தர்ம மருந்து : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நாம் முதலில் செய்யவேண்டியது கர்ம வ்யாதியைப் போக்கிக் கொள்வது. வ்யாதி எப்படிப் போகும்? வைத்யரிடம் போய், மருந்து வாங்கிச் சாப்பிட்டால் போகும். ஏற்கெனவே வந்துவிட்ட கர்ம வ்யாதி தீரவும், மறுபடி அது வராமலிருக்கவும் மருந்து சொல்லும் வைத்யர் யார்? மநுதான் அந்த வைத்யர். மநு என்றால் மநு முதான யார் யார் தர்ம சாஸ்த்ரங்களைக் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும்*. இதிலிருந்தே அவர்கள் கொடுக்கிற மருந்து என்ன என்று ஊகித்துவிடலாம். நம்முடைய கர்மாக்களை நிர்ணயம் செய்து கொடுக்கும் தர்ம சாஸ்த்ரங்களே தான் மருந்து. இது நான் ஏதோ அழகாக உபமானம் கட்டிச் சொல்வதில்லை. வேதத்திலேயே, ‘மநு என்ன சொன்னாரோ அதுதான் பேஷஜம்’. என்று ‘தைத்திரீய ஸம்ஹிதை’யில் சொல்லியிருக்கிறது, ‘பேஷஜம்’ என்றால் ‘மருந்து’, (‘ஸ்ரீருத்ரம்’, ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமம்’ தெரிநத்வர்களானால், அர்த்தம் தெரியாவிட்டாலும் ‘பேஷஜம்’ என்ற வார்த்தையாவது தெரிந்திருக்கும்.)

மருந்து கொடுத்தால் பத்யமும் வைப்பார்கள். இதிதைச் சாப்பிடப் படாது, சாப்பிட்டாலும் இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று கட்டுப்பாடு செய்வார்கள். அதே போல தர்ம சாஸ்த்ரங்களில் இன்னின்ன பண்ணக்கூடாது, இன்னின்ன அநுபோகங்கள் இவ்வளவுதான் வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் விதிகள், நிஷேதங்கள் இருக்கின்றன.

எப்படியும் என்றைக்கோ ஒரு நாள் அழிந்தபோகப் போகிற சரீர அபிவ்ருத்தியை முன்னிட்டே வைத்யர் தரும் கசப்பு மருந்து, உறைப்புக் கஷாயம் எல்லாம் சாப்பிட்டு, அவர் சொல்கிற பத்யங்களை ஏற்று நடத்தும் நாம் ஆத்மாபிவ்ருத்திக்காக மருந்து சொல்லும் மஹா பெரியவர்களான தர்ம சாஸ்த்ரகாரர்களின் மருந்து, பத்யங்களை அதைவிட நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

முன்னேயே சொன்னேன்: போகப் போக தர்ம கர்மாநுஷ்டானமென்பதே மனஸுக்குப் பிடித்த கூஷ்மாண்ட லேஹ்யம் மாதிரி, யுனானி மருந்து மாதிரித் தித்திக்க ஆரம்பித்துவிடுமென்று.


* இரண்டாம் பகுதியில் ‘தர்ம சாஸ்திரம்‘ என்ற உரையின் முதல் இரு உட்பிரிவுகள் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தன்னியல்பான ஸாதனை முதிர்வு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தவறான குற்றச்சாட்டு
Next