தேவசக்திகளும் பீடிப்பதுண்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நாமே தேவசக்திகளை, அல்லது இன்னொரு உபமானம் சொன்னபடி போலீஸ்காரர்களை விடமாட்டேன் என்று ஒட்டிக்கொள்வது ஒன்று. இன்னொன்று, அந்த சக்திகளே அவற்றை நாம் விட்டுவிட்டு மேலே ஆத்மாவுக்கு போக முடியாதபடி நம்மைத் தடுத்துப் பிடித்து வைத்துக் கொள்வதாகும். நமக்கும் அவற்றின் பிடிப்பு பிடித்து உடன்பட்டு இருந்துவிடலாம். நமக்கு அவை தரும் ஸந்தோஷம், சக்தி முதலானவற்றில் மயங்கி ஏமாந்து அவற்றின் பிடிப்பை ரஸித்து ஏற்றுக் கொண்டுவிடலாம்.

போலீஸ் டிபார்ட்மென்டிலேயே சில பேர் – இந்தக் காலத்தில் ‘கரப்ஷன்’ இல்லாத இடமேயில்லை என்கிறார்கள் அதனால் போலீஸில்கூட யாராவது சில பேர் – திருடர் உபத்ரவத்தைத் தாற்காலிகமாகப் போக்கினவிட்டு, அப்படிச் செய்ததற்காக ப்ரதி ப்ரேயாஜனம் எதிர்பார்த்துக்கொண்டு, இந்த மாதிரி ப்ரயோஜனம் விடாமல் கிடைத்துக் கொண்டே இருக்கணும் என்பதற்காகத் தாங்களே கூடத் திருட்டுப் பயத்தைப் பரப்பிக்கொண்டு ஜனங்களோடு உறவு விடாமல் செய்துகொள்வதாகக் கேள்விப்படுகிறோம். இதைப் போலத்தான் தேவ சக்திகளிலேயே ரொம்பவும் உத்தமமானவையாக இல்லாமல் மத்யமமாகவும் மத்யமத்தைவிடக் கீழாகவும் இருக்கிறவை ஒருத்தனைத் தங்கள் ஆளுகையிலிருந்து போய்விடாமல் இருத்திக் கொள்ளப் பார்ப்பதும் உண்டு.

மநுஷ இயற்கை என்பதில் அடங்கிய அநேக குணங்களுக்கு அஸுர, தேவ ரூபங்கள் உண்டு. வெளி இயற்கை என்பதன் force-க்கும் ‘சக்திகளுக்கும்’ தேவாஸுர ரூபங்கள் உண்டு. இவற்றிலே தேவத்தன்மை உடையவை என்று சொல்லக்கூடியவற்றில் சிலவும்கூட ஒரு ஜீவனை எல்லலாத் தன்மைகளுக்கும் அப்பாற்பட்டட (ஆத்ம) ஸ்தானத்துக்குப் போகவிடாமல், தங்களிடமே கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மூலமாகத் தங்கள் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுண்டு.

ஸாதகர்களுக்கு ஒரு கட்டத்தில் ஸித்தி, கித்தி என்று ஆச்சர்யமான சக்திகள் உண்டாகி அவர்கள் அதிலேயே ஒரேயடியாக ஈடுபட்டு ஆத்மாவை மறந்துபோவது இம்மாதிரியான சக்திகளின் ஆதிக்கத்தினால்தான்.

இவை எல்லாவற்றுக்கும் மேலே உள்ள ஈச்வரனிடம் நமக்கு அசையாத பிடிப்பு இருந்துவிட்டால் அப்போது இவற்றால் நம்மிடம் வாலாட்ட முடியாது. ஈச்வரன் என்று ஸகுணமாகத்தான் நினைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆத்மா என்று அந்த நம் இறுதி லக்ஷ்யமான வஸ்துவை, அதுதான் நமக்கு லக்ஷ்யம் என்று குறி தப்பாமல் கவனத்தில் வைத்துக் கொண்டிருந்தாலும் அதிலே நம்மை சேரப் பண்ணும் ஈச்வரன், இடையூறு உண்டாக்கப் பார்க்கும் அஸுரர்கள் தேவதைகள் ஆகியவர்களுடைய பீடிப்பு நமக்கு இல்லாமல் பார்த்துக்கொள்வான்; பார்த்துப் பார்த்து ரக்ஷிப்பான்.

ஈச்வர சக்தியை நிரம்பப்பெற்று, தாங்கள் பரப்ரஹ்ம வஸ்துவே என்ற ப்ரஜ்ஞான நிலையில் எப்போதும் உள்ளுர உள்ள உத்தம தேவதைகள் ஜீவனுடைய ஞான லக்ஷ்ய ஸித்திக்கு இடையூறு செய்யவே செய்யாது. இப்படிப்பட்ட ரத்ன த்ரயமாக ஈச்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு மூன்று பேரும் இருக்கிறார்களென்று அநேக காரணங்கள் காட்டி அப்பய்ய தீக்ஷிதர் நமக்கு உறுதிப்படுத்திக் கொடுத்திருக்கிறார். இன்னம் பிள்ளையார், ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி லக்ஷ்மி, ஸரஸ்வதி போன்றவர்களும், ராம-க்ருஷ்ணாதி அவதாரங்களும் இம்மாதிரியானவையே.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உயர் லக்ஷ்யமில்லாவிடில் உயர்நிலை ஸித்திப்பதில்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருமூலர், திருவள்ளுவர் அறிவுரை
Next