்பிக்கலாம்; அவன் ஒன்றை ஸம்ஹாரம் செய்கிறபோது இவன் அதை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பிக்கலாம். இப்படி ஒரே தாறுமாறாகப் போய், லோகம் பூராவும் chaos என்கிறபடி ஒரே குழப்பமாய்விடும். இந்தக் காரணத்தைக் காட்டித்தான் ஆசார்யாள் ப்ரஹ்மஸூத்ர பாஷயத்திலே எந்த ஜீவனும் ப்ரஹ்மமாகிறானே தவிர ஈச்வரனாவதில்லை என்கிறார்.

ஈச்வரனாகவே, ஆகாமல், ஆனால் அவனுடைய ஜகத் வ்யாபார ‘ஆபீஸ்’ தவிர பாக்கி சக்திகளை ஜீவன் பெற முடியும். அதீதமான ப்ரேம பக்தியின் பரவசத்தில் அவனே ஆகிவிட்டது போன்ற பாவம்கூட ஏற்படலாம். பாவம் தானே தவிர இது நிஜம் இல்லை. பரவச பாவத்தில் உள்ளபோது மட்டும் அவனுடைய சக்தி முழுதையுமே தாங்கள் பெற்றதாக இவர்கள் அநுபவிப்பார்கள். இது ஈச்வராவேசம். அப்புறம் அது போய்விடும். இந்த ஸ்திதியில் இருக்கிறபோதுதான் அநேக மஹான்கள் இந்தலோகம், ஸமுத்ரங்கள், மலைகள், நக்ஷத்ரங்கள் எல்லாங்கூடத் தங்கள் ஸ்ருஷ்டிதான் என்பதுபோலப் பாடி வைத்திருக்கிறார்கள். அந்தப் பரவச நிலையின்போது நிஜமாகவே அவர்களுக்கும் ஈச்வரனைப் போலவே ஸகல விஷயமும் தெரிந்திருக்கும்; ஸகல ஜீவர்களுக்கு உள்ளும் புறமும் இருப்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதனால், ‘உன் ஸ்ருஷ்டியானால் இந்த ஜீவர்களுடைய ஸமாசாரத்தையெல்லாம் சொல்லேன்’ என்று அவர்களிடம் கேட்டால் நம் மாதிரி முழிக்க மாட்டார்கள். ஸர்வஜ்ஞதை கூடிய அவர்களுடைய அந்த நிலையில் எல்லாம் சொல்லிவிடுவார்கள். த்ரிகால ஞானிகளாக வந்தது, வரப்போகிறது எல்லாவற்றையுமே சொல்வார்கள். இம்மாதிரி நிலையிலேயே த்ருஷ்டி – ஸ்ருஷ்டி ஸித்தாந்தமும், இந்த ஒருவன் முக்தனானால் அத்தனை பேரும் சக்தி அடைவதாகச் சொல்கிற ‘ஸர்வமுக்தி’க் கொள்கையும் ஏற்பட்டதாகக் கொள்ளவேண்டும், ஆனாலும் இந்த ஆவேசம் சாச்வதமல்ல. ஜீவன் நிஜமாக ஈச்வரனாவதில்லை.


* ப்ரஹ்ம ஸூத்ரம்: 4-4-17

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அத்வைதக் கொள்கைகளில் சில
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  த்வைத ஜீவனுக்கு ஈசன் தொடர்புண்டு
Next