தர்ம – அதர்மங்களும் அத்வைதியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

விஷயம் தெரியாவதர்கள்தான், ‘எல்லாம் மாயை என்பது தர்மம்கூடப் பொய்தான் என்ற அபிப்ராயத்தைக் கொடுத்து, ஜனங்களை எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைக்கச் செய்துவிடும்’ என்கிறார்கள். பொது ஜனங்களுக்கு மாயைக் கொள்கையை ‘டெமாக்ரடைஸ்’ பண்ணுவதற்கு ஆசார்யாளடைய ‘ஸாங்க்ஷன்’ கிடையவே கிடையாது. ஆசார்யாள் மட்டுமில்லை,அத்வைத அநுபவிகளாக வந்த எந்த மஹானுமே தர்மத்தை விட்டு விட்டு ஜனங்கள் எப்படி வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்கும்படியாக மாயைக் கொள்கையை அவர்களிடம் சொன்னதுமில்லை, சொல்லச் சொன்னதுமில்லை.

மாயைதான் என்றாலும் அது நிஜமாகவே விலகும்போது தான் தர்மாதர்ம பேதம், நல்லது – கெட்டது என்று வித்யாஸம், புண்ய – பாப பேதம் அற்றுப்போகுமே தவிர, மாயையிலிருந்து விடுபடாத நிலையில் இந்த பேதம் இருக்கவே செய்கிறது என்றுதான் அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். ‘நல்லதைச் செய்; புண்யம் செய்; தர்மாநுஷ்டானம் பண்ணு’ என்றே வற்பறுத்தியிருக்கிறார்கள்.

ஹடயோகத்தில் நல்ல ஸித்தி அடைந்து உடம்பை வஜ்ரம் மாதிரி ஆக்கிக்கொணடால் அப்போது கண்ணாடியை ஆணியைத் தின்றுகூட, ‘ஆஸிட்’டைக் குடித்துக்கூட ஜீர்ணம்செய்துகொள்ளலாம். அதற்காக ஒரு நோஞ்சானையோ, நார்மலான தேஹாரோக்யமுள்ளவனையோ ஆணியைத் தின்னச் சொல்வதுண்டா? மனஸ் இப்போதுள்ள ஜீவஸ்திதியிலிருந்த மேலேபோய் ஆத்மாவிலேயே வஜ்ரம் மாதிரி ஊன்றி நிற்கிறபோது என்ன அதர்மமானாலும், பாபமானாலும் ஜெரித்துப் போய்விடும். ஆனால், அது லோக ஜனங்களுக்கானது அல்ல. அப்படி அத்வைத சாஸ்த்ரத்தில் இல்லவே இல்லை. இவனை தர்ம மருந்து சாப்பிட வேண்டிய நோயாளியாகத்தான் அது வைத்திருக்கிறதேயொழிய, ஆணியைத் தின்கிற ஹடயோகியாக அல்ல.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தவறான குற்றச்சாட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஞானியும் வினைப் பயனும்
Next