‘ரவை ஸல்லா’ உவமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

திருப்பதியில் ‘ரவை ஸல்லாக் கட்டளை’ என்று பழைய கால ராஜாக்கள் ஒன்று வைத்திருந்தார்கள். தற்காலத்தில் அத்தனை அசுத்தத்துக்கும் கோயில்தான் இடம் என்று ஆக்கியிருக்கிறோம்! ப்ராகாரத்தின் பக்கம் போவதென்றாலே மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதென்று சொல்கிறார்கள். நான் வருகிறேன், மந்த்ரி, கமிஷனர் வருகிறாரென்றால் அப்போது நடப்பது வேறே. மற்ற நாளில் எப்படியிருக்கிறதென்று பக்தர்கள் துக்கப்பட்டுக்கொண்டு என்னிடம் சொல்கிறார்கள். ப்ராகாரத்துக்கு வெளியிலே மட்டுமில்லை; ஸந்நிதிகளிலேயே கொஞ்சங்கூட சுத்தமில்லை. ஸ்வாமி மேலே சார்த்துகிற வஸ்த்ரமே பிடித்துணிக்கும் கேவலமாக அழுக்கேறியிருக்கிறது என்று துக்கப்பட்டுக் கொண்டு சொல்கிறார்கள்.

இதே தேசத்தில் நம் முன்னோர்கள் மனஸுக்குப் பரிசுத்தி தரவேண்டிய ஆலயம், புறத்திலும் பரம சுத்தியாயிருக்க வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாயிருந்து அப்படியே நடத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது திருப்பதியில் ரவை ஸல்லா கட்டளை நடந்து வந்தது. ரவை ஸல்லா என்றால் ‘டாக்கா மஸ்லின்’ மாதிரி நல்ல வெள்ளை வெளேரென்றும், ரொம்ப மெல்லிசாகவும் இருக்கிற துணி, மேலே போட்டுக்கொண்டால் போட்டுக் கொண்டிருக்கிறமோ என்றே தெரியாது, உடம்பெல்லாம் தெரியும். நல்ல நைஸாக, மெல்லிசாக நெசவு பண்ணியிருந்ததால் உடம்போ, தரையோ எதிலே போட்டாலும் நன்றாகப் படிந்துவிடும். துளி ஈரக்கசிவு (உடம்பிலா தரையிலோ) இருந்தால்கூட அப்படியே ஒட்டிக்கொண்டுவிடும். இப்படி அதன் texture இருந்ததால் எதிலே அது கொஞ்சம்பட்டுவிட்டாலும் அந்த அழுக்கு இதில் ஒட்டிக்கொண்டுவிடும். அதோடு மல்லிகைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் என்றுவேறே இருந்ததால் அழுக்கு லவலேசம் இருந்தால்கூட அதைத் தூக்கிக் காட்டிவிடும்.

திருப்பதியில் பெருமாள் ஸந்நிதானத்தில் கீழே கொஞ்சங்கூட அழுக்கில்லாமல் பரம சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று ரொம்பவும் கவனமாக இருந்தார்கள். அபிஷேகமான இடமென்றால் அபிஷேக வஸ்துக்கள் தரையில் படிந்து அழுக்கு ஆகத்தானே செய்யும்? அதோடு தீபத்தின் எண்ணெய் சொட்டுவது முதலானவற்றால் பிசுக்காகி, அர்ச்சகர்கள் அதிலேயே நடக்கிறபோது சொத சொத என்றாகித் தரை அழுக்காகத்தானே ஆகும்? அப்படிப்பட்ட மூலஸ்தானத் தரையை நன்றாகத் தேய்த்துத் தேய்த்து அலம்பிவிட்டு, துணிகளைப் போட்டுப் போட்டுத் துடைப்பார்கள். முதலில் அப்படித் துடைக்கிற துணிகளே கொஞ்சம் அழுக்காகத்தான் இருக்கும்.

நம் வீடுகளில் கூட அப்படித்தான் – துடைக்கிற துணியைப் ‘பழசு’, ‘சுருணை’ என்று சொல்வோம். அது அழுக்காகத்தான் இருக்கும் நாம் சுத்தமாயிருக்கும் போது அது மேலே பட்டாலே பிடிக்காது – அப்படியிருக்கும்! ஒரே அழுக்காய் உள்ள இடத்தை நல்ல துணியால் துடைத்தால் நல்ல துணியும் அழுக்காகி வீணாய்விடும் என்பதால் அதற்கென்றே ஒரு அழுக்குத் துணி வைத்துக் கொண்டிருப்போம். நாம் காலை வைத்து நடக்கும் தரை போன்றவற்றை இப்படி அழுக்குத் துணியால் துடைப்பதோடு நிறுத்திக்கொண்டாலும், நாம் உட்காருகிற மணைப் பலகை முதலானவற்றைத் தேய்த்து அலம்புகிற போது இப்படி ரொம்ப அழுக்காயிருக்கும் துணியால் துடைக்காமல், கொஞ்சம் சுத்தமாயுள்ள துணியால்தான் துடைப்போம். ஸ்வாமி விக்ரஹத்துக்கு அபிஷேகம் செய்து துடைப்பதென்றால் நிச்சயமாகச் சுருணையால் செய்ய மாட்டோம். முதலில் ஓரளவு சுத்த வஸ்த்ரத்தால் துடைத்துவிட்டு, அப்புறம் நன்றாகக் காய்ந்த இன்னொரு சுத்த வஸ்த்ரத்தாலும துடைப்போம்.

திருப்பதியில் விக்ரஹத்தை மட்டுமில்லாமல் ஸந்நிதித் தரையையே எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், பெருமாள் ஸந்நிதானத்தில் முதலில் தடிமனான பழைய வஸ்தரங்களில் ஆரம்பித்து, அதைவிட மேலும் மேலும் சுத்தமான மெலிசான துணிகளால் துடைத்துக்கொண்டே போவார்கள். கடைசியில் ரவை ஸல்லாவைப் போட்டுத் துடைப்பார்கள். துளியூண்டு அழுக்கோ பிசுக்கோ இருந்தால் கூட அந்த வஸ்த்ரம் காட்டிக் கொடுத்துவிடும். இன்னொரு ரவை ஸல்லா, அப்புறம் ஒன்று என்று அந்த வஸ்த்ரத்திலும் கொஞ்சம்கூட அழுக்குப் படியாதவரை துடைத்துக்கொண்டே போக வேண்டும் என்று ராஜாக்கள் கட்டளை வைத்திருந்தார்க்ள. அதில் துளிக்கூட அழுக்குப் படியாமலிருக்கிறதா என்று பரீக்ஷீத்துப் பார்ப்பதற்கென்றே ஒரு மணியக்காரன் போட்டிருந்தார்கள். அவ்வளவு சுத்தமாக, மூலவர் பிம்பத்தை வைத்துக்கொள்கிற மாதிரியே அவர் இருக்கிற கர்ப்பக்ரஹத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

முதலிலேயே ரவை ஸல்லாவைப் போட்டுத் துடைத்தால் அதுவே கிழிந்துபோய்விடும். ஜலத்தை எல்லாம் பெரும்பாலும் தடிமனான சுருணைகளால் துடைத்துவிட்டு, குப்பை கோதுகளையும் அவற்றால் முக்காலே மூணுவாசி துடைத்துவிட்டுத்தான் ரவை ஸல்லாவுக்குப் போகவேண்டும்.

அத்வைதமாக ஆத்ம தத்வத்தை நினைத்து த்யான விசாரம் பண்ணிக்கொண்டிருப்பது வெள்ளை வெளேரென்று மெல்லிசு ரவை ஸல்லா போட்டு மனஸைத் துடைத்து விடுகிற மாதிரி! தற்போது ஒரே மலினமாகவும், ஆசைப்பசை இக்குப் பிசுக்கு என்று ஒட்டிக்கொண்டும், கோபம் லோபம் முதலியவற்றால் கரடு முரடான கல்தரை மாதிரியும் உள்ள நம்முடைய மனஸிலே அந்த த்யான ஸல்லாவைப் போட்டுத் துடைத்தால் இதுவும் சுத்தமாகாது; அதுவும் கிழிந்துபோய்விடும். தடிமனான சுருணையில்தான் ஆரம்பிக்க வேண்டும். அதனால்தான் இந்த்ரியக்ளை வைத்துக்கொண்டு அவற்றைக் கொண்டே பெறுவதான க்ருஹஸ்தாச்ரம அநுபோகங்களில் ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் பழைய அழுக்கை இந்தச் சுரணையும் துடைத்தெடுக்கிற மாதிரி, பழைய கர்மாவைப் போக்கிக் கொள்ளை ரீதியிலே சாஸ்த்ர விதிகளின்படி இதிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மதஸம்பந்தமான அநேக சடங்குகளான கர்மாகளையும் கொடுத்திருக்கிறது. இப்படி அநேக கர்மாக்களைப் பண்ணிப்பண்ணி ஜன்மாந்தர அழுக்குகளைத் துடைத்துக் கொண்ட பின்தான் த்யான விசாரத்துக்குப் போகமுடியும். ஆரம்பத்திலேயே அப்படிப் பண்ணுவது நம்மையே ஏமாற்றிக்கொள்ளவாகத்தான் ஆகும்.

ஆனாலும் ஆரம்பத்தில் கெட்டிச் சுருணையைப் போட்டுத் துடைக்கும்போதே, அப்படித் துடைக்கிறவன், ‘கடைசியிலே மணியக்காரன் ரவை ஸல்லாப் பரீக்ஷை நடத்துவான். அதில் ஜயிக்க வேண்டும்’ என்பதை மறக்காமல், அந்த நினைவுடனேயேதான் அழுந்த அழுந்தத் துடைப்பான். அதுபோல, கர்ம அழுக்குக் கழிவதற்காகவே சாஸ்த்ரங்கள் வர்ணம், ஆச்ரமம் என்று வகுத்து ஒவ்வொரு ஸ்டேஜில் என்னென்ன செய்யவேண்டுமென்று சொல்கிறதோ அவற்றையெல்லாம் நாம் மனோ வாக்காயங்களைக் கொண்டு பண்ணிக் கொண்டிருக்கும்போதும், ‘இதற்கெல்லாம் முடிவு மனோதீதமான, வாக்குக்கு அப்பாற்பட்டதான, கார்ய ப்ரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட ஆத்ம ஸாக்ஷாத் தாரம்தான், அதை ஞானவிசாரத்தால் அடையும் நிலைக்குக் கொண்டு விடுவதற்குத்தான் இப்போது, நாம் செய்யும்படியான எல்லாமும்’ என்கின்ற ஒரு நினைப்பை வைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு பாத்ரத்தை அலம்பும்போது கடைசியிலே சுத்த ஜலத்தை மட்டும்விட்டு, முதலிலே சுத்திக்குப் பிரயோஜனமான புளி, மண் முதலானவற்றின் கோது, தூள் முதலியவை இல்லாமல் அப்புறப்படுத்துகிறோமென்பதோடு, முதலிலே மண்ணையும் புளியையும் போட்டுத் தேய்க்கிறபோதுகூட அவற்றோடு சுத்த ஜலத்தைக் கொஞ்சம் சேர்த்துக் கெட்டியாகக் கரைத்துக்கொண்டுதானே தேய்க்கிறோம்? அந்த மாதிரி ஆரம்பக் காலத்தில் மனோ இந்த்ரியாதிகளால் கர்மாக்களைச் செய்கிற காலத்திலுங்கூட ஆத்ம சிந்தனைத் தீர்த்த்தைக் கொஞ்சம் இவற்றில் தெளித்து கொள்ளத்தான் வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அநேக கர்மாக்களுக்கிடையிலும் த்யானத்துக்கென்று, ஆத்ம விசாரத்துக்கென்று கொஞ்ச காலம் ஒதுக்கத்தான் வேண்டும்.

எது ஒன்றையோ நாம் தேய்த்து சுத்தம் செய்கிறோம் என்றாலும், இத்தனை கஷ்டப்பட்டு நாம் தேய்த்து அலம்பி கடைசியிலே சுத்தமாக ஆகிற அந்த ஒன்று – சொம்போ, தரையோ, விக்ரஹமோ எதுவோ ஒன்று – இருக்கிறதே அந்த ஒன்றை நாம் புதிதாகப் பண்ணவில்லை. அதை நாம் எதுவாகவோ மாற்றிவிடவும் இல்லை. அது இருக்கிறபடி தான் இருக்கிறது. அதன் மேலே சேர்ந்த, ஆனால் அதோடு சேரக்கூடாததான வஸ்துக்களை நாம் போக்கினோமென்பது தான் நாம் பண்ணினதெல்லாம். இப்படித்தான் ஸ்வயம் ஸித்தமாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிற ஆத்மா அதன் ஸ்வபாவமான ஸ்திதியில் ப்ரகாசிக்கும்படிச் செய்வதற்கே தான் செய்கிற ஸாதனையெல்லாம். அதன்மேல் படிந்து அதை மறைத்துக்கொண்டிருக்கிற மாயா ஸ்ருஷ்டியான மனசைப் போக்குவதற்குத்தான் அநேக கார்யங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. மனஸ் என்கிறபோது அந்தஃகரணம், வாக், காயம் எல்லாவற்றையுந்தான் அதில் சேர்த்துவிடுகிறேன். அதே மாதிரி, கார்யம் என்னும்போது மனஸின் கார்யமான எண்ணங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாத்திரம் தேய்ப்பதுபோல
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நல்லதில் கெட்டது கலக்காமலிருக்க
Next