ஈசன் – ஜீவன்; அவித்யை – அந்தஃகரணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதைத்தான் அத்வைத சாஸ்த்ரத்தில் சொல்கிறபோது ஜீவத்வம், ஈச்வரத்வம் இரண்டுமே ஸத்ய ஸ்வரூபமில்லையானாலும், ஒரே ஸத்யம் மாயா ஸம்பந்தத்தினால்தான் ஈச்வரன், ஜீவன் என்ற இரண்டாகவும் ஆகியிருக்கிறது என்றாலும் இரண்டுக்கும் ஒரு வித்யாஸம் காட்டி define செய்திருக்கிறது (லக்ஷணம் கொடுத்திருக்கிறது), அதாவது ப்ரஹ்மம் அவித்யையோடு சேர்ந்திருக்கிறபோது ஈச்வரனாகத் தெரிகிறதென்றும், அந்தஃகரணத்தோடு சேர்ந்திருக்கும்போது ஜீவனாகத் தெரிகிறதென்றும் சொல்லியிருக்கிறது. அவித்யை என்பதுதான் மாயை. அந்தஃகரணம் என்பது நாம் பொதுவில் ‘மனஸ்’ என்பது. அதன் அங்கங்கள் மாதிரியான சித்தம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றோடுகூட இருப்பது. (இந்த விஷயம் முன்னேயே பார்த்தோம்.) அதாவது சின்னச் சின்ன மனஸ்களில் கட்டுப்பட்டுக் குறுகிக்கிடப்பவன் ஜீவன். இப்படி ஆத்மாவை குறுக்கினமாதிரி காட்டும் மாயாசக்தியே ஈச்வரன். இருக்கிற ஒரே ஸத்ய வஸ்துவான ஆத்மாவை மறைத்து, அதாவது இல்லாத மாதிரி ஆக்கி, முடிவிலே ஸத்யத்வமே இல்லாத பல ஜீவர்களை இருக்கிற மாதிரிக் காட்டும் சக்தியாதலால் அதற்கு மாயை என்று பேர். அதையேதான் அஞ்ஞானம் என்பது. அஞ்ஞானத்துக்கே இன்னொரு பேர்தான் அவித்யா. (இவற்றுக்குள்ளேயும் ஒன்றுக்கொன்று கொஞ்சம் வித்யாஸம் இருப்பதாக ஒரு அபிப்ராயமிருந்தாலும் இங்கே நான் பொதுக் கருத்தைச் சொல்கிறேன்.) ஸத்யத்தை அறிவதே ஞானம் அல்லது வித்யா. ‘வித்’ என்றாலும் ஞானம் என்பது போலவே அறிவதுதான். மெய்யறிவே வித்யா. ஸத்ய ஞானமாயில்லாமல், இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாவும் தப்பாக அறியப் பண்ணுவதால் மாயைக்கு அவித்யா என்று பேர். ஆனாலும் இப்படி மாயா சக்தியுடன் சேர்ந்திருக்கிற நிலையிலுள்ள ஈச்வரன் அவனைப் பொறுத்தமட்டில் அஞ்ஞானியாக இல்லை. ‘ஈசாந:ஸர்வ வித்யாநாம்’ என்பதாக அவனை வித்யைகளுக்கெல்லாமும் ஈச்வரனாக சொல்லியிருக்கிறது. நம்மை மாயையால் அஞ்ஞானியாக்கினாலும் அவன் அப்படியில்லை. மாயையை அவன் வைத்துக் கொண்டிருக்கிறானாயினும், தானே அதில் கட்டுப்படாமல் வைத்துக் கொண்டிருக்கிறான். நம்மை மட்டும் அந்த மாயா சக்தியினால் கண்டம் கண்டமாகக் குறுக்குகிற அந்தக் கரணத்தோடு சேர்த்துக் கட்டிப்போட்டிருக்கிறான். இதனால் நாம் ஒன்று, இப்படிக் கட்டப்பட்டு ஜீவர்களாக மாத்திரம் இருக்கிறோம்; அல்லது, அவன் கட்டவிழ்த்து விட்டுத் தனக்கு உள்ளே அனுப்பும்போது அஞ்ஞானம் போய் ஆத்மாவை மாத்திரம் இருக்கிறோம். அவனோ த்வைத மாயையிலே கட்டுப்பட்ட மாதிரி ஈச்வரனாக ஜகத் வ்யாபாரம் செய்யும்போதே ஆத்மஞானியாகவுமிருக்கிறான். அவனை ‘லிமிட்’ பண்ணுகிற மாதிரி இருப்பது மாயை என்கிற அவித்யைதான். ஜீவனை லிமிட் பண்ணுவதோ அந்த மாயையிலிருந்து விளைந்த அந்தஃகரணம். இது ஒவ்வொருத்தருக்கும் ஒரு தினுஸாக, ‘தனி மனஸ்’ என்பதாக, ஆகி அவர்களை ரெம்பவும் சின்னதாக குறுக்கிவிடுகிறது. மாயை என்பது ஜெனரல். இத்தனை அந்தஃகரணத்துக்கும் பொதுவானது அது. ஸத்ய ஸ்வரூபத்தை அத்தனை ஜீவர்களுக்கும் மறைக்கும் பொதுவான சக்தியாயிருப்பது மாயை. இப்படி மெய்யறிவை மறைப்பதால் இதை ‘அவித்யை’ என்றாலும், இதைக்கொண்டு ஜகத் வ்யாபாரத்தை நடத்தும் ஈச்வரனோ அவனைப் பொறுத்தமட்டில் இதனால் தன்னுடைய மெய்யறிவை இழக்காமலே இருக்கிறான்.

இதைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டிப் புரியவைக்கும் போது, ‘பாம்பின் வாய்க்குள்ளேயே விஷப்பல் இருந்தாலும் விஷத்தால் அது பாதிக்கப்படுவதில்லை. அதனிடம் கடிபடுபவர்களை மட்டுமே விஷம் தாக்குகிறது. அதே மாதிரி, ‘மாயி’யான, மாயாவியான ஈச்வரனை அவனுடைய மாயை பாதிக்காமல், அவன் அதை யாரைக் குறித்து ப்ரயோகிக்கிறானோ அந்த ஜீவ லோகத்தை மட்டும் பாதிக்கிறது’ என்று சொல்கிறார்கள். மாஜிக் பண்ணுகிறவன், தான் மாயா ஸ்ருஷ்டியாகப் பண்ணும் காட்சிகளை மற்றவர்கள் நிஜமென்று நம்பும்படியாக ஏமாற்றச் செய்கிறானே தவிர, தானே அவற்றை நிஜமாக நினைத்து ஏமாற மாட்டானால்லவா? இப்படித்தான் மாயா ஜகத் ஸ்ருஷ்டிக்காரனான ஈச்வரனும் என்கிறார்கள்.

‘உபாதி’கள் என்பதான லிமிட் பண்ணும் கண்டிஷன்கள் எதனாலும் பாதிக்கப்படாத ஐச்வர்யத்தை உடையவனுக்குத்தான் ‘ஈச்வரன்’ என்று பேர் என்றே ஆசார்யாள் (விஷ்ணு) ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ‘ஈச்வர’ நாமாவுக்கு பாஷ்யம் பண்ணும்போது விளக்கியிருக்கிறார். ‘ஐச்வர்யம்’ என்றால் ஈச்வரனுடைய உடைமை, அவனுடைய தன்மை என்று அர்த்தம். ஆட்சி செய்கிற சக்தி உள்ளவன்தான் ஈச்வரன். ‘ஈச்’ என்ற தாதுவுக்கு ரூல் பண்ணுவது, கவர்ன் பண்ணுவது, கமான்ட் பண்ணுவது என்று அர்த்தம். இப்படி மற்றவற்றை அடக்கி ஆள்பவன் மாயை தன்னையே அடக்கி ஆளவிட்டுவிடுபவனாக இருப்பானா? மாயையோடு கூடியிருந்தாலும் அந்த மாயையையும் ஈச்வரன் அடக்கி ஆள்கிறான். ஆகையால் அது தன்னிடம் அதன் ஸாமர்த்யத்தைக் காட்டி ஒரு தப்பு ‘நானை’த் தோன்றும்படிச் செய்ய விட்டுவிட மாட்டான்.

‘ஜீவன் ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாமல் ஜீவபாவம் வேறாகவும் ஆத்ம ஸ்திதி வேறாகவும் இருக்கிறது; அதே ஸமயம் அவை ஸம்பந்தமே இல்லாதவையும் அல்ல. ஆகையால்தான் ‘ஜீவாத்மா’ என்ற வார்த்தை ஏற்பட்டது’ என்று பார்த்தோம். ஆனால் ஈச்வரன் எப்போதும் ஆத்மாவை அறிந்தவனாக ஞான ஸ்திதியிலேயே இருப்பதால் ஈச்வர பாவம், ஆத்மா என்பதை ஸம்பந்தம் மட்டுமுடைய வேறு வேறான இரண்டு அல்ல என்று தெரிகிறது. ஈச்வரனேதான் ஆத்மாவும், இரண்டையும் பிரித்து ஸம்பந்தப்படுத்தப்படாது. அதனாலேயே ‘ஈச்வராத்மா’ என்று சொல்வதில்லை. ‘பரமாத்மா’ என்றே சொல்கிறோம் என்றும் பார்த்தோம்.

‘அப்போது ‘பரமாத்மா’ என்று ஏன் சொல்லவேண்டும்? வெறுமனே ஆத்மா என்றால் போதாதா?’ என்றால், போதாதுதான். ஆத்மா என்று மாத்திரம் சொன்னால் ஜீவர்களான நம்முடைய நினைப்பில் அப்போது ஜகத்தும் ஜகத் வ்யாபாரமான ஈச்வரனின் கார்யமும் வராமல் போய்விடும். ஈச்வரனும் அற்றுப்போன நிர்குண தத்வத்தையே ஆத்மா என்று நினைப்போம். அதனால் ‘பரம’ என்று அடைமொழி போட்டது.

‘பரம’ அல்லது ‘பர’ என்று ஏன் ஆத்மாவுக்கு முன்னே போட்டதென்றால், ஜீவனைவிடப் பரம ச்ரேஷ்டமான ஸ்தானத்தில் ஈச்வரன் இருப்பதால் அப்படிப் போட்டிருக்கிறது. ஆத்மாவாக மாத்திரம் அவன் இல்லை என்பதால் அவனை ஆத்மா என்று மட்டும் சொல்லமுடியாது. அவனுடைய நிலையிலிருந்து கொண்டு ஈச்வரனாகப் பார்க்கும் போது அவனுக்கு ஆத்மா வேறாக இல்லாததால் ஈச்வராத்மா என்றும் சொல்லமுடியாது. ஆனால் நம்முடைய நிலையிலிருந்து பார்க்கும்போது, ஏக ஆத்மாவே நம்மாதிரி அஞ்ஞானியாகவும், அல்ப சக்தனாகவும் இல்லாமல் நம்மை விட மிக உயர்வான, உத்தமமான ஸர்வஜ்ஞனாகவும், ஸர்வசக்தனாகவும் ஈச்வர வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் போது அப்படியிருப்பவனை அவனுடைய அந்த உயர்வு தோன்றும்படியாகப் பரமாத்மா என்று சொல்லவேண்டியதாகிறது.

இது அத்வைதிகளின் நோக்கிலே சொன்னது. ஒரே ப்ரஹ்மம், ஒரே ஆத்மா என்பவர்கள் ஏன் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு சொல்லவேண்டும் என்பதற்கு இவ்வளவு சொல்லவேண்டியதாயிற்று. உச்சி அத்வைதத்தில் இல்லாமற் போகும் அநேக இரட்டைகளை வ்யவஹார நோக்கில் (empirical existence என்கிறார்களே, அந்த நடைமுறை லோகத்தின் கோணத்திலிருந்து) அத்வைதம் ஒப்புக்கொள்கிறபோது சொல்கிற ஒரு இரட்டைதான் இப்படிப் பரமாத்மா, ஜீவாத்மா என்பதும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is த்வைத ஜீவனுக்கு ஈசன் தொடர்புண்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  த்வைத 'மோக்ஷ'மும் ப்ரக்ருதி (மாயை) யும்
Next