பக்தி – அன்பின் லக்ஷணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அன்பு என்றால் என்ன?

நம் மனஸ் இன்னொரு மனஸில் அப்படியே கலந்து விடுவது.

முடிவுநிலை என்ன? ஆத்மாவிலே மனஸ் கரைந்துவிட வேண்டும். அப்படி ஆத்மாவிலே மனஸ் கரைவதற்கும், இன்னொரு மனஸிலே அன்பாலே கலப்பதற்கும் என்ன ஸம்பந்தம்?

கரைவதற்கு முந்திய ஸ்டேஜ் கலப்பது. சர்க்கரையை முதலில் பாலில் போட்டுக் கலக்கவேண்டும். அப்புறந்தான் கரையும். இரண்டு வஸ்துக்கள் ஒன்றுக்கொன்று அந்யமாக இருக்கும்போது இரண்டும் ஒன்றோடொன்று கலக்கின்றன. அப்புறம் ஒன்றிலே மற்றது கரைய ஆரம்பித்து முடிவாகக் கரைந்து முடிந்தபின் இரண்டு இல்லை; ஒன்றுதான் இருக்கிறது. இது ‘ஐக்யம்’ ஆகிவிடுவது என்பார்கள். ‘ஏகம்’ என்ற ஒன்றின் தன்மையை அடைவதே ‘ஜக்யம்’ பாலில் சர்க்கரையைக் கலக்கும்போது பாலும் சர்க்கரையும் வேறேயாகத்தான் இருக்கும். ‘கலப்பு’ என்பது இரு வேறு வஸ்துக்கள் உள்ளபோதுதான் ஏற்படமுடியும். அது ஏகமான, அத்வைதமான கரைப்பில்தான் முடிந்தாக வேண்டும் என்றில்லை. த்வைதக் கலப்பு அப்படியே நின்றுவிடலாம். அக்ஷதையையும் எள்ளையும் வாத்யார் கலந்து வைக்கிறார். அவை ஒன்றில் இன்னொன்று கரைந்து ஐக்யமாகி விடுவதில்லை.

ஆத்மா வேறு ஒன்றின் கலப்பே இல்லாமல் ஸ்வச்சமான ஏகமாக, தன்னில் தானாக, தனியாக இருப்பது என்று பார்த்தோம். அதனால் அதிலே கொண்டுபோய் மனஸைக் கலப்பது என்றால் முடியாத கார்யம். மனஸ்தான் ஆத்மாவின் கிட்டேயே போகமுடியாதே! இதை எப்படி அதில் போய்க் கலக்கும்படிச் செய்வது? இந்த இடத்தில்தான் இரண்டாக இருந்து கலக்கக்கூடியதாக அந்த ஆத்மாவையே ஈச்வரன் என்று வைத்து பக்தி பண்ண வேண்டியிருப்பது. பரமாத்மா, ஜீவாத்மா என்று த்தைவமாகப் பிரித்து சொல்வது இங்கேதான். ஜீவாத்மா சின்ன மனஸ், பரமாத்மா மஹா மனஸ் என்று பார்த்தோம். சின்ன மனஸ் எந்தத் தொடர்புமில்லாத ஆத்மாவோடு கலக்க முடியாது. ஆனால், அதைப் படைத்த மஹா மனஸோடு கலக்க முடியும். இதை அதுதான் படைத்தது என்பதாலேயே, தாயாரிடம் குழந்தை அன்போட கலக்கிற மாதிரி கலக்க முடியும். அந்தப் பரமாத்மாவும் தாயார் மாதிரி அன்போடு ஜீவாத்மாவுடன் கலந்து அநுக்ரகம் செய்வார், அல்லது செய்யும். ஜீவாத்மா பக்தனாகிப் பரமாத்மா என்ற ஈச்வரனிடம் அன்பில் கலக்கிறான் இரண்டாகக் கலந்தபின் இரண்டறக் கலந்த கரைகிற நிலையை ஈச்வரனே அநுக்ரஹிக்கிறான். அப்புறம் த்தைவமான ஜீவாத்ம – பரமாத்ம பேதம் இல்லாமல் ஒரே ஆத்மா என்றாகிவிடுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அன்பின் பல பெயர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பக்தியால் அத்வைத முக்தி
Next