அக்லிஷ்ட வ்ருத்திகள் க்லிஷ்ட வ்ருத்திகளைப்போல ஒருத்தரைத் தங்களிலேயே இழுத்துப் புதைத்துக் கொள்வதில் என்றும், தாங்களும் அற்றுப்போகும் உசந்த நிலைக்குக்கொண்டுபோய் விடுகின்றன என்றும் பார்ததோம். இப்படியேதான், ஸொந்த ஆசையின்மேல் செய்யும் கார்யங்கள்தான் முடிவில்லாமல் தங்களிலேயே ஒரு ஜீவன் ஓயாமல் ப்ரவர்த்திக்கும்படியாகக் குழிபறித்துக் கொண்டு போகின்றன. பற்றில்லாமல் செய்வதான சாஸ்த்ரீய கர்மாக்கள் இப்படிச் செய்யாமல் தங்களை விட்டுவிட்டு ஞானத்துக்குப் பக்குவப்பட ஜீவனுக்கு உதவி செய்கின்றன. இதேபோல, ஈச்வரனை த்வைதமாக வைத்த பக்தியில் செய்யும் ஸகுணோபாஸனையும் அதைக்கூட விட்டுவிட்டு நிர்குணத்தில் அவனாகவே ஐக்யப்படுவதற்கு அழைத்துக்கொண்டு போகிறது.
இதைக் குறித்து ஒரு உபமானம் சொல்லலாம். நம்மை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ளும் கெட்ட சக்திகளை, நம்மிடமிருந்து தங்களுக்கு ஏதாவது ஸ்வய கார்யம் ஸாதித்துக்கொள்வதற்காகக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் துஷ்டர்களின் ஸஹவாஸத்துக்கு ஒப்பிடலாம். அப்போது நாம் போய் உதவி கோரும் போலிஸ்காரர்களைப் போலத்தான் தர்மமான கர்மாக்கள், உத்தம குணங்கள், ஸகுண உபாஸனை முதலானவை. துஷ்டர்களின் தொல்லை நமக்கில்லாமல் செய்கிறவரையில் போலடிஸ்காரர்கள் நம்முடன் ஸம்பந்தம் வைத்துக் கொண்டிருந்து விட்டு, அவர்களைத் துரத்திய பின், அல்லது அரெஸ்ட் பண்ணிய பின், தாங்களும் போய்விடுகிறார்களல்லவா? இப்படித்தான் மேலே சொன்ன நல்ல சக்திகளானவை கெட்டவற்றை அடக்கிப் போட்டபின் தாங்களும் போய்விடுகின்றன.
ஆனால் இதிலே நம்முடைய லக்ஷ்யம் என்ன, நாம் எந்த லக்ஷ்யத்துக்காகத் தாபம் கொண்டு அதிலேயே கருத்தாக இருக்கிறோம் என்பவையும் முக்கியம் என்று தெரிகிறது. நாம் மனஸார எந்த லக்ஷ்யத்துக்கு ஆசைப்பட்டு அதிலேயே கவனம் தப்பாமலிருக்கிறோமோ அதைத்தான் ஈச்ரவன் நிறைவேற்றித் தருகிறானே தவிர, அவனாக அதைவிட உயர்ந்த லக்ஷ்யத்தில் நம்மைச் சேர்ப்பதில்லை என்றே பெரும்பாலும் தோன்றுகிறது. ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால், நாம் ப்ரத்யக்ஷமாகப் பலர் விஷயத்தில் பார்ப்பதிலிருந்து, தர்மமான கர்மங்கள், அன்பு, பக்தியோடு கூடிய ஸகுண உபாஸனை ஆகியவை நாம் அவற்றையே லக்ஷ்யம் என்று நினைக்கிவரையில் தம்மளவோடு மட்டும் நின்றுவிடுவதாகத்தான் தெரிகிறது. ஒருவனுக்கு அத்தைவம் லக்ஷ்யமாயில்லாவிட்டால் இவை அவனைத் தங்களுக்கு மேலேயுள்ள அந்த ஞானநிலைக்குத் தூக்கிவிடாததாகத்தான் தெரிகிறது- அதிலேயே பற்றோடு யஜ்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணுபவர்கள் ஜீவ்ய காலம் முழுதும், எண்பது தொண்ணூறு வயஸு ஆனாலுங்கூட வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்று ஏதாவது யஜ்ஞமே தான் ஒன்றுக்கப்புறம் இன்னொன்று என்று பண்ணிக் கொண்டு போகிறார்கள்; பக்தி ஞான ஸாதனைகளுக்கு வருவதில்லை. ஸோஷல் ஸர்வீஸ் செய்கிறவர்களும் காலம் முழுதும் அங்கே ஆஸ்பத்ரி கட்டலாமா, இங்கே அநாதாச்ரமம் வைக்கலாமா என்பதேதான், கார்ணமாக இருக்கிறார்கள். க்ஷேத்ராடனம் பண்ணுபவர்களும் இப்படித்தான், ‘இன்னம் ராஜஸ்தானில் புஷ்கருக்குப் போகவில்லையே; அஸ்ஸாமில் காமாக்யாவுக்குப் போகவில்லையே’ என்று எங்கேயாவது போய்க்கொண்டே இருக்கிறார்கள். நாம ஸங்கீர்த்தனம் பண்ணுபர்கள் அதையேதான் கடைசி மூச்சுவரை பண்ணிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
ரொம்ப வயஸாகித் தளர்ந்து ஓய்ந்துபோய், இதுகள் எதுவுமே பண்ணமுடியாமல், விழுந்துவிட்டால்கூட அப்போதும், ‘ஐயோ, வாஜபேயம் பண்ணிலியே’, ‘அந்த ஊரில் ‘ஆர்ஃபனேஜ்’ வைக்கலியே!’, ‘ஜம்மு வைஷ்ணவி பார்க்காமலே படுக்கையில் விழுந்துட்டோமே!’, ‘வாயால் நாலு நாமாவைக் கத்தக்கூட முடியாமல் ஆயிட்டோமே!’ என்றுதான் வருத்தப்படுகிறார்களே தவிர, இனிமேலாவது இருந்த இடத்தோடு, வெளி கார்யம், வெளி உபகரணம் எதுவுமில்லாமல் செய்யக்கூடிய ஞான விசாரத்தில் இறங்குவோம் என்று த்ருப்தியாகப் பண்ணக்கூடியவர்களைப் பார்ப்பது துர்லபமாகவே இருக்கிறது.
‘ஸாதாரணமாக ஒரு ஜீவனுக்கு நிறையக் கர்ம சேஷம் இருப்பதால் அது ஒரு ஜன்மாவில் பூராவாகத் தீர்க்கப்படுவதற்கில்லை. அதனால்தான் இவர்கள் ஒரு வாழ்நாள் முழுதும் தாங்கள் எடுத்துக்கொண்ட ஏதோ ஒரு த்வைத ஸாதனை யிலேயே போகவேண்டியிருப்பது; ‘யோக ப்ரஷ்டர்’களின் கணக்கில் இவர்கள் அடுத்த ஜன்மத்தில், இப்போது விட்ட இடத்தில் தொடங்கி அத்வைதத்துக்கு வருவார்கள்’ – என்று இதற்கு ஒரு காரணம், அல்லது ஸமாதானம் சொல்லலாம்.
இன்னொன்று, எனக்குத் தோன்றினதைத்தான் சற்றுமுன் சொன்னேன். அதாவது அத்வைதம்தான் லக்ஷ்யம் என்று வைத்துக்கொள்ளாதவர் விஷயத்திலும், அல்லது அப்படி முதலில் வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆரம்ப கட்டத்திலுள்ள த்வைதமான ஸாதனைகளிலேயே ஒரு பிடிப்பு ஏற்பட்டு அதனால் லக்ஷ்யத்தில் கவனம் தப்பி போனவர் விஷயத்திலும் இந்த ஸாதனைகள் அத்வைதத்துக்கு உயர்த்திவிடாமல் தங்கள் மட்டத்தோடேயே நின்று விடுகின்றன போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
த்வைத மோக்ஷத்தைச் சொன்ன பல மஹான்கள் அப்புறமும் கூட வேறு மஹான்களாக அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவர்கள் எத்தனை தடவை அவதரித்தாலும் அந்த த்வைத்தையேதான் சொல்லியிருக்கிறார்கள். ஏன்? ‘அத்வைதம் வேண்டாம்; த்வைதம்தான் லக்ஷ்யம்’ என்று அவர்கள் இருந்ததாலேயே, ‘உன் இஷ்டப்படியே உனக்குக் கொடுக்கிறேனப்பா’ என்று ஈச்வரனே வைத்திருக்கிறானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
திருடனைப் போக்கிய பிற்பாடு, அப்படிச் போக்கினார்களே என்பதால் போலீஸ்காரர்களிடமே ப்ரியம் ஏற்பட்டு அவர்களிடம் உறவு கொண்டாடினால் எப்படி? இப்படித்தான், ரொம்பவும் கெட்ட சக்திகளிலிருந்து விடுபடுவதே முதல் தேவையாக இருப்பவர்கள், முடிவாகச் சேரவேண்டிய லக்ஷ்யத்தை விட்டுவிட்டு, இடைநிலையில் கெட்டதைப் போக்கிக் கொள்வதற்காகப் பின்பற்றிய ஸாதனா மார்க்கத்திடமே பற்று வைத்து அதையே லக்ஷ்யமாக்கிக்கொள்ளும் போது ஆகிறது.
தேவாஸுரப் போரில் முதலில் அஸுரர்கள்தான் போக வேண்டும். அதை தேவ சக்திகளாலேயே ஸாதித்துக் கொள்ளவேண்டும். அப்புறம் தேவர்களையே பிடித்து வைத்துக்கொண்டால், இவர்களும் நமக்கு வேறுபட்டவர்கள்தானே? நம்முடைய ஆத்மா இல்லையே! நல்ல குணங்களைத்தானே தேவ சக்திகளென்றும், கெட்ட குணங்களை அஸுர சக்திகளென்றும் சொன்னோம்? எந்த குணமானாலும் அது நிர்குண ஆத்மாவைக் சேர்ந்ததாகாதே! குணம் மனஸின் ஸமாசாரமல்லவா? இந்த மனஸ் என்பது ஆத்மாவுக்கு வேறானது, அதனால்தான் த்வைதத்தின் அத்தனை கஷ்டமும் என்றுதானே விஸ்தாரமாகப் பார்த்தோம்? ஆகையால் நல்ல குணங்களென்பதும் போனால்தான் ஆத்மாநுபவம் என்ற நித்யானந்தத்தைப் பெறமுடியும். வேதாஸுர யுத்தத்தில் அஸுரரைப் போக்ககடித்துக் கொண்டால் மட்டும் போதாது. அப்புறம் தேவர்களும் ஆத்ம சாந்திக்கு அன்யமாகவே இருப்பார்கள். ‘அன்யம்’ என்ற வார்த்தை ‘சத்ரு’ என்பதைப் போலக் கடுமையாயில்லாவிட்டாலும் இரண்டுக்கும் தாத்பர்யம் ஏறக்குறைய ஒன்றேதான். ஆகையால் முடிவாக அன்ய ஆஸாமியே இருக்கப்படாது. யுத்தம் செய்யவே தெரியாத ஆத்மா மட்டுமாக இருக்க விட்டாலொழிய முடிவான விமோசனமில்லை.
ஜீவனுக்குள்ளே தேவாஸுர யுத்தம் நடக்கிறது என்று சொல்கிறபோது ஜீவன் என்கிறது யார்? ஜீவபாவமுள்ள மனஸ்தான்; ஆத்மா இல்லை. ஆத்மாவை எந்தப் போராட்டமும் பாதிக்கமுடியாதே! யுத்தத்துக்கு ஆச்ரயமாக, அடிப்படையாக இருக்கிற ஜீவனே போனால்தான் ஆத்மாவின் ஸாக்ஷாத்காரம் ஏற்படும். யாரோ ஒரு ஆஸாமியை வைத்துத்தான் ஒரு யுத்தம் என்றால் அந்த ஆஸாமியே போய்விட்டால்தானே அப்புறம் நிச்சயமாக யுத்தம் நடக்கவே முடியாது? மனஸ் என்ற ஆஸாமியே போனால்தான் தேவாஸுர யுத்தம் தீருவது. முதலில் கெட்ட சக்திகளான காம க்ரோதாதிகளை ஜயிக்கச் சொன்னார் பகவான். அப்புறம், நன்றாக ஆகிவிட்ட மனஸை, அதாவது தேவசக்திகள் கூடியதாக உள்ள மனஸை வைத்துக்கொண்டு அப்படியே இருந்துவிடும்படியாக அவர்கள் சொல்லவில்லை. அந்த மனஸையும் அதற்குப் பரமான ஆத்ம வஸ்துவில் அடக்கி, இல்லாமல் பண்ணிவிடு என்றுதான் முடித்திருக்கிறார்.