தர்மமும் அன்பும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தர்மாதர்மம் கடந்தவர்களானாலும் ஞானிகள் தர்மமாகவேதான் நடித்திருக்கிறார்களே தவிர அதர்மத்தில் போனதாக நாம் பார்ப்பதில்லை. அப்படியே நல்லது. கெட்டது இரண்டையும் அவர்கள் தங்களளவில் தாண்டியிருந்தலும் லோகத்தின் த்ருஷ்டியில், ‘இவர்களைவிட நல்லவர்களில்லை’ என்னும்படியாகத்தான் பரம கருணையோடு, அநுதாபத்தோடு, தாக்ஷிண்யத்தோடு இருக்கிறார்கள். “ஸர்வ பூத ஹிதே ரதா:” – எல்லா ஜீவ ஜந்துக்களின் நலனிலும் களிப்பவர்கள் என்றும், “ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம்” – ஜீவ குலம் முழுதிடமும் நட்பு கொண்ட தன்னை அறிந்தவர்கள் என்றம் பகவான் அவர்களைச் சொல்கிறார்1.

நல்லதிலெல்லலாம் பெரிய நல்லதான அன்பிலே ஞானிகளை மிஞ்சி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. “அன்பு த்வைதந்தான் – இன்னொன்றை வைத்துச் செய்வதுதான். இந்த லோகமோ மாயை. இதில் தர்மமிருந்தாலென்ன, அதர்மமிருந்தாலென்ன? இதிலிருக்கிற ஜனங்கள் தர்மம் பண்ணினாலென்ன? பண்ணாமல் கெட்டுப்போனாலென்ன? அவர்களிடம் நமக்கென்ன அன்பு, பரிதாபம் வேண்டிக்கிடக்கிறது? அவர்களுக்காக நாம் என்ன உபகாரம் செய்ய இருக்கிறது? உபகாரமும் மாயைதான்” என்று நினைத்து ஆசார்யாள் மாதிரியானவர்கள் உலக உதாரணத்துக்காக எதுவும் பண்ணாமல் ஒதுங்கியிருந்து தாங்கள் பாட்டில் ஆத்மாராமர்களாக வாழ்க்கையைக் கழித்துவிட்டுப் போயிருக்கலாமோல்லியோ? அப்படியானால் அவர்கள் ஜனங்களுக்காக உடம்பைச் சக்கையாகப் பிழிந்து எத்தனை அலைச்சல் அலைந்து, எத்தனை உபதேசங்கள் வாயால் செய்தும் கையால் எழுதிவைத்தும் தொண்டு செய்திருக்கிறார்கள்?

இதிலேயே இன்னொரு புரளி அடிபட்டுப்போகிறது. அத்வைதத்தால் லோகத்தில் தர்மத்திடம் பிடிப்பு போய்விடும், பாபபயம் போய்விடும் என்பதுபோல, அத்வைதத்தின் மாயா – டாக்ட்ரினால் (கொள்கையால்) தான் இந்தியர்கள் கார்ய சக்தியில்லாத சோப்ளாங்கிகளாகி விட்டார்களென்று ஒரு புரளி உண்டு. கார்ய லோகத்தில் ஆசார்யாளைப் போன்றவர்களின் ஸாதனை இது எத்தனை தப்பான வாதமென்று நிதர்சனமாக்குகிறது.2

தர்மத்திலும் அன்பிலும் நன்றாக ஊறியே தர்மா தர்மங்களுக்கு அதீதமான, ப்ரேம – த்வேஷங்களுக்கு அதீதமான ஆத்ம ஸ்தானத்துக்குப் போக முடியும், அப்படியே போக வேண்டுமென்பதுதான் ஸாராம்சம்.

ஒரு சக்கரத்துக்கு இரும்பு பட்டை அடிப்பதென்றால் மாற்றி மாற்றிக் காய்ச்சியும் குளிர்ந்த ஜலத்தைக் கொட்டியும், மாற்றி மாற்றி விரிவடையவும் சுருங்கவும் பண்ணுவது வழக்கம். அப்போதுதான் அது சக்கரத்தை நன்றாகக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். இல்லாவிட்டால் ‘லொடலொட’ என்று விட்டுப் போய்விடும். காய்ச்சி விரிவாக்கணும், ஜலத்தைக்கொட்டி சுருங்கவும் பண்ணணும். இந்த மாதிரிதான் ஒரு ஜீவன் ஆத்ம ஸ்தானத்தைப் போய்க் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்றால் தர்மத்தின் பல கட்டப்பாடுகளால் அதன் கீழான குணம் குறுகும்படியாகவும் பண்ணும்; அன்பின் விசாலத்திலே அதன் மேலான குணம் விரியும்படியும் பண்ணவேண்டும்.

கார்யமே இல்லாமல் ஆகிறதற்காகவே எத்தனையோ வகை வகையான கர்மாக்களை, சடங்குகளை, பொதுத் தொண்டுகளை நிறையப் பண்ணவேண்டும். தூக்கம் வரவில்லை என்று சொல்கிறவர்களிடம் என்ன சொல்கிறோம்? “நன்றாக ஓடியாடி, உழைத்து வேலை பண்ணு. தானே அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வரும்” என்கிறோமல்லவா? இது சரிர ‘ரெஸ்ட்’டுக்கு மட்டும் சொன்னது. ஆத்மாவில் ‘ரெஸ்ட்’ ஆவதற்கும் கர்மா இப்படியே உபயோகமாகிறது.

இதே விதத்தில்தான் வெளி உணர்ச்சிகள் ஒன்றுமே இல்லாமல் ஆவதற்காகவே ப்ரேமையை, அதன் முற்றிய ஸ்தானமாக பக்தி என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக் கொண்ட அதில் ஆசேவம், பரவசம் என்கிற ஸ்திதிக்குப் போகவேண்டும். இப்படிப் பண்ணினால்தான் ‘ஏகப் பேருணர்வு என்கிறார்களே, அதில் கொண்டுவிடும். இப்படியில்லாமல் முதலிலேயே எல்லா உணர்ச்சியையும் போக்கிக் கொள்வது என்றால் முடியாது. அப்படி முடிந்தாலும் அது மரத்துப்போன மாதிரி உயிரில்லாத ஒரு வறட்டு நிலையில் தான் சேர்க்குமே தவிர ஏகப் பேருணர்விலே அல்ல. பலவிதமான உணர்ச்சிகள் எம்பிக் கொண்டேயிருக்கும்போது எல்லாவற்றையும் அடியோடு இல்லாமல் பண்ணிக் கொள்வது ஸாத்யமா? இல்லாவிட்டால் அவற்றிலேயே ரொம்பவும் உத்தமமாக இருக்கப்பட்ட ப்ரேமை என்ற ஒன்றை மட்டும் பெரிசாக வளர்த்துக்கொண்டு, அதிலே மற்ற உணர்ச்சிகள் அமுங்கிப் போகும்படி செய்வது ஸாத்யமா?

பலபேர் சேர்ந்து சளசளவென்று பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாரையும் சைலன்டாக இருக்கச் சொன்னால் அவர்களால் இருக்கமுடிகிறதா? முடிவதில்லை. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷத்துக்கப்புறம் ஒருத்தர் இருண்டு பேர் ரஹஸ்யம் பேசிக்கொள்ள ஆரம்பித்து, அப்புறம் எல்லோருமே அப்படிப் பண்ணி, ஒரு பத்து நிமிஷம் போனால், ரஹஸ்யம் என்பதும் நல்ல சத்தமாகவே ஆகிவிடுகிறது. மனஸின் எல்லா உணர்ச்சிகளையும் ஒரே வீச்சில் அடக்கப் பார்ப்பதும் இப்படித்தான் முடியும். அதுவே, “ஸைலன்ஸ் ப்ளீஸ்” என்று திரும்பத் திரும்பச் சத்தம் போட்டுக்கொண்டிருக்காமல் – (சிரித்தவாறு) “ஸைலன்ஸ் ஸைலன்ஸ்” என்றே சத்தம் போட்டுக் கொண்டிருக்காமல் – “ராம ராமா”, “சிவ சிவா” என்று ஏதோ ஒரு நாமாவை யாராவது ஒருத்தர் சொல்ல ஆரம்பித்தால், அதிலேயும் ராகம் தாளம் எல்லாம் சேர்த்து ரஸம் அதிகமாகும்படி பஜனையாக ஆரம்பித்தால் எல்லாரும் அதையே திருப்பிச் சொல்லி அத்தனை சத்தமும் இந்த நாம சப்தத்திலேயே அடங்கிப் போய்விடுகிறது. அரைமணி, ஒரு மணி கூட, ராத்ரியெல்லாம்கூடப் பல தினுஸாகப் பலுக்கிப் பலுக்கி, ராக தாளங்களை மாற்றி, நாமங்களையும் மாற்றி பஜனை செய்தால் எல்லாரும் மற்றப் பேச்சுப் பேசாமல் அதில் கலந்துகொள்ள முடிகிறது. இது மௌனம் இல்லைதான். ஆனால் அதற்கு ‘நெக்ஸ்ட் பெஸ்ட் (அதற்கடுத்தபடியான உத்தம நிலை) என்று சொல்லலாம். இப்படி நாமாவிலே தோய்ந்து சொக்கிப் போனால், தானே மௌனத்தில் கொண்டு விட்டுவிடும். வெறும் பேச்சு அப்படிப் பண்ணுமா?

அப்படித்தான், அநேக உணர்ச்சிகளில் அன்பு என்பது பக்தியின் பல ரஸ பேதங்களோடு வெளிப்படுகிறபோது, பல விதத்தில் வெளிப்படும்போது அதில்தான் மற்ற உணர்ச்சிகள் அமுங்கி, அப்புறம் இந்த த்வைத அன்பும் அந்த பல பாவங்களில் ஏதோ ஒன்றிலேயே நின்று, பிறகு அத்தைவ அமைதியிலே சேர்க்க முடியுமே தவிர, அப்படியே நேரே மனஸின் எல்லா உணர்ச்சியையும் அடைத்து விடுவதென்றால் முடியாது.


1 கீதை 5.25, 5.29

2 இவ்விஷயமாக இப்பகுதியில் “குருகுலம்; கடிகாஸ்தானம்” என்ற உரையில் “அத்வைதமும் அரசாங்கமும்” எனும் பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஞானியும் வினைப் பயனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனம் பட்டுப்போக அன்பு தேவை
Next