மனம் பட்டுப்போக அன்பு தேவை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

யோக சாஸ்த்ரம் என்பது எல்லா மன ஓட்டத்தையும் நிறுத்தி விடுவதற்குத்தான். ப்ரஹ்மாநந்தம், ஆத்மாநந்தம் என்பவற்றை இதன் மூலம் அடைவது பற்றி யோக சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கவில்லை – ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கவில்லை. ‘மனஸின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருந்தால் போதும் – ஆனாலும் அது ஜடமான தமோ நிலையாக துக்கத்தைப்போல இல்லாமல் புருஷன் (என்ற ஆத்மா) மனஸின் தொடர்பில்லாமல் தனித்திருக்கும் கைவல்ய ஸமாதியாயிருக்கவேண்டும்’ என்று யோக மார்க்கக்காரர்கள் ஒரு தினுஸாக மோக்ஷத்தைச் சொல்கிறார்கள். புத்தருடைய சூன்யம் மாதிரி என்று சொல்வதற்கில்லையானாலும், இவர்களும் அத்வைதத்தின் ஸச்சிதாநந்தமான பூர்ண ஸ்திதியைச் சொல்லாமல், மனஸ் பட்டுப்போன பாழிலேயே இருப்பதான ஒரு உயிர்த் தத்வத்தைச் சொல்பவர்கள்தான்.

ஆனதால் எல்லா உணர்ச்சியையும் ஒரேடியாக அடக்குவதற்கே முதலிலிருந்து ப்ரயாஸைப்பட்டு, அதன் முடிவில் மனஸ் வெறிச்சென்ற முடிவதோடு நின்றால், அப்படிப்பட்ட நிலைகூட இவர்களுக்கு (யோக மார்க்கத்துகாரர்களுக்கு) ஸம்மதமில்லாமலிருக்க முடியாது. ஆனாலும் யோக ஸூத்ரகாரரான) பதஞ்ஜலி இதுபோக நேராக எல்லா உணர்ச்சியையும் அடக்குவது ஸாத்யமே இல்லை என்று நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் “ப்ரதிபக்ஷ பாவநா” என்று ஒன்றைச் சொல்லி அன்பு என்கிற உணர்ச்சியை வளர்த்துக்கொள்ளச் சொல்கிறார்.

’இப்படியிப்படிப் பண்ணாதே’ என்பதாக மனஸின் ஓட்டத்தை அடக்குவதற்காகப் பல யம – நியமங்களை யோக சாஸ்த்ரத்தில் அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னாலும் அப்படி முயற்சி பண்ணினாலும் அதற்கு நேர்மாறாகக் கெட்ட சக்திகள், கெட்ட உணர்ச்சிகள் அவர்களை இழுத்துக் கொண்டேயிருப்பதையும் அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

அதனால்தான் முதலில் கெட்ட உணர்ச்சியைப் போக்கிக் கொள்வதற்காக நல்ல உணர்ச்சிகளை வளர்த்துக்கொண்டு, அப்புறமே உணர்ச்சியல்லாத மனோ நாசத்தை அடைய வேண்டுமென்றே அவரும் வைக்கவேண்டியதாயிற்று. உணர்ச்சிகளிலேயே இருண்டு விதமானவை இருக்கின்றனவென்றும், ஒருவிதமானது மேலும் மேலும் இந்த்ரிய ஸுகத்தில் இழுத்துவிடுவதாயும், இன்னொன்று பாரமார்த்திகத்துக்குத் தூக்கி விடுவதாயும் உள்ளது என்றும் அவர் சொல்கிறார். இந்தக் கீழான உணர்ச்சிகளை க்லிஷ்ட வ்ருத்தி என்றும் சொல்கிறார். க்லிஷ்டம் என்றால் க்லேசத்தை உண்டாக்குவது. அக்லிஷ்டம் க்லேசமளிக்காமல் நல்லதைச் செய்வது. க்லிஷ்டமானவையாக எழும்பும் காமம், க்ரோதம் முதலான வ்ருத்திகளை அப்படியே அடக்கி நசிப்பிக்க முடியாது என்றும், அக்லிஷ்டமான அன்பு, ஈகை, தூய்மை முதலான வ்ருத்திகளாலேயே அவற்றைப் போகப் பண்ண முடியுமென்றும் சொல்கிறார். அப்புறம்தான் இந்த வ்ருத்திகளையும்நிறுத்தி ஸமாதி நிலை அடைவது.

அக்லிஷ்ட வ்ருத்திகள் க்லிஷ்டமானவற்றைப் போல ஜீவனை ஒரே பிடியாகப் பிடித்துக் கொள்வதில்லை என்றும், இவை நன்றாக முதிர்ச்சி பெற்றபின் கைவல்ய ஸமாதி நிலைக்கு இடம் கொடுத்துவிட்டுத் தாங்களும் போய்விடும் என்றும் சொல்கிறார். இன்னின்ன கெட்ட (க்லிஷ்ட) வ்ருத்தி ஏற்பட்டால் அதை அதற்கு ப்ரதிபக்ஷமான – அதாவது எதிர்வெட்டான – இன்னின்ன நல்ல (அக்லிஷட) வ்ருத்தியால் ‘பாலன்ஸ்’ பண்ணி, சமனம் பண்ணி அடக்க வேண்டுமென்று சொல்கிறார்.

இதில் அன்பையே முக்யமாக வைத்து அதில் நாலு பிரிவுகளைச் சொல்கிறார்: மைத்ரீ, கருணா, முதிதா, உபேக்ஷா என்கிற நான்கு. ஸந்தோஷமாக இருந்து கொண்டிருப்பவர்களிடம் காட்டும் ஸ்நேஹித பாவம் – மைத்ரீ. துன்பப்படுபவர்களிடம் காட்டுவது கருணா (கருணை). உத்தம குணமுள்ளவர்களிடம் மகிழ்ச்சி பொங்கிச் செய்யும் அன்பு – முதிதா. அதம குணமுள்ளவர்களிடம், விசேஷமாக அன்பு வைக்க முடியாவிட்டாலும் கொஞ்சம்கூட த்வேஷமேயில்லாமல், அவர்களிடம் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கியிருப்பது உபேக்ஷா (உபேக்ஷை).

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தர்மமும் அன்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உயர் லக்ஷ்யமில்லாவிடில் உயர்நிலை ஸித்திப்பதில்லை
Next