ஞானியும் வினைப் பயனும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஞானி அதர்மம் – தர்மம் இரண்டுக்கும் மேலே போனவன். பாபம், கெட்டது எல்லாமே அதர்மம்தான். தர்மம் என்பதில் புண்யம், நல்லது என்கிற எல்லாமுமே அடங்கிவிடும். இவை எல்லாவற்றுக்கும் மேலே போனவன் ஞானி. ஆத்மாவாகவே இருந்து கொண்டிருக்கும் நிலைக்குக் கீழ்ப்பட்ட த்வைதத்திலேதான் இருட்டு – வெளிச்சம், இன்பம் – துன்பம் என்று த்வந்த்வங்கள் இருக்கிறாற்போலவே நல்லது – கெட்டது, புண்யம் – பாபம், தர்மம் – அதர்மம் என்ற இரட்டைகளும் இருக்கின்றன. மாயா ஸ்ருஷ்டியில் வருகிறவையேயான இவை எதுவுமே ஆத்மாவை பாதிக்காது; அதாவது ஆத்மாவை அறிந்த ஞானியை பாதிக்காது.

இப்படிச் சொன்னதால் அவன் புத்தி பூர்வமாக உத்தேசித்து அதர்மமானபாபம் பண்ணி ஒருத்தருக்கு ஒரு கெடுதலை விளைவிக்கலாமென்றோ, அப்படி அவன் விளைவிப்பானென்றோ அர்த்தம் இல்லை. ஞானிக்கு புத்தி, பூர்வம் உத்தேசம் என்பதெல்லாம் ஏது? “புத்தே:பரதஸ்து ஸ:” என்று புத்திக்கும் மேலாக உள்ள ஆத்மாவில் தன்னை ஸ்தம்பம் மாதிரி நிலைநாட்டிக் கொண்டவன் அவனென்று பகவான் சொல்லியிருக்கிறாரே! ஆகையால் அவன் நம்மைப் போல் புத்தி பூர்வமாக ஏதொன்றும் உத்தேசித்துச் செய்யவே மாட்டான். ஸங்கல்பம் இருக்கும்போதுதான் உத்சேம் எழும்பும். மனஸ் அற்றுப்போன ஞானி ஸங்கல்ப – விகல்ப ரஹிதனல்லவா? ‘நிர்விகல்பம்’ என்பதே அவன் இருக்கும் நிலை.

பழைய கர்மாவில் இந்த ஜன்ம அநுபோகத்துக்கு என்று ஒதுக்கப்பட்டதாக ப்ராப்ரதம் என்று இருப்பதில் இன்னம் அநுபிக்க வேண்டியுள்ள பாக்கியைத் தீர்க்கவே அவனுக்கு சரீரம் இருக்கிறது. ‘ஸஞ்சிதம்’ என்பதாக மூட்டை கட்டிய ஜன்மாந்தர கர்மாக்களிலே இனிமேலே ஜன்மங்களைக் கொடுக்கக் கூடியதாயுள்ள எதையும்விட்டு வைக்காமல் அதை ஞானாக்னியால் எரித்துவிட்டவன் அவன். இந்த ஜன்மதத்திலே பண்ணின கர்மா ‘ஆகாமி’ என்ற பெயரில் ஒன்றுசேர்ந்து மறுபடி ஜன்மம் தராதபடியும் அவன் ஞானத் தீயிலே பஸ்மம் பண்ணிவிட்டவன். ஆனாலும் இந்த ஜன்மாவுக்கென்று ஏற்பட்டு, பலன் கொடுக்கத் தொடங்கிவிட்ட ப்ராப்ரதத்தை மட்டும் அவனால் எரிக்க முடியாது. வில்லிலிருந்து விடப்பட்டுவிட்ட அம்பு மாதிரி அது. அதை நிறுத்த முடியாது. வில்லில் பூட்டி எய்யாமல் ஏற்கனெவே அம்பறாத்தூணியில் இருந்துகொண்டிருக்கிற அம்புகளை அப்படியே தோளிலிருந்த எடுத்துப்போட்டு விடலாம். புதிசாக ‘ஆர்டர்’ கொடுத்த அம்புகளை வாங்கிக்கொள்ளாமல் இருக்கலாம். இப்படிதான் ஸஞ்சித, ஆகாமிகளை ஞானி போக்கிக்கொள்வது. ஆனால், நாணை இழுத்துப் ப்ரேயாகம் பண்ணிவிட்ட அம்பை எப்படி நிறுத்துவது? அப்படித்தான், பலன் தர ஆரம்பித்துவிட்ட ப்ராப்ரத்தை நிறுத்த முடியாததலால் அதை அநுபவிப்பதற்காகவே இன்னமும் அவனுக்கு சரீரம் இருக்கிறது. ஏற்கெனவே புத்தி பூர்வமாக ஸங்கல்பித்துச் செய்ததன் விளைவுகள் மட்டும் இபபோது நேருமே தவிர, புதிதாக அவன் எதையும் நினைத்து, உத்தேசித்துப் பண்ணுவதில்லை.

ப்ராப்ரத விளைவுகளும்கூட நம் பார்வையில் ஏற்படுவதாகத் தெரியுமே தவிர அவன் அதனால் பாதிக்கப்படமாட்டான். உதாரணமாக, பூர்வ ஜன்ம கர்மாவுக்காக அவனுக்கும் ஏதாவது கொடூரமான ரோகம் உண்டாகக் கூடும். அல்லது அவன் வெறும் ‘ஹம்பக்’ என்று ஊரில் கதை கட்டிவிட்டு அவதூறு ஏற்படலாம். ஆனாலும் இந்த ரோகத்தையோ, அவதூற்றையோ அவன் கொஞ்சங்கூடப்பொருட்படுத்தமாட்டான். ‘படுத்தமாட்டான்’ என்று ‘டெலிபிரேட்’டாக அவன் செய்வதுபோலச் சொல்வது கூட ஸரியில்லை. வ்யாதி, அபவாதம் முதலானவை ஒரு பொருளாக அவனுக்கு முதலுக்கே தெரியாது.

வ்யாதி, அபவாதம் ஆகியவற்றுக்குப் பதில் பூர்வ ஸுக்ருதம் காரணமாக ஒரு ஞானிக்கு ஸான்டோ மாதிரியான அரோக்யம், ஒரே கீர்த்தி, சக்ரவர்த்திக்குச் செய்கிறது போல சிஷ்யர்கள் ஸிம்ஹாஸனம் போட்டு பீதாம்பரம் போர்த்தி உட்கார்த்தி வைப்பது என்றும், ஆனால் இவையும் அவனைப் பொறுத்தமட்டில் பொருளாகத் தெரியாது.

ஞானி எதுவுமே ஸங்கல்பித்து ‘டெலிபிரேட்’டாகச் செய்வதில்லை என்று சொல்லவந்தேன். ப்ராரப்த வசாத் என்ன நடக்கணுமோ அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று உடம்பை ஒப்புவித்துவிட்டு, உள்ளே ஆத்மாவிலேயே ரமித்துக் கொண்டிருப்பவன் அவன்.

ஞானயின் ப்ராரப்தம் பற்றி வித்யாஸமான இன்னொரு அபிப்ராயமும் உண்டு.

‘ஞாநாக்நி: ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே’ என்று பகவான்1 சொல்கிறபடி ஞானத் தீ ஸர்வ கர்மங்களையும் பஸ்மமாக்கிவிடும் என்பதில் ப்ராரப்த கர்மமும்தான் அடக்கம்; ஞானொதயத்தில் பரிபூர்ண மநோ நாச, கர்ம நாசம்தானேயொழிய, ப்ராரப்தம் என்று ஒன்றை மட்டும் விட்டு வைத்திருப்பதற்க்கில்லை என்று அபிப்ராயப்படுகிறவர்கள் உண்டு. ‘தீபத்தை ஏற்றி வைத்தால் இருட்டு ஓடிப் போய்விடுகிறாற்போல ஞானோதயத்தின் ப்ரகாசத்தில் மாயையின் இருட்டு ஓடியே போய்விடுகிறது என்பதில் ஸந்தேஹமில்லை. அந்த மாயையின் ஒரு அங்கம், அல்லது ஸ்ருஷ்டிதானே கர்மாவும் கர்ம பலனும்? இப்படியிருக்கும்போது, ‘மாயையே போகிறது, ஆனால், கர்மாவிலே மட்டும் ப்ராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமி என்று இருக்கிற மூன்று தினுஸகளில் இரண்டு மாத்திரம்போய், இன்னொன்று இருக்கிறது’ என்று அர்த்தமாகவில்லையே!’ என்று இவர்கள் கேட்கிறார்கள்.

‘போட்ட பாணத்தைக்கூட அது லக்ஷ்யத்தை அடிக்காமல் மந்த்ரசக்தியால் திரும்ப வாங்கிக்கொள்ள முடிகிறதே! மந்த்ர சக்திக்கெல்லாம் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் ப்ராரப்த பாணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாதா?’ என்று கேட்கலாம்.

ஆசார்யாள் கீதா பாஷ்யத்திலேயே “ஸர்வ கர்மங்கள்” என்று சொல்லியிருப்பது பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டதான ப்ராரப்தம் தவிர ஏனைய ஸர்வ கர்மங்களையும் குறிப்பதே என்று பாஷ்யம் செய்திருக்கிறார். ஆனால் அவரே ‘விவேக சூடாமணி’யில் பத்துப் பதினைந்து ச்லோகங்களில்2 இந்த விஷயத்தை விசாரித்து விமர்சிக்கும்போது வேறு விதமாக முடிவு சொல்கிறார். அங்கே, சொஞ்சமாவது தேஹத்திலே ஆத்ம புத்தி ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தான்’ ப்ராரப்தம் உண்டு என்றும், அடியோடு தேஹாத்ம புத்தி நசித்துப்போனால் அப்புறம் ப்ராரப்தமும் இல்லை என்றும் தீர்ப்புக் கொடுத்திருக்கிறார். ‘அப்படிப்பட்ட ஞானிக்கு ஜன்மா, கர்மா எல்லாமே ஸ்வப்னமாகிவிடுகிறது. அவன் ஞானத்திலே விழிப்புப் பெற்றவன். இப்படிப்பட்டவனுக்கு ப்ராரப்தம் உண்டு என்பது, ஸ்வப்னத்தில் ஒருத்தன் ஸம்பாதித்ததில் ஒரு பங்கு மாத்திரம் அவன் முழித்துக் கொண்ட பிற்பாடு அவனுக்குச் சேர்கிறது என்கிற மாதிரிதான் என்று பரிஹாஸமாகக் காட்டியிருக்கிறார். ‘ஞானி எப்படி த்வைத ப்ரபஞ்சத்தில் இருக்கமுடியும் என்று புரியாத அஞ்ஞானிகளுக்கு ஏதாவது ஸமாதானம் காட்டவேண்டுமென்றே அவனுக்கும் ப்ராப்தமுண்டு என்று சொல்வது’ என்று சொல்லி முடிக்கிறார்.

எல்லா மார்க்கக்காரர்களும் படிக்கும் கீதையில் ஸராசரி மநுஷ்யனின் லெவலில் த்ருப்தியாக எதேனும் ஸமாதானம் சொல்ல வேண்டுமென்பதால் ஞானி விஷயத்தில் ப்ராரப்தத்தை ஒப்புக்கொண்டாரென்றும் ஞானத்திலே விசேஷப் பற்றுள்ளவர்களுக்கேயான ‘விவேக சூடாமணி’யில் உள்ளதை உள்ளபடிச் சொன்னாரென்றும் வைத்துக்கொள்ளலாம். அப்படி பற்றுள்ளவர்கள் அவர்களாகவே ஞான விசாரத்தால், ‘ஞானிக்கு ஏன் சரீர யாத்ரை இருக்கவேண்டும்? அது ப்ராரப்தமில்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக?’ என்று தெரிந்து கொள்ளட்டுமென்று விட்டுவிட்டாரென்று சொல்லலாம்.

ஆனால், நான் இப்போது எல்லா ஜனங்களுக்கும் இதைச் சொல்லிவிட்டேனே உங்களையெல்லாம் ‘நீங்களே ஞானியாகித் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னால் தப்பாகிவிடுமே! ‘நிறையக் கர்மா, பக்தி பண்ணின அப்புறமே ஞான விசாரத்துக்குப் போங்கள்’ என்றல்லவா பல்லவி பாடிக்கொண்டிருக்கிறேன்?

ஸரி, உங்களுக்கு இன்னொரு விதத்தில் ஸமாதானம் சொல்கிறேன் – ஞானிக்கும் ஞானம் வந்தபின் (அதாவது அத்வைத ஸித்தி ஏற்பட்டுவிட்டபின்) ஏன் சரீரம் இருந்து கொண்டு இந்த லோகத்தில் – நம் பார்வையிலாவது – வாழ்க்கை என்று ஒன்று நடக்க வேண்டுமன்பதற்கு ஒரு விதமான ஸமாதானம் சொல்லிப் பார்ககிறேன்.

ஞானம் வந்துவிட்டால் அப்புறம் லோகத்தில் என்ன கஷ்ட – ஸுகம், லாப – நஷ்டம் வந்தாலும் அதொன்றுமே கொஞ்சங்கூட ஒட்டாமல் ஆத்மானந்தத்தில் இருக்கலாமென்பதுதானே சாஸ்த்ரம்? இது நிஜந்தானா என்று தெரியவேண்டுமானால் அப்போது ஞானமடைந்தவன் இந்த லோகத்தில் இருந்துகொண்டு இப்படிக் காட்டினால்தானே நிரூபணமாகும்? அதற்காகத்தான் ஞானியையும் ஈச்வரன் லோகத்தில் இருக்க வைத்திருக்கிறான் என்கலாம். நம்மைத் தலைதெறிக்கப்பண்ணும் எத்தனை புகழ் வந்தாலும், நம்மைத் தலை தூக்க வொட்டாமல் பண்ணும் எத்தனை இகழ் வந்தாலும், நாம் தோளைத் தட்டிக் காட்டும்படியான எத்தனை ஆரோக்யமிருந்தாலும், அல்லது நாம் பயந்து இடிந்துபோய் விழும்படியான எத்தனையோ கோரமான வ்யாதி வந்தாலும் இன்னும் பல தினுஸான இன்ப- துன்பங்களில் எது நேர்ந்தாலும் எல்லாவற்றையும்ஸமமாக, சாந்தியுடன் நிச்சலனமாக ஏற்றுக்கொள்வதே ஆத்ம நிலை என்பது ‘ப்ரூவ்’ ஆக வேண்டுமானால் அதற்கு ‘ப்ரூப்’ ஆக ஞானிகள் லோகத்தில் இருந்து காட்டினால்தானே முடியும்?

‘அத்வைத மோக்ஷம் இஹத்திலேயே பெறக்கூடியது; அதற்கு இஹ பர வித்யாஸமில்லை’ என்ற பின், அதை நம் பார்வையில் இஹமென்று தெரிகிற லோகத்திலேயே இருந்துகொண்டு ஒரு ஞானி அநுபவித்துக் காட்டினால்தானே ஸரியாயிருக்கும்? ஞானம் வந்தவுடன் ஒருவனுடைய சரீரம் அற்றுப்போய் விட்டதென்றால், இஹத்திலே ஞானத்தோடு இருக்கமுடியாது – அதாவது ஞானத்துக்கு இஹம் என்கிற ஒரு வித்யாஸம் தெரிகிறது – என்றல்லவா ஆகிவிடும்?

இன்னொரு காரணமும் சொல்லலாம். ஜனங்களுக்கெல்லாம் நல்லது செய்வதற்காகவே, அவர்களுக்கு உத்தமமான வாழ்க்கைப் பண்புகளை உதாரண புருஷர்களாக வாழ்ந்து காட்டுவதற்காகவே ஈச்வரன்தான் ஞானிகளை லோகத்திலே கருவி மாத்ரமாக வைத்து, அவர்கள் மூலம் தன்னுடைய இந்த ஸங்கல்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறானென்று சொல்லலாம்.

‘வஸந்தகாலம் எப்படி ஒரு ஸொந்த உத்தேசமுமில்லாமல் லோகத்தில் பசுமையையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொண்டு போகிறதோ அப்படி ஞானியும் லோகத்தில் ஹிதத்தைத் தன் உத்தேசமில்லாமலே ஏற்படுத்திக்கொண்டு போகிறான், தான் ஸம்ஸாரத்தை தாண்டினதோடு, பிறத்தியாரையும் ஒரு ஸ்வயநல காரணமும் இல்லாமல் தாண்டுவிக்கிறான்’ என்று ஆசார்யர் சொல்லியிருக்கிறார்.3 இப்படிப் பிறரை உயர்த்துவதற்காக ஒரு ஞானி இருப்பது அவனுடைய உத்தேசத்தினால் இவ்லை. ஏனென்றால், அவனக்கு எந்தவிதமான உத்தேசமும் இல்லை. பின்னே இதுமாதிரி எப்படி நடக்கிறதென்றால், அவன் அப்படியிருக்க வேண்டுமென்று ஈச்வரன் உத்தேசம் பண்ணுவதால்தான்!

ஸம்ஸாரத்தைக் தாண்டுவதில் முதல் அங்கமான தர்ம வாழ்க்கைக்கு ஐடியலாகக்கூட ஒரு ஞானியை ஈச்ரவன் இருக்கப் பண்ணுவதுண்டு. ஜனகர் அப்படித்தானிருந்தார். ஜனங்களுக்குப் புரிபடுவதான தர்மங்களையே ஞானியும் செய்து காட்டுகிறானென்று பகவானும் சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.

ஆகக்கூடி, ஞானிக்கு ஸ்வய உத்தேசம், உத்தேசிக்கும் மனஸ் எதுவும் இல்லாதபோது, அவனாக தர்மம் அதர்மம் என்று நினைத்து எதையும் பண்ணுவதுமில்லை; விடுவதுமில்லை. அவனை ஈச்வரனே கருவி மாத்ரமாகக் கார்யம் பண்ணவைக்கும்போது லோக ஹிதத்துக்காக, லோகத்தின் ஞான உயர்வுக்காக, அல்லது (லெளகிக) தர்மத்துக்கும்கூட ஒரு ஐடியலாகத்தான் இருக்கச் செய்கிறான். ஆகையால் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஞானி அதர்மத்தை, கெட்டதை பாபத்தைப் பண்ண இடமில்லை.

ஆனபடியால் தர்மாதர்மம், புண்ய பாபம், நல்லது கெட்டது ஞானிக்கு இல்லை என்பது ஒரு தத்வமாக இருப்பதுதானே ஒழிய, இதனால் நடைமுறையில் ஒரு ஞானி தர்மும், பாபமும், கெட்டதும் பண்ண இடம் கொடுததுப் போவது என்பதே இல்லை. அவனுக்குள்ளே இந்த எதுவும் ஒட்டாது என்பதால் அவன் இவற்றில் தப்பாக இருக்கிறவற்றின்படி வெளியிலே நடக்கிறானென்று அர்த்தம் ஆகவே ஆகாது.

எனவே, ‘அத்வைத ஸித்தாந்தமானது அதர்மம் முதலானவற்றுக்கு handle கொடுத்துவிடும். அதர்மத்தை easy -யாக எடுத்துக்கொள்ளப் பண்ணிவிடும்’ என்று குற்றம் சொல்வது, நிஜமான ஸாதகர்களுக்கான புஸ்தகங்ளை அப்படியில்லாதவர்கள் படித்துத் தப்பர்த்தம் செய்து கொள்வதன் விளைவுதான்.

தர்ம ஸங்கடமான சில ஸந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு. அப்போது பொதுவிலே ஒரு தர்மத்தை, நல்லதை நிலைக்கப் பண்ணுவதற்காகவே ஒருத்தர் அதர்மமாக ஒன்று செய்ய நேரிடும். அம்மாதிரி ஸந்தர்பங்களில்தான் அப்படிப்பட்ட அதர்மங்கள் ஒரு ஞானியைத் தாக்காது என்பதால் அவனைக் கொண்டு அதைச் செய்து பொது க்ஷேமத்தை உண்டாக்குவதுமுண்டு. மஹாபாரத யுத்தத்தில் மஹா ஞானியான க்ருஷ்ண பரமாத்மா இப்படித்தான் பல செய்து, ஜெரித்துக் கொண்டார். எப்போதாவது இம்மாதிரி நடப்பதை வைத்து, இது ஞானிகளுக்கு மட்டுமில்லாமல் அத்தைவதில் கொஞ்சம் விசுவாஸமுள்ளவர்களுக்கும் ஜெனரல் ரூலாகிவிடும் என்று குறை சொல்வது ந்யாயமே இல்லை.

முதலிலே அதர்மத்தைப் போக்கிக்கொண்டு, அப்புறம் ரொம்ம்ம்….பவும் அப்புறந்தான் தர்மத்தையும் விடும்படி அத்வைத சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது.

‘ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய…’ – ‘எல்லா தர்மங்களையும் விட்டு என்னை சரண் அடை’ என்று பகவான் எப்போது சொன்னார்? கீதையின் கடைசிக் கடைசியிலேதான். ஆரம்பத்திலெல்லாம் என்ன சொன்னார்? இன்னொரு கோடியில் அரம்பித்துத்தான் சொன்னார். “எல்லாவற்றையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகப் போகிறேன்” என்ற அர்ஜுனனை “பேடிப் பயல் மாதிரி” என்று நன்றாகத் திட்டி, “தர்மத்தைப் பண்ணு, ஸ்வதர்மத்தைப் பண்ணு” என்றுதான் மறுபடி மறுபடி வற்புறுத்திச் சொன்னார். அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விஷயம் பாக்கியில்லாமல் கர்மா – பக்தி – ஞானங்களில் எல்லா உபதசமும் கொடுத்து, தன்னுடைய விச்வரூப தர்சனத்தையும் கொடுத்து அவனுடைய மனஸை ரொம்ப உயர்த்தி ‘எலிவேட்’ பண்ணி, அந்த நிலையிலே ‘தர்மத்தையெல்லாம் விடு, என்னிடமே சரணாகதி என்று விழு’ என்றார்.

இப்படித்தான் அத்வைத சாஸ்த்ரங்களில் உத்தம அதிகாரியாக ஒருத்தனை ஆக்கிய பின்தான் தர்மத்தை விடச் சொல்வது.

அதுவுங்கூட, ஸரியாகப் புரிந்துகொண்டால் கார்யத்தில் தர்மத்தை விடும்படிச் சொல்வதில்லை; தர்மாதர்மங்களின் பலாபலனை நினைத்துக்கொண்டு அவற்றைச் செய்கிற மனோபாவத்தைதான் விடச்சொல்வது. உத்தமாதிகாரியாவதற்கு முற்பட்ட நிலைகளிலுள்ள மனிதர்களுக்கு மநு முதலான தர்ம சாஸ்த்ர டாக்டர்களோடு கூட, ஆசார்யாள் முதலான ஆத்ம சாஸ்த்ர டாக்டர்களும் தர்ம மருந்துதான் ‘ப்ரிஸ்க்ரைப்’ செய்திருக்கிறார்கள்.

‘ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’வுக்கு பாஷ்யம் செய்யும் போது ஆசார்யாள் இதை மந்த, மத்யம அதிகாரிகள் தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்ற கவலையுடன், கருணையுடன் நன்றாகத் தெளிவுபடுத்தி அர்த்தம் பண்ணியிருக்கிறார். ‘எல்லாக் கார்யத்தையும் விட்டு விடும்படிச் சொல்வதுதான் பகவான் இங்கே உபதேசிக்க உத்தேசித்தது. ஆகையால் அவர் ‘தர்மம்’ என்று சொல்லியிருப்பதில் அதர்மமும் அடங்கியிருக்கிறதென்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

இப்படிச் சொல்லிவிட்டு ஆரம்ப நிலைகளிலிருக்கும் பெருவாரியானவர்கள் அதர்மத்தை விடுவதே முக்யம் என்பதை ச்ருதி ப்ரமாணத்தால் நிலைநாட்டுகிறார். ஆசார்யாள் சொன்னால் போதுமென்றாலும் வேதத்தின் ‘அதாரிடி’யையே காட்டுவது அவச்யம் என்று நினைத்து கடோபநிஷத்தை மேற்கோள் காட்டுகிறார். ‘துர்நடத்தையை விடாதவன் ப்ரஜ்ஞானம் என்ற உத்தமமான அறிவினால் ஆத்மாவை அடைவதென்பதில்லை’ என்று அதில் சொல்லியிருப்பதைக்4 காட்டி, அதர்மத்தை விடும்படியாக முதலில் உபதேசிக்கிறார். இது பொதுவாக எல்லாருக்கும்.

அப்புறமே உத்தமாதிகாரி அதர்மத்தோடு தர்மத்தையுங்கூட விட்டுவிட வேண்டும் (அதாவது தர்ம – அதர்ம வித்யாஸ சிந்தையை விட்டுவிட வேண்டும்) என்பதற்கு மஹாபாரத சாந்தி பர்வத்தில் ‘த்யஜ தர்மம் அதர்மம் ச’ என்று சொல்லியிருப்பதை ப்ரமாணமாகக் காட்டுகிறார். (மஹாபாரதம் ‘ஐந்தாவது வேதம்’ என்று உயர்த்திச் சொல்லப்பட்டாலும் அது ச்ருதி ப்ரமாணத்துக்கு அப்புறம்தான்.)

‘ ’ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’ன்னு பகவான் சொல்லிட்டாரே, தேவலையே! நல்ல உபதேசமாயிருக்கே! நாம் பாட்டுக்கு தர்மங்களை விட்டுடலாம்’ என்று யாரும் அர்த்தம் பண்ணிக்கொண்டு விடப்படாது. (ஸ்ரீ சரணர்கள் சிரிக்க, ஸபையும் சிரிக்க, சிறிது நேரம் சிரிப்பிலேயே செல்கிறது) முதலிலே அதர்மத்தை விட்டு விட்டு அப்புறம்தான் தர்மத்தை விடுகிற ஸமாசாரத்துக்குப் போகவேண்டும்.

முதலில் அதர்மத்தை விடுவது, அதோடு கர்ம மீமாம்ஸையில் ‘அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா’ என்று சொன்னபடி தர்மங்களை அறிந்து அநுஷ்டிப்பது, அப்புறம் தர்மா தர்மங்களின் பலாபலனை நினைக்காமலிருப்பது, அதற்கும் அப்புறம் உத்தர மீமாம்ஸையில் சொன்னபடி ப்ரஹ்மத்தை அறிவதில் நாட்டம் வைத்து ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸையில் ஸாதனை செய்வது, கான்ஷஸாக (புத்தி பூர்வமாக) ‘தர்மம் பண்ணுகிறேனாக்கும்’ என்று பண்ணாமல் அவன் பாதத்தில் தன் கான்ஷன்ஸையே போட்டுவிட்டு, அதன் அங்கமாக தர்மம் பற்றிய நினைப்பையும் போட்டுவிடுவது, ‘இதுதான்’ எல்லா தர்மத்தையும் விட்டுவிட்டு, என்னை சரணடை’ என்று பகவான் சொன்னதன் தாத்பர்யம் என்கலாம்), முடிவாக தர்மா தர்ம வித்யாஸமே தெரியாத அத்விதீயமான ஸம த்ருஷ்டியைப் பெறுவது என்று படிப்படியாக போகிறவிஷயம் இது. (இதைப்) புரிந்துகொள்ளாத குறைதான், அத்வைதத்தால் தர்மத்துக்கு ஹானி வரும் என்று குறை சொல்வது.

முதலில் அதர்மத்திலிருந்து தர்மத்துக்கு; அப்புறந்தான் தர்மத்திலிருந்து ப்ரஹ்மத்துக்கு. இதைப்பற்றி ஸந்தேஹமே இல்லை.

ஞானிகளைப் பார்த்து, அல்லது, ‘விட்டகுறையில்’ எடுத்தவுடனேயே ஞானமார்க்த்தில் பிடிப்பபுள்ளவர்களைப் பார்த்து, அப்படிப் பிடிப்பில்லாத மற்றவர்கள், அல்லது ஏதோ சில ஸந்தர்ப்பங்களில் மட்டும் பிடிப்பு ஏற்பட்டு அப்புறம் நழுவி எங்கேயோ போய்விடுவதாக உள்ளவர்கள், முதலிலிலேயே தர்மா தர்மமமில்லாத ஆத்ம விசாரம் என்று உட்கார்வது நிஷ்பலனாக ஆகும்; அல்லது விபரீத பலனாகக் கூட ஆகலாம். பிறக்கிறபோதே பறக்கிற பக்ஷிகள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு புழுவும் அந்த மாதிரிப் பண்ண நினைத்தால் எப்படியிருக்கும்? அது புழுவாக இருந்து, அப்புறம் கூட்டுப் புழுவாக ஆகி, அதற்கும் அப்புறம்தானே கொசு, குளவி, வண்ணாத்திப் பூச்சி மாதிரியான ஒன்றாகிப் பறக்க முடியும்? ஸுலபத்தில் மனஸை நிறுத்த ஸ்வாபாவிகமாக, அல்லது ஜன்மாந்த்ர ஸமஸ்காரத்தினால் யோக்யதை பெற்றிருப்பவர்களைப் பார்த்து அவர்களுடைய ஸாதனா மார்க்கத்தை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வதற்கில்லை.

இப்போது ரொம்பவும் வேதாந்தப் பேச்சு ஜாஸ்தியாகி, கர்மா – ‘ரிசுவல்’ எல்லாம் ரொம்பவும் ‘அன்னெஸஸரி’ என்ற ப்ரசாரம் பண்ணுவதாக இருப்பதால் இந்த விஷயத்தை நான் கொஞ்சம் ‘ஓவ’ராகவே ‘ஸ்ட்ரெஸ்’ பண்ணிச் சொல்ல வேண்டியதாகிறது. இப்படிப் பேசுபவர்களில் வேதாந்ததைப் பற்றிய ப்ரஸங்கிகள், ப்ரொஃபஸர்கள், டாக்டர் பட்டம் வாங்கினவர்கள், சீமை ப்ரெஸ்ஸிலே புஸ்தகம் போட்டவர்கள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், ஞானி என்று சொல்லும்படியாக யாராவது இருக்கிறார்களா என்ற தேடினால்…., தேடிக் கொண்டே யிருக்கும்படியதானிருக்கிறது. இவர்கள் பிறத்தியாருக்கும் உபதேசம் பண்ணி, ஏற்கெனவே ஒழுங்கு கெட்ட இன்றைய உலகத்திலே ஏதோ கொஞ்சம் சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ஆசார அநுஷ்டானத்துக்கு வரக்கூடியவர்களையும் ‘வேதாந்தா’வுக்கு நேரே இழுக்கிறார்களே என்று கவலையினால்தான் சொல்கிறேன். இப்போது தார்மிகத்துக்கும் ஆத்மிகத்துக்கும் நாஸ்திகத்தினால் வந்திருக்கிற ஆபத்து போதாது என்று ‘வேதாந்தா’க்காரர்களிடமிருந்து வேறு ஆபத்து வந்திருக்கிறதே என்று விசாரமாயிருக்கிறது. குற்றம் சொல்வதற்காக (இதையெல்லாம்) சொல்லவில்லை. குற்றம் ஏற்படாமல் தடுக்கமுடியுமா என்று பார்ப்பதற்காகத்தான் சொல்கிறேன்.5

தர்மம், அதோடு சேர்ந்த கர்மம், பக்தியுபாஸனை எல்லாம் சேர்ந்துதான் நம்மை த்யான நிலைக்கும், அப்புறம் ஞான நிலைக்கும் கொண்டு சேர்க்கவேண்டும்.


1 கீதை 4-37
2 445லிருந்து 463 முடிய உள்ள ஸ்லோகங்கள்
3 விவேக சூடாமணி-ச்லோகம் 37. சொல்லழகும் மிக்கது:-
சாந்தா மஹாந்தோ நிவாஸந்தி ஸந்தோ வஸந்தவல்-லோகஹிதம் சரந்த: |
தீர்ணா: ஸ்வயம் பீம-பவார்ணவம் ஜநாந் அஹோதுநாந்யாநபி தாரயந்த: ||
4 கடோபநிஷாத் 1-2-24
5 இவ்விஷயமாக மூன்றாம் பகுதியில் ‘ஆசாரம்’ என்ற உரையில் ‘நவீன வேதாந்திகள்’ என்ற உட்பிரிவும் அதை அடுத்த இரு உட்பிரிவுகளும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தர்ம - அதர்மங்களும் அத்வைதியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தர்மமும் அன்பும்
Next