கட்டவிழ்க்கும் கஷ்டங்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படி அஞ்சு பத்து நிமிஷம் இருந்துவிட்டு அப்புறம் ஒவ்வொரு பிடுங்கலாக நாம் மாட்டிக்கொள்கிறபோது அதற்காக வருத்தப்படவேண்டாம். மாயையினால் எக்கச்சக்கமாக ஏற்கெனவே போட்டுக்கொண்ட முடிச்செல்லாம் அவிழ்க்கப்படும் வரையில் பிடுங்கல் இருக்கத்தான் செய்யும் என்று ஸமாதானம் பண்ணிக்கொண்டு அத்தனை முடிச்சையும் ஒவ்வொன்றாக அவிழ்ப்பதற்காக எத்தனை தார்மிகமான கர்மா செய்யணுமோ, எவ்வளவு பூஜை புநஸ்காரம், ஜபம், க்ஷேத்ராடனம் செய்யணுமோ அவ்வளவும் செய்து கொண்டே போவோம். இதிலேயே எத்தனையோ இடைஞ்சல், கஷ்டம் வரத்தான் வரும். சொன்னேனே, வைகுண்ட ஏகாதசி, ஆர்த்ரா தர்சனம் என்று ஸ்ரீரங்கம், சிதம்பரத்துக்குப் போனால்கூட குளிரில் விரைத்து, கூட்டத்தில் மொத்துப்பட்டு அவஸ்தைப்படத்தான் வேண்டியிருக்கிறது என்று! மலை ஏறுவது, அங்க ப்ரதக்ஷிணம், இப்படி எத்தனையோ ச்ரமம் இருக்கத்தான் இருக்கும். பொதுப்பணி என்றாலும் ஒரு வெள்ளக் காட்டிலே, சேற்றிலே, சதுப்பிலே போய் ஆஹாரம் தண்ணி வேளைக்குக் கிடைக்காமல் எத்தனையோ அவஸ்தைப்படவேண்டித்தானிருக்கும். ஆனால் இவற்றைப் பண்ணாமல், ‘வெறுமே ஆத்மாவாய் உட்கார்ந்திருக்கிறேன்’ என்று அஞ்சு, பத்து நிமிஷத்துக்கு மேல் ‘ட்ரை’ பண்ணினால், ஒன்றும் முடியாமல் ஒரே கன்னாபின்னாவில் மனஸ் பிய்த்துக்கொண்டு போகிறதே! ‘ச்ரமப்படாமல் உடம்பை வைத்துக்கொள்கிறேன்’ என்று சும்மா இருக்கப் பார்த்தால், சும்மா எங்கே இருக்க முடிகிறது? சரீரம் கெட்ட கெட்ட அநுபோகங்களைக் கேட்கிறது. ஆக கர்மா, பக்தி பண்ணாவிட்டால் முடிச்சுக்கள் முன்னிலும் பலமாகிக்கொண்டே போகின்றன. அதனாலே, கர்மாவிலும், பக்தியிலும் எத்தனை கஷ்டம், இடைஞ்சல்கள் இருந்தாலும் பட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து நிறையக் கர்மாநுஷ்டானம் செய்யவும், ஈச்ரவ பக்தி செய்யவும்தான் வேண்டும்.

இவற்றுக்காகக் கஷ்டப்பட்டாலும் இவை முடிவிலே கஷ்டத்தை தீர்க்கும் கஷ்டங்களாக இருக்கின்றன. இவை கர்மாக் கட்டை அவிழ்ப்பதற்காகப் படவேண்டியவை வ்யாதிக் கஷ்டத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே ஊசி போட்டுக் கொள்வது, ஆபரேஷன் செய்துகொள்வது முதலான கஷ்டங்களைப் படவேண்டியிருக்கிற மாதிரிதான் இது. ‘இதைப் படமாட்டேன்’ என்றால் அப்போது சும்மா அத்வைதமாகவும் இருக்கமுடியாமல், இதற்கும் வராமலிருப்பதால் வேறே காரியம், ஈச்வர பக்திக்குப் பதில் வேறே வஸ்துக்களிடம் பற்று வைப்பது என்றுதான் போய் அதில் இதைவிட ஜாஸ்திக் கஷ்டங்களை வரவழைத்துக்கொண்டு, கர்மா மூட்டையை மேலும் பெரிசாக்கிக் கொள்வதாகவே ஆகும்.

ஆகவே, அத்வைதமாயிருப்பதைத் தவிர நமக்கு வேறென்ன ‘கடமை வெச்சிருக்கு?’ என்ற எண்ணத்தை அடியிலே ஒரே ஸ்வரமாக ச்ருதி சேர்த்து வைத்துக்கொண்டாலும், மேலே பல ஸ்வரங்களில் பாடுகிறாறப்போல, அபஸ்வரம் தட்டாமல் கவனமாகப் பாடுகிறாற்போல், பல விதமான கடமைகளையும் கவனமாக, ஸின்ஸியராக, பெர்ஃபெக்ட் – ஆகப் பண்ணிக்கொண்டேதான் போக வேண்டும். இல்லாவிட்டால் ச்ருதியோடேயே சேராத அபஸ்வரக் களஞ்சியமாக வேறே எதுவோ செய்வதாகத் தான் இருக்குமே தவிர, சாந்தமாக மெளனமாக ஆகிவிடாது. சப்த ப்ரஹ்மம், நாத ப்ரஹ்மம் என்று அநுஸந்தானம் பண்ணிக்கொண்டு போனால் அதுவே மெளனத்தில் இழைத்து விடுகிறாற்போல, சாஸ்த்ரீய கார்யங்கள் கார்யமில்லாத நிலையிலே முடிவில் இழைத்து விடும்; ஸகுணோபாஸனை நிர்குணத்தில் இழைத்துவிடும்.

என்ன கார்யம், கடமை பண்ணினாலும் பாரத்தை அவன் தலையில் போட்டுவிட வேண்டும். பட்டுக்கொளள்ளாமல், ஆனாலும், பெர்ஃபெக்டாகப் பண்ணவேண்டும். இது தான் நிஷ்காம்ய கர்மா. அவன் தலையில் போடுவது என்பதுதான் பக்தி. அப்புறம் அவனுடைய தலையிலே போட எந்த பாரமும் இல்லாமல் ஜீவனுடைய கர்மச் சுமை முழுதும் தீர்ந்து போய்விடும். ‘தான் எதுவும் பண்ணாதவன், தன்னை எதுவும் என்னவும் பண்ணமுடியாது’ என்ற நிலைக்கு ஜீவன் வாஸ்தவமாகவே போய்விடுவான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆரம்பத்திலிருந்தே அத்வைத நினைப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நல்லதற்கும் மேலே செல்க
Next