ஆரம்பத்திலிருந்தே அத்வைத நினைப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

முடிவான லக்ஷ்யத்திலிருந்து ‘டிஸ்ட்ராக்ட்’ ஆகும் (சித்தம் விலகும்) கெடுதலுக்கு, கஷ்டத்துக்கு ஆளாகாமல் எப்படித் தப்புவது என்று கேட்டால், இதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம் நாழியாவது தினமும் அத்வைதத்தைப் பற்றிய நினைப்பை உண்டாக்கிக் கொள்ளவேண்டுமென்பது. அந்தக் கொஞ்சம் நாழி, பத்து நிமிஷமோ, அஞ்சு நிமிஷமோ, அநுபவ பூர்வமாக வராவிட்டாலுங்கூட, வலுக்கட்டாயமாக இப்படி நினைக்கணும்: ‘எத்தனை நல்ல கார்யமானாலும், உத்தமமான ஸமூஹ ஸேவையானாலும், பகவானே ப்ரத்யக்ஷமாகிக் கருணையைக் கொட்டுகிறானென்றூலுங்கூட, இதெல்லாமும் ஆத்மா இல்லை; ஆத்மாநுபவம் இல்லை சாச்வதமான ஸத்யமில்லை, நிரந்தரமான ஸெளக்யம் இல்லை. இதெல்லாமும் மாயைதான். இவற்றில் எதிலே நாம் ஊறிப்போய்விட்டாலும் ஸத்யத்தை சாச்வதமாக அநுபவித்துக்கொண்டு ஆனந்தமாயிருப்பதென்பதில்லை. இது எதுவுமே தொடாத அகண்ட சாந்தமாக ஆகாசம் மாதிரி உள்ள ஆத்மாதான் நாம்’ என்று நினைக்கவேண்டும். அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ – அவ்வளவு முடியாவிட்டால்கூட ஒரு நிமிஷம், அரை நிமிஷமாவது, ‘நாம் எதுவும் என்னவும் பண்ணாத வஸ்து, நம்மை எதுவும் எண்ணவும் பண்ணமுடியாது’ என்று ராஜாவாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

‘நாம் எதுவும் பண்ணாத வஸ்து’ என்று நினைக்கிறபோதே மனஸிலே ஒரு மூலை எதையாவது நினைக்கப்பண்ணிக்கொண்டுதான் இருக்கும். ‘நம்மை எதுவும் என்னவும் பண்ணமுடியாது’ என்கிறபோதே ஒரு கொசு கடித்தால்கூட அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் இருக்கும். ஆனால் இபப்டி நாம் எதையாவது பண்ணிக்கொண்டு, நம்மை வெளி வஸ்துக்களும் எதுவாவது பண்ணி பாதித்துக் கொண்டும் இருந்தால்கூட, ‘பண்ணுகிற, (பாதிப்புப்) பண்ணப்படுகிற நாம்’ என்பது ‘நிஜ நாம்’ இல்லவேயில்லை, இது மாயைதான் என்று திரும்பத் திரும்ப சில நிமிஷங்கள் மனஸிலே நன்றாக ஏற்றிக்கொள்ளவேண்டும். ‘மனஸினாலே ஆத்மாவைப் பற்றி நினைப்பது’ என்கிற இந்த நிலையிலே மனஸ் இருக்கத்தான் செய்கிறது, நினைக்கத்தான் செய்கிறது; ஆத்மாவாக இல்லாமல் ‘ஆத்மாவைப் பற்றி’ என்பதாக த்வைதமாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் கூட இப்படி ஒரு ஆரம்பம் பண்ணினால்தான் இஞ்ச் இஞ்ச் – ஆகவாவது அத்வைதத்துக்குப் போக முடியும். ரொம்பவும் த்வைதத்தில் ஆழ்த்துகிறவை, அத்வைதத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறவை என்று த்வைதத்திலேயே இரண்டு வகையானவை இருப்பதில் ஆத்ம சிந்தனை என்பது இரண்டாவது வகையாகும். சிந்தனை இல்லாமல் போனால்தான் ஆத்மா ஆகையால் ஆத்மசிந்தனை என்பதும் த்வைதம்தான், மனஸினாலே கட்டினதுதான் என்பதிலே ஸந்தேஹமிலலை. ஆனாலும் இது ஆத்மாவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க உதவுமென்பதைப் பற்றிக் கொஞ்சமும் ஸந்தேஹமில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is திருமூலர், திருவள்ளுவர் அறிவுரை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கட்டவிழ்க்கும் கஷ்டங்கள்
Next