இப்போதெல்லாம் பண்பு, நாகரிகம், கலாசாரம், கல்ச்சர் என்கிற வார்த்தைகள் நிறைய அடிபடுகின்றன. ஆனால் இதுகளைச் சொல்லும்போது விநயத்தை முக்யமான அம்சமாக நினைத்து நாம் பேசவில்லை. முன் காலத்தில் இப்படியில்லை. அப்போது கல்ச்சர், கலாசாரம் என்றாலே அதற்கு முதல் லக்ஷணமாக விநயத்தைத்தான் நினைத்தார்கள். கல்ச்சர், கலாசாரம் என்ற வார்த்தைகளுக்கும், கல்வி என்ற வார்த்தைக்கும் ரொம்பவும் ஸம்பந்தம் இருப்பதைக் ‘கல்’ என்பது இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக இருப்பதிலிருந்தே தெரிந்தகொள்ளலாம். கல்வி பெற்றவர்கள்தான் (கல்சர்டு) cultured-ஆக, நாகரிகமுள்ளவர்களாக இருப்பார்கள். இங்கே கல்வி என்கிறபோது எழுதப் படிக்கத் தெரிவதைச் சொன்னதாக அர்த்தமில்லை. நல்ல விஷய ஞானம்தான் கல்வி. அதை ‘வித்யா’ என்று சொல்வார்கள். அந்த வித்யையின் வாஸ்தவமான ப்ரயோஜனம் நமக்கு விஷய ஞானம் வந்துவிட்டது என்று திமிர்பிடித்து அலையாமல், ‘இன்னமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது’ என்று அடங்கி, விநயமாக இருப்பதுதான்.
ஆதிகாலத்தில் சிஷ்யனானவன் குருவிடமும், தான் கற்கிற கல்வியிடமும், பகவானிடமும், ஸகல லோகத்திடமுமே அடங்கி விநயமாக இருந்ததால்தான் ஆத்ம வித்யையை யதேஷ்டமாக ஸம்பாதித்து வந்தான். ப்ரம்மசாரியானவன் குருகுலவாஸம் செய்கிற காலத்தில் அவன் எத்தனை பெரிய மிராசுதார் வீட்டுப் பிள்ளையானாலும் வீடுவிடாகப் போய் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று பிச்சை எடுத்து வரவேண்டும் என்று வைத்தார்களே, அது முக்யமாக இந்த அடக்க குணத்தை உண்டாக்கத்தான்.
அந்தக் காலத்தில் குரு, முதல் பாடமாக விநயத்தைத்தான் சொல்லிக்கொடுத்தார். வெறுமே சொல்லிக் கொடுத்தால் வருகிற பாடமா அது? வாஸ்தவமாக அவரே, மாணவர்கள் தாமாக அவருக்கு அடங்கி மரியாதை செலுத்தும்படியான ஆத்ம குணங்களோடு இருந்துவந்தார்; வாழ்ந்து காட்டினார். இப்போது தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல் என்கிற ஸ்திதியாக இருக்கிறது.
இப்படியே ஒரு தேசத்து ராஜாவும் ப்ரஜைகளின் மற்ற அபிவ்ருத்திகளைப் போலவே அவர்களை விநயமுள்ளவர்களான இருக்கச் செய்வதில் விசேஷ கவனம் செலுத்தி வந்தான். சாஸ்த்ரத்தில் ராஜாவின் கடமைகளைச் சொல்கிறபோது முதலில் ‘விநயதான’த்தைச் சொல்லிவிட்டு, அப்புறம்தான் ‘ரக்ஷணம்’, ‘பரணம்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. ஜனங்கள் எல்லோரும் அவரவருக்கான தொழிலில் ஈடுபட்டு, ஸம்பாதித்து, வாழ்க்கை வசதிகளோடு இருக்குமாறு ஸஹாயம் பண்ணி அவர்களைத் தாங்குவது ‘பரணம்’. உள்நாட்டுக் கலகம், வெளிநாட்டு யுத்தம் முதலியவற்றிலிருந்து அவர்களைக் காப்பது ‘ரக்ஷணம்’. தற்காலத்தில் ராஜாங்கக் கடமையாக ரக்ஷணமும் பரணமும் மட்டுமே நினைக்கப்பட்டாலும் சாஸ்த்ரப்படி இதற்கெல்லாம் முந்தி விநயதானம்தான் வருகிறது. அதாவது ஜனங்களைப் பணிவுப் பண்போடு அடங்கியிருக்கும்படிப் பண்ணவேண்டும். எப்படிப் பண்ணுவது என்றால், முறையான கல்வியினால், ஸத் உபதேசத்தினால், மதாநுஷ்டானங்களினால், தெய்வ விச்வாஸத்தினால் பண்ணவேண்டும்.
அடக்கம், பணிவு, ம்ருதுவான நடவடிக்கை, (‘ஜென்டில்மான்’ என்கிறார்களே அதில் உள்ள ‘ஜென்டில்னெஸ்’) , பிறத்தியாருக்கு விட்டுக் கொடுக்கிற ஸ்வபாவம், அஹங்காரமே இல்லாமலிருப்பது எல்லாம் சேர்ந்ததுதான் விநயம் என்கிற குணம். நிஜமான கல்வி இதை ஊட்டவே ஏற்பட்டது.
இதனால்தான் மாணாக்கன், சிஷ்யன் என்பவனுக்கே ‘விநேயன்’ என்று பேர். எவன் விநயமுள்ளவனோ அவனே ‘விநேயன்’. சீடன் என்பதற்குப் பதில் ‘விநேயன்’ என்றே சொல்வார்கள்.