பிள்ளையார் வாழ்த்தி வரம் கொடுத்தாற்போலவே க்ருஷ்ண பரமாத்மாவின் மேலே சுமத்தின அபவாதம் சிறிது காலத்தில் விலகிற்று. எப்படியென்றால் –
த்வாரகையிலே துர்பிக்ஷம் உண்டாயிற்று. அந்த ஸமயத்தில் காசியிலே ஸகல ஸுபிக்ஷங்களும் நாளுக்கு நாள் வ்ருத்தியாகிக் கொண்டு வருவதாக த்வாரகைக்குத் தகவல்கள் வந்தன. அங்கேதான் அக்ரூரர் இருக்கிறார். அபரிமிதமாக ஆலய கைங்கர்யங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்றும் ஸமாசாரம் வந்தது. அதிலிருந்து ‘இரண்டும் இரண்டும் நாலு’ என்பதுபோல விஷயம் புரிந்துவிட்டது. ‘அக்ரூரரிடம்தான் ஸ்யமந்தகம் இருக்கவேண்டும்; அதன் ப்ரபாவந்தான் இந்த ஸுபிக்ஷம்’ என்று புரிந்து விட்டது.
ஸர்வஜ்ஞரான பகவானுக்கு வெளியிலிருந்து ஒரு ந்யூஸும் வரவேண்டாம். ‘ராய்ட்டர்’ வேண்டாம், ‘பி.டி.ஐ’ வேண்டாம் என்றாலும் இப்போது எல்லாம் நரலீலையாகத்தானே பண்ணிக்கொண்டிருந்தார்? அதனால் இப்படி ந்யூஸ் வந்தததால்தான் தமக்குத் தெரிந்ததுபோல அக்ரூரருக்கு ஆளனப்பினார்.
ஆள் மூலம் ஸந்தேசம் (சேதி) அனுப்பினார். “ஸத்தான தாங்களில்லாமல் த்வாரகை த்வாரகையாக இல்லை. அதனாலே தாங்கள் உடனேயே திரும்பி வந்து யதுகுலத்துக்குப் பெரியவராக இருந்துகொண்டிருக்கவேண்டும், ஸ்யமந்தகம் உங்களிடம் இருந்தால்கூடப் பரவாயில்லை. ஸத்ராஜித்தோ போய்விட்டார். அவருக்கு ஆண் ஸந்ததியுமில்லை. ஸத்யபாமாவுக்குத் தகப்பனார் போய்விட்டதில்தான் துக்கமே தவிர ஸ்யமந்தகம் இருப்பதிலோ போவதிலோ அவளுக்குக் கருத்து இல்லை. எனவே, வேறு யாரிடமும் இருப்பதைவிட நல்ல அனுஷ்டானமும், சீலமும் உள்ள உங்களிடம் அது இருப்பதே நல்லது. (தனக்கு அதை வைத்துக்கொள்ள ஸகல உரிமையும், யோக்யதையும் இருந்துங்கூட பகவான் இதைக் கொஞ்சங்கூடக் காட்டிக் கொள்ளாமல் ஸந்தேசம் அனுப்புகிறார்.) ஆனாலும் என் தமையனாருக்கு ஸ்யமந்தகம் விஷயமாக என்னிடம் ஸந்தேஹம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கே ஏற்பட்டிருக்கும் போது, நாளைக்கு ஜாம்பவதிக்கும் கூட இல்லாத பொல்லாத ஸந்தேஹங்கள் ஏற்படலாம். ஒருவேளை மணி என்னிடம் தான் இருக்குமோ, ஸத்ராஜித்துத்தான் அதைத் தபஸினால் முதலில் பெற்றவராகையால் அவருடைய பெண்ணுக்குப் பிற்பாடு தந்து கொள்ளலாமென்று அதை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறேனோ என்று ஜாம்பவதி ஸந்தேஹப்படலாம். சிங்கத்துடன் சண்டை போட்டு வதம் செய்து மணியை அடைந்த ஜாம்பவானுக்குத்தான் அது ஸொந்தம் என்று நான் நினைத்து, பிற்காலத்தில் அவர் பெண்ணான ஜாம்பவதிக்கு அதைக் கொடுக்கவேண்டுமென்றே ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறேனோ என்று பாமா நினைக்கலாம். அதனால் இவர்கள் ஸந்தேஹமும், த்வாரகா ஜனங்கள் எல்லோருடைய ஸந்தேஹமும் தீர்கிற முறையில் நீங்கள் மணி உங்களிடம்தான் இருக்கிறது என்று பஹிரங்கமாகக் காட்டி, இங்கே நம் ஊரிலேயே அதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாஸம் பணணவேணும். அதனால், தற்போது துர்பிக்ஷம் கண்டுள்ள நம் ராஜ்யமும் ஸுபிக்ஷமடைய உபகாரம் பண்ணவேணும்” என்று சேதி அனுப்பினார்.
சேதியில் நிஜமான அன்பும் அபிமானமும் இருக்கும்போதே ‘டிப்ளமஸி’யும் இருக்கிறது!
நடுவிலே ஏதோ அக்ரூரர் மனஸ் குழம்பிப் போயிருந்தாலும் உள்ளூர அவர் பரம பகாவதரானபடியால் இப்போது பகவானே தன்னைக் கூப்பிட்டனப்புகிறாரென்றதும், பழைய பக்தி கரை புரண்டுவர அப்படியே த்வாரகைக்கு ஓடோடி வந்தார். பகவானின் காலில் விழுந்தார்.
“நீ வெச்சுக்கோ” என்று பகவான் சொல்லியிருந்த போதிலும், ‘ஸகல செல்வமும், அந்த லக்ஷ்மீபதி ஒருத்தனைத்தான் சேர்ந்தது! இத்தனை நாள் அவனுக்குத் தெரியாமல் மணியை நாம் வைத்திருந்து ராஜ்யத்தைவிட்டே கடத்திக் கொண்டு போனது மஹா தப்பு. அபசாரம்’ என்றுதான் அக்ரூரர் நினைத்தார்.
அதனால் ஸ்யமந்தகத்தை பகவானுக்கே அர்ப்பணம் செய்தார்.
பகவான் அவரைவிடப் பிடிவாதமாக, “நானேதான் இதை உங்களுக்குக் கொடுக்கிறேனென்று வைத்தக் கொள்ளுங்கள். நான் ப்ரியமாகக் கொடுக்கிற ஒன்றை நீங்கள் வேண்டாமென்று மறுக்கலாமா? எனக்கு வேண்டியதெல்லாம் என் மீதுள்ள அபவாதம் போகவேண்டும், மணியின் மஹிமையால் த்வாரகை துர்பிக்ஷம் நீங்கி ஸுபிக்ஷமாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று சொல்லி, ஸ்யமந்தகத்தை அக்ரூரரே வைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டார்.
த்வாரகையை நிர்மாணித்தவர், உக்ரஸேன ராஜாவையே ராஜாவாக்கியவர், யதுகுலத்தின் ச்ரேஷ்டமான தலைவர் என்ற முறைகளில் பகவானக்குப் பொது வாழ்க்கையின் (Public life என்கிறார்களே அதில்) முக்யமான ஸ்தானமிருந்தது. இப்படிப்பட்டவர்கள் ஏதோ தங்கள் ஸொந்த கௌரதைக்காக மட்டுமின்றி, ஸமூஹம் இவர்களைப் பற்றிய வம்பு தும்புகளினால் கெட்டுப்போகக்கூடாது என்பதை உத்தேசித்தும் ஸந்தேஹத்துக்கு இடமில்லாதவர்களாக வாழவேண்டும்; தாங்கள் அப்படி வாழ்கிறோமென்று நிரூபித்தும் காட்டவேண்டும். வெள்ளைக்காரர்களுங்கூட, “ஸீஸரின் பெண்டாட்டியானால் ‘ஸஸ்பிஷ’னுக்கு இடம் தராமல்தான் இருக்கணம்” என்று சொல்கிறார்கள். இந்த ரீதியில்தான் பகவான் தம் மீதான மித்யாபவாதத்தைப் போக்கிக்கொள்ளப் பாடுபட்டது; வாஸ்தவமாகவே தம்முடைய கௌரதையிலுள்ள ஸ்வய அபிமானத்தால் அல்ல! ட்ராமா நாடக ரஸத்தோடு இருக்கவேண்டுமென்றே தாம் நிஜமாக இதற்காக வ்யஸனித்ததாக வேஷம் போட்டார்.
இந்த ட்ராமாவைச் சேர்ந்ததுதான் மணி போனதால் த்வாரகையில் துர்பிக்ஷம் என்று காட்டியதும், இப்போது அது வந்து ஸுபிக்ஷம் ஏற்பட வேண்டுமென்றதும். மங்களங்களுக்கெல்லாம் நிலயமான பகவானே த்வாரகையில் இருக்கும்போது மணியால்தானா அதற்கு மேன்மையும் தாழ்மையும் ஏற்படவேண்டும்? ஏதோ கர்மாவுக்காக த்வாரகா ஜனங்களுக்கு துர்பிக்ஷத்தைக் கொடுத்தார். இப்போது அநுக்ரஹிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டார். இதையே லீலையாக ஸ்யமந்தகத்தோடு பொருத்திவிட்டார்.
அவர் சொன்னபடியே அக்ரூரர் த்வாரகையில் ஸ்யமந்தகத்தோடு தங்கினார்.
ஜனங்களுக்கு உண்மை தெரிந்தது. பகவான்மேல் சுமத்தப்பட்ட அபவாதம் நீங்கிற்று.
மணியை க்ருஷ்ணர் அபஹரிக்கவில்லை; அக்ரூரரிடம்தான் அது இருக்கிறது; அதை வைத்துக்கொண்டு அவர் த்வாரகையிலேயே இருக்கிறார்; ஊரும் செழிப்பாகிவிட்டது என்று தெரிந்ததும் பலராமர் விதேஹ ராஜ்யத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார். க்ருஷ்ணரை ஸந்தேஹித்ததற்காக ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
க்ருஷ்ண பரமாத்மா, “இது உங்கள் யாருடைய தப்புமில்லை. நான் சதுர்த்திச் சந்த்ரனைப் பார்த்த தப்புத்தான் எல்லாவற்றுக்கும் காரணம். முடிவில் எல்லாம் நல்லதற்குத்தான் – இது அத்தனையும் விக்நேச்வரர் ப்ரபாவத்தைத் தானே வெளிப்படுத்தியிருக்கிறது?” என்றார்.
க்ருஷ்ண பரமாத்மாவுக்கும் விக்நேச்வரர் பூஜிக்கப்படும் தெய்வமாக இருந்து அநுக்ரஹம் செய்த கதை இதுதான்.