நல்லதற்கும் மேலே செல்க! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நல்லது, தர்மமானது என்கிற தேவ கணங்களைவிட்டு வைத்தால் இவையும் ஆத்மாவுக்கு அந்யமான மனஸின் பாற்பட்டவையேயாகையால், இவற்றாலும் தொந்தரவு வரக்கூடும் என்ற நினைவு எப்போதும் நமக்கு இருந்து நம்மை ஜாக்ரதைப்படுத்த வேண்டும்.

World War-ல் (உலக யுத்ததில்) Allies (நேசநாடுகள்) என்று ப்ரிட்டன், அமெரிக்கா, ப்ரான்ஸ், அப்புறம் ரஷ்யா முதலானவை ஒருபக்கமும், ஹிட்லர் (ஜெர்மனி), முஸோலினி (இத்தாலி), ஜப்பான் ஆகியவை (அச்சு நாடுகள்) என்று இன்னொரு பக்கமாகச் சண்டை போட்ட போது, இருப்பதற்குள் நேசநாடகள்தான் நல்லவை, ஓரளவு தேவசக்தியோடு கூடியவை என்று தோன்றிற்று. ஹிட்லர், முஸோலினியும், ஜப்பான்காரர்களும் பண்ணினவை அஸுரத்தனமாகத் தெரிந்தன. நல்லவேளையாக நேச நாடுகள் ஜயித்தன. ஆனால் அப்புறம் என்ன ஆச்சு? அவர்களிலேயே இரண்டுபிரிவாகப் பிளந்து போயிருக்கிறார்கள். ஒருத்தரையொருத்தர் எதிர்த்துக்கொள்கிறார்கள். அஸல் யுத்தத்தைவிட மோசமாக ஸதாவும் கிலியிலும் அவநம்பிக்கையிலும் உலகத்தைத் தவிக்கும்படியாகக் ‘கோல்ட்வார்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு தூரம் போகவேண்டாம். இங்கே நம்ம ஸமாசரத்தை எடுத்துக்கொண்டால், நம்முடைய உசந்த நாகரிகத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஸ்வதந்த்ரப் போராட்டம் ஆரம்பித்து நடத்தியபோது, அந்தப் போராட்டத்தை நடத்திய தலைவர்களின் தன்மை, அவர்களுடைய கொள்கை முதலியவ்றைப் பார்க்கும்போபது மொத்தத்தில் நல்லதான – அதாவது தேவர்களின் படையான – அம்சங்களே நம்முடைய தரப்பாக இருக்கிறதென்றும், வெள்ளைக்கார ஆட்சி எத்தனை நல்ல வேஷம் போட்டாலும் அஸுரக் கட்சியைப் போலத்தானென்றும் தோன்றியது. அப்புறம், அவர்களைப் போகப் பண்ணிவிட்டு, ஸ்வதந்த்ர நாடாக நாம் இருக்கும்போது என்ன பார்க்கிறோம்? ஸ்வதந்த்ரப் போராட்டத்தை ஜயித்துக்கொடுத்த, நல்லதாகத் தெரிந்த கோஷ்டியிலேயே இரண்டு, மூன்று, நாலு என்று பிரிவுகள் ஏற்பட்டு ஒருத்தரையொருத்தர் அஸுரர்களாக வர்ணித்துக்கொண்டு ஆயுதமில்லாவிட்டாலும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருப்பதைதான் பார்க்கிறோம். இதிலே யாரைக் கூடிய மட்டும் தேவஸக்திகளோடு சேர்த்துச் சொல்லலாம் என்றே ஸரியாகத் தெரியாமல் ஜனங்களுக்குள் அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டுப் பிரிந்து பிரிந்து நிற்கிறார்கள்.

எதற்குச் சொல்ல வந்தேனென்றால், எந்த நல்லதும் அப்படியே சாச்வதமாயிருந்துவிடாமல் அதிலும் கெடுதல்கள் வரத்தான் செய்கின்றன. ஆகையினால் நல்லது என்று ஒன்றைப் பிடித்த பிடியாக வைத்திருக்க வேண்டுமென்ற ஆசையும் இல்லாமல், ஆனாலும் இப்போது நம்மைப் பிடித்த பிடியாகப் பிடித்தாட்டுகிற கெட்டதைப் போக்கிக்கொள்ள நல்லவற்றைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமென்று புரிந்துகொண்டு ஸின்ஸியராகக் கர்மாநுஷ்டானம், பக்தியுபாஸனை செய்துகொண்டே போகவேண்டும். கர்ம யோகம், அப்புறம் பக்தி யோகம் என்று சொல்லி முடிவிலே பகவான் நிலை நாட்டின அந்த ஸாங்க்ய (ஞான) யோகத்தையே, அவர் கர்மயோகத்தைச் சொல்வதற்கு முன்னாலும் அஸ்திவாரம் போலப் போட்டுக்கொடுத்ததை மறக்காமல் நாம் ஆரம்பத்திலிருந்தே சிறிதேனும் ஆத்ம த்யானம் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தேவர்களுக் கிடையிலேயே அல்லது தேவர்களாலேயே சண்டை என்பதற்கும் இடமேற்படுவதற் கில்லாமல், சண்டைக்கு ஆஸ்பதமாக ஜீவபாவத்துடன் இருக்கிற ஆஸாமியே எடுபட்டுப்போய் ஆத்மா மட்டும் இருப்பதான, சண்டை யறியாத சாச்வதமான சாந்த நிலைக்கு என்றைக்காவது ஒரு நாள், இந்த ஜன்மாவில் இல்லாவிட்டாலும் எந்த ஜன்மாவிலாவது ஒரு நாள்போய்ச் சேர கொஞ்சங் கொஞ்சமாக வழி திறந்துவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கட்டவிழ்க்கும் கஷ்டங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்ம சிந்தனை அனைவர்க்கும் அவசியம்
Next