திருமூலர், திருவள்ளுவர் அறிவுரை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மொத்தத்தில் விஷயம் என்னவென்றால், அத்வைதந்தான் குறி என்றோ, அல்லது அத்வைதம் வேண்டவே வேண்டாம் என்பதாக த்வைதமே குறியாகவோ ஒரு ஜீவன் எப்படி நினைக்கிறானோ அதற்கேற்பத்தான் அவர்களுக்கு அத்வைத அல்லது த்வைத ஸித்தியை ஈச்வரன் அருளுகிறான்

‘ஆசை அறுமின்கள்! ஆசை அறுமின்கள்!
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!’

என்று திருமூலர் சொன்னதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்று திருவள்ளுவர் சொன்னதும் ஒன்றுக்கொன்று வித்யாஸமாயிருப்பதாகத் தோன்றினாலும், இப்போது நாம் பார்த்துக்கொண்டு வந்த இரண்டு விதமானவர்களில் ஒவ்வொருத்தரை உத்தேசித்துச் சொன்னதுதான். இப்படிப் புரிந்துகொண்டால் இரண்டு உபதேசமுமே ஸரியானதுதான் என்று தெரியும்.

‘ஸத்ய தத்வம் வாஸ்தவத்தில் எப்படியிருக்குமோ அப்படியே நமக்குத் தெரியட்டும். நாம் அதை ஸகுணமாக நினைத்து த்வைதமாக பக்தி பண்ணினாலும் அது நிர்குணமாக இருந்து அத்வைதமான ஞானத்தினால்தான் அடையத்தக்கதாக இருந்தால் நாம் அதை அப்படி அடையும்படியாகவே அது பண்ணுமானால் பண்ணட்டும்’ என்று நினைப்பவர்களுக்கு அல்ல திருமூலரின் உபதேசம். ஸகுணமான ஈச்வரனிடம்தான் பற்று வைப்பது என்பதாக (பக்தி எனும்) தங்களுடைய ஸாதனா மார்க்கத்திலேயே பிடிவாதமான பிடிமானம் உள்ளவர்களைப் பார்த்தே திருமூலர் உபதேசம் செய்திருக்கிறார். ‘இப்படிப் பண்ணாதீர்கள்! ஈச்வரனிடமே யானாலும்கூட ஸகுணமாகத்தான் அவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டு விடாதீர்கள். ‘அந்த ஈச்வரனுக்கும் இன்னொரு ஸ்வரூபம், இந்த ஈச்வர ஸ்வரூபத்தைவிடவும் ஸத்யமான ஒரு ஸ்வரூபமிருக்குமானால் அதன் அநுபவம் நமக்குக் கிடைக்கட்டும்’ என்று திறந்த மனஸோடு இருங்கள்’ என்பதைத்தான் ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆசைப்பட்ட லக்ஷ்யத்தைத்தான் ஈச்வரன் கொடுப்பான், அதற்கு மேலே கொடுக்க மாட்டானாதலால், அவனாகிய ஸகுண ஸ்வரூபத்திலே ஆசை வைத்தால் அதற்குமேல் பெற முடியாது என்ற அபிப்ராயத்தில் சொல்கிறமாதிரி இருக்கிறது.

எல்லாவிதமான ஆசையும் போகவேண்டும்; (ஆசை யெல்லாம் போவதென்றால் மனஸ் போனால்தானே முடியும்?) – இப்படி மனஸ் அடிபட்டுப் போய் ஞானஸித்தி பெற வேண்டுமென்று லக்ஷ்யம் வைத்துக்கொண்டிருப்ப -வர்களைப் பார்த்து ஆசார்யாள் ஞானத்துக்கு ஸகுணோபாஸனையை உபாயமாக வைத்தார். அவர்களை உத்தேசித்தேதான், ஆசார்யாளைப்போலத் திருவள்ளுவரும் ஈச்வரனிடம் பற்று வைக்கச் சொல்கிறார். இவர் ‘அட்வைஸ்’ பண்ணுகிறவர்களுக்கு ஈச்வரனிடம் பற்று இருந்தாலும் அதுவே லக்ஷ்யம் என்று வைத்துக்கொண்டு விடவில்லை. எல்லாப் பற்றும் அற்றுப்போன ஸ்திதிதான் அவர்களுடைய லக்ஷ்யம். அதே மாதிரி அப்போது அந்த ஈச்வரனும் இவர்களை த்வைதப் பற்றுடன் நிறுத்திவிடுவதில்லை. த்வைதப் பற்றோடு நின்று போககிறவர்களிடம் அவனும் அப்படி த்வைதமான பற்றுள்ளவனாகத்தான் தன்னையும் நிறத்திக்கொள்கிறான். எப்போதும் அவர்களுடைய பக்தியை ஏற்பது, தாஸ்யத்தை ஏற்பது, கருணை செய்வது என்றால் அவனும் த்வைதப்பற்றுறவுதானே அவர்களிடம் வைத்திருப்பதாக அர்த்தம்? ஆனால், அங்கே திருவள்ளுவரோ அவனைப் பற்றற்றான்’ என்றே சொல்கிறார். கடவுள் என்றோ, பகவான் என்றோ, ஆண்டவன் என்றோ எந்த வார்த்தையாலும் ஈச்வரனைச் சொல்லாமல் ‘பற்றற்றான்’ என்றே இங்கே அத்விதீய வஸ்துவாகப் பெயர் கொடுத்திருக்கிறார். ‘நீ ஈச்ரவன் என்று பற்றிக்கொள்வதன் வாஸ்தவத்தில் பற்றற்ற அத்வைத ஸ்வரூபம். அதனால் நீ லக்ஷ்யமாகக் கொண்டிருக்கிற பற்றற்ற அத்வைத ஸ்திதியில் உன்னை அவன் சேர்த்துவிடுவான். பற்று அறுக்க விரிம்பியும் முடயாதவர்கள் ஞானத்துக்கே நேரே ப்ரயாஸை பண்ண வேண்டியதில்லை. அவர்களுடைய லக்ஷ்யமான பற்றற்ற பொருள்தான் பற்றும் படியாக ஈச்வரனாக ஆகியிருப்பது. இப்படி ‘ஆகியிருப்பதாக’ இல்லாமல் உள்ளபடி இருப்பதான நிலையில் அந்த ஈச்வரனே ‘பற்றற்றான்’ என்பதை மறந்து போகாமல் அவனை பக்தியில் பற்றிக்கொண்டால் அவனே பற்றுவிட்ட ஞானத்துக்குத் தூக்கி விடுவான்’ என்று இத்தனை அபிப்ராயத்தையும் உள்ளே அடக்கித்தான் ரத்னச் சுருக்கமாக இருண்டு வரி பண்ணிவிட்டார்.

ஆசையிலேதான் ஆரம்பித்தோம். அனர்த்த பரம்பரை அதிலிருந்துதான் என்று ஆரம்பித்து எத்தனையெத்தனையோ தினுஸாக ஆசைகளைப் பற்றிப் பார்த்தோம். ஆசையின் அந்த அஸுர பரம்பரைகளை தேவ சக்திகள் என்று சொல்லக் கூடிய உயர்ந்த நல்ல குணங்களால் ஜயித்து அடக்க வேண்டுமென்று பார்த்தோம். கடைசியில் பார்த்தால் அந்த நல்ல குணங்களான தேவ கணங்களும்கூடக் கெடுதல் பண்ணிவிடமுடியும். எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிற ஈச்வரனிடம்கூட ஆசை என்று வைத்துவிட்டால் ஸத்ய ஸாக்ஷாத்காரம் கஷ்டம்தான் என்கிற அளவுக்குத் தெரிகிறது. நம்முடைய குறி ஆதார ஸத்யந்தான் என்று திர்மானமாக வைத்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய மற்ற குறிகளை நாம் அடையப் பண்ணியே ஈச்வரன் மாயம் செய்துவிடுகிறான் என்று நினைக்கும்படியாக இருக்கிறது. இப்படிப் பலகாலம் பண்ணினாலும், அப்புறம் ‘ஐயோ, பாவம்’ என்று அவனே உண்மையான, குறிதப்பாத ஞானதாஹத்தைக் கொடுத்து, அப்புறம் அதைப் பூர்த்தி செய்வானென்று வைத்துக்கொள்ளலாம்.

என்றாலும் அவன் என்றைக்கோ அப்படிச் செய்கிறபடிச் செய்யட்டுமென்று இருந்துவிடாமல் நாமும் இடைநிலை ஸாதனைகளில் அல்லது ஸாதனைகளின் இடைநிலையில் பெற்ற அநுபவங்கள் சக்திகள் முதலியவற்றிலேயே ஆசை மோஹம் கொள்ளாமல், ஆசைக்கே இடம் தராததான அத்வைத லக்ஷ்யத்தை அப்போதப்போதும் நினைத்து உறுதிப்படுத்திக் கொள்வதுதான் ச்லாக்யம். அதுதான் விவேகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தேவசக்திகளும் பீடிப்பதுண்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆரம்பத்திலிருந்தே அத்வைத நினைப்பு
Next