த்வைத ஜீவனுக்கு ஈசன் தொடர்புண்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஈச்வரன் த்வைத நிலையில் கார்யம் பண்ணும் ஸகுண வஸ்துவாகவே இருந்தபோதிலும், ஜீவனைப்போல் த்வைதத்தை மட்டும் தெரிந்துகொண்டு அத்வைதமான நிஜ ஸ்வரூபத்தை அறியாதவனாக இருக்கவில்லை. ‘வெளியில் த்வைதமாயிருந்து கொண்டு ஈச்வரன் என்ற பெயரில் தெரியும் தானே உள்ளே அத்வைத ஆத்மாவாக, நிர்குண ப்ரஹ்மமாக இருக்கிறோம்’ என்ற ஞானம் அவனுக்கு எப்போதும் உண்டு. தான் வெளியில் ஈச்வரன்; உள்ளே ப்ரஹ்மம் என்று எப்போதும் அவனுக்குத் தெரியும். தன்னிடம், அதாவது வெளியிலே தெரிகிற தன்னுடைய ஈச்வர ஸ்வரூபத்திடம் பக்தியோடு வருபவனைத் தனக்கு உள்ளே அனுப்பி வைத்து ப்ரஹ்மத்திலேயே ஐக்யம் பெறும்படியாகப் பண்ணவும் அவனால் முடியும்.

அர்ஜுனனிடம் பகவான் இதைத்தான் பிற்பாடு கீதையிலேயே முடிவுக்குப் போகிற ஸமயத்தில் சொன்னார். “பக்தியோடு என்கிட்டே வந்தாயானால் அப்புறம் என் உள் ரூபம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆரம்பிப்பாய். அப்புறம் உள்ளேயே போய்விடுவாய்” என்றார்.*

ஜீவனால் நினைக்காமலிருக்க முடியாதென்றும், நினைக்கிற மனஸாலேயே அவனுக்கு ஜீவத்வ identity என்றும் திரும்ப திரும்பச் சொல்லியாயிற்று. நினைப்புக்கு அதீதமான ‘ஆத்மாவை நினை’ என்றால் ஜீவனால் முடியாது. இந்த இடத்திலேதான் ‘ஈச்வரனை நினை’ என்பது. ஜகத் வ்யாபார கார்யம் பண்ணும் த்வைத நிலையிலுள்ள ஈச்வரனை ஜீவனின் த்வைத மனஸால் நினைக்க முடியும். ஆத்மாவுடன் தொடர்புகொள்ள முடியாத ஜீவன் ஈச்வரனோடு தொடர்பு கொள்ள முடியும்.

ஜகத் வ்யாபரம் என்கின்ற மஹா பெரிய விளையாட்டையும்,அதை விளையாடும் மஹா பெரிய சக்தியையும் பூர்ணமாகப் புரிந்துகொள்வதும்,அறிந்துகொள்வதும் ஜீவனால் முடியாத கார்யம்தான். அதனால் பரவாயில்லை. ஈச்வரன், ஜீவனிடம் கேட்பது தன்னிடம் அன்பைத்தான்; தன்னைப் பற்றிய அறிவை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனபடியால், ‘உன் அன்பிலே நீ என்னை எந்த ரூபத்தில் பாவித்தாலும் நான் உனக்கு அன்போடு அநுக்ரஹம் பண்ணுகிறேன்’ என்கிறார். நம் மனஸால் எவ்வளவுதான் பிடிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவனுடைய அகண்ட சக்தியைப் பிடித்தாலும் போதும், அருள் செய்கிறேன் என்கிறார். என்ன அருள் என்றால் அவர் வாஸ்தவத்தில் எப்படியிருக்கிறாரோ அதை நாம் அறிந்துகொள்ளும்படிச் செய்யும் அருள்தான். ஞான ப்ரஸாதம்தான் ஈசனுடைய பேரருள்.

அந்த வாஸ்தவ ரூபமென்பது அகண்ட சக்தனாக இருப்பதுகூட இல்லை; அந்த சக்திக்கும் ஆதாரமான அகண்டமான ஸத்யமாக இருப்பதுதானென்று காட்டி அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தின் ஸாக்ஷாத்காரத்தை தருகிறார். அகிலாண்ட சக்தியின் ஆதார ஸத்யமாகச் சொல்லப்படும் போது ‘ப்ரஹ்மம்’ என்பதேதான் ஜீவனின் நிஜ ஸ்வரூபமாகச் சொல்லப்படும்போது ‘ஆத்மா’ எனப்படுகிறது என்பதை முன்னேயே பார்த்தோம். அதனால் ஜகத்கர்த்தனான ஈசவ்ரனின் வாஸ்தவ ஸ்வரூபமான ப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரிப்பதென்பது ஜீவனானவன் தன்னுடைய நிஜ ஸ்வரூபமான ஆத்மாவை ஸாக்ஷாத்கரிப்பதே என்றாகிறது. பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு இல்லை என்று அப்போது ஆகிவிடும்.

ஆனாலும் ஜீவனுக்கு ஜீவதசையில் ஆத்மாவைத் தெரியவில்லை. இதே ஆத்மாவை ஜகத் வ்யாபாரம் செய்யும் ஈச்வரனாயுள்ளபோது அந்த ஈச்வரன் தன்னை ஆத்மா என்று எப்போதும் அறிந்தவனாக இருக்கிறான். ஜீவமனஸும் த்வைதத்தின் அப்பாற்பட்டது; ஈச்வரனும் த்வைத ப்ரபஞ்ச வ்யாபாரத்திலுருப்பவனே என்றாலும் இப்படி ஒரு பெரிய வித்யாஸமிருக்கிறது. ஜீவனுக்கு ஆத்ம ஞானமில்லை. அந்த ஞானம் வந்தவுடனேயே இவனுடைய ஜீவத்வம் போய்விடுகிறது. ஈச்வரனுக்கோ பரிபூர்ண ஆத்ம ஞானம் ஸதாவும் இருக்கிறது. அது இருப்பதால் த்வைதமான அவனுடைய ஈச்வரத்வம் பாதிக்கப்படுவதில்லை. இப்படி ஒரு பெரிய ‘டிஃபரென்ஸ்’.


* 18.55. இவ்விஷயம் இதே உரையில் சிறிது தள்ளியும் விவரிக்கப்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஜீவன் ஈசனாக முடியாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈசன் -ஜீவன் அவித்யை - அந்தஃகரணம்
Next