சங்கரரும், சிஷ்யர்களும், விநயமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நம் பகவத்பாதாளைப் பற்றி அவருடைய சிஷ்யரான பத்மபாதாசார்யாள் ஒரு ச்லோகம் பண்ணியிருக்கிறார். ‘யத் வக்த்ர மாநஸ ஸர:’ (என்று ஆரம்பிக்கும்1) . அதன் முழு அர்த்தம் இங்கே நான் சொல்லவில்லை. அதிலே ‘விநீத விநேய ப்ருங்கா:‘ என்று வருகிறதுதான் நம் விஷயத்துக்கு ஸம்பந்தப்பட்டது.

ஆதிசங்கர பகவத் பாதளுடைய மனஸ் எப்படி இருக்கிறது? இதை அந்த ச்லோகத்தில் அவர் கூடவே வஸித்த பத்மபாதாசார்யாள் சொல்கிறார். கரை காணாத விசாலமான, ஒரே தெளிவாக, ஜில்லென்று இருக்கிறதாம். மாநஸ ஸரஸ், மாநஸஸரோவர் என்றெல்லாம் சொல்கிறார்களே, ஹிமாசலத்தில் இருக்கிற பரம நிர்மலமான விஸ்தாரமான ஏரியை, அந்த மாநஸ ஸரஸாக இருக்கிறதாம் ஆசார்யாளின் மனஸ். மனஸ் நம் கண்ணுக்குத் தெரியாது. முகம்தான் தெரியும். முகம்தான் மனஸுக்குக் கண்ணாடி. Face is the index of the mind என்கிறார்கள். நாம் வேண்டுமானால் மனஸிலிருப்பதை முகத்தில் காட்டாமல் வேஷம் போடலாம். ஆசார்யாள் மாதிரியான மஹா புருஷர்களுக்கு ‘அகத்தின் அழுகு முகத்தில் தெரியும்’. ஆகையால் ஸ்ரீ சங்கர பகவத் பாதாளின் முகமும் அவர் மனஸ் மாதிரியே நிர்மலமாக, விஸ்தாரமாக மாநஸ ஸரோவரம் போலவே இருக்கிறது. ஒரு தடாகம் என்றால் அதில் தாமரைப் பூ இருக்கவேண்டுமே! ஆசார்யாளின் முக தடாகத்தில் பூக்கிற தாமரைப் பூ எது? ரொம்பவும் உயர்ந்த தத்வங்களை ஒயாமல் பொழிந்து கொண்டிருப்பதும், தாபத்தோடு வருகிற ஜனங்களுக்குப் பரம கருணையோடு ஆறுதல் சொல்வதுமான அவருடைய வாய்தான் அந்தத் தாமரைப் பூ. தாமரைப் பூ என்றால் அதிலிருந்து மகரந்தம், அதாவது, தேன் பெருக வேண்டுமல்லவா? ஆசார்யாளின் வாய்த் தாமரையிலிருந்து பெருகும் தேன் எது? இது தெரியவில்லையா? ஜகத்தை உத்தாரணம் பண்ணுகிற அவருடைய பாஷ்யங்களே தாமரைப் பூவிலிருந்து மகரந்தம் பெருகுகிற மாதிரி அவருடைய வாயிலிருந்து பெருகுகிறது. முதலில் அவர் வாயாலேதான் பாஷ்யத்தை உபதேசம் செய்தார் – அவருடைய காலத்தவர்களுக்காக. அப்புறம்தான் நம் மாதிரி பிற்காலத்தவர்களுக்காக பாஷ்யங்களை எழுதி வைத்தது. ‘பாஷ்’ என்றாலே சொல்வதுதான்; எழுதுவதல்ல. ‘ஸம்பாஷணை’ என்று ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வதைத்தானே சொல்கிறோம்?

‘யத் வக்த்ர’ என்று ச்லோகம் ஆரம்பிப்பதில் “வக்த்ர” என்றால் ‘முகம்’ என்று அர்த்தம். முகம், மானஸ ஸரஸ். அதிலுள்ள வாயிலிந்து வரும் பாஷ்யம், ஸரஸிலுள்ள தாமரைப் பூவிலிருந்து வரும் தேன். ஆனாலும் ச்லோகத்தில் முகமான ஸரஸ், பாஷ்யமான தாமரைத்தேன் (‘பாஷ்யாரவிந்த மகரந்தம்’) என்று முகத்தையும் பாஷ்யத்தையந்தான் நேரே மானஸ ஸரஸுக்கும் தேனுக்கும் உவமித்துச் சொல்லியிருக்கிறது. வாய் ஸரஸிலுள்ள தாமரையாயிருக்கிறது என்று சொல்லியிருக்கவில்லை. வாய் என்பதற்கு அதில் வார்த்தை இல்லை. பாஷ்யத்தை அரவிந்த மகரந்தம் என்று சொல்லியிருப்பதால், இந்த மகரந்தத்தைப் பெருக்கும் அரவிந்தமாக வாய் இருப்பதாக நாமே ஊஹித்துக் கொள்ளும்படி விட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது.

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஒரு வேடிக்கை, ஸம்ஸ்க்ருதத்தில் ‘வாய்’ என்ற அவயவத்துக்குத் தனியாக ஒரு வார்த்தை இல்லை. ‘முகம்’, ‘வக்த்ரம்’, ‘வதநம்’, ‘ஆநநம்’, ‘ஆஸ்யம்’ என்கிற மாதிரி Face என்ற அர்த்தத்தில் உள்ள வார்த்தைக்கேதான் ‘வாய்’ என்றும் அர்த்தம். தமிழில் பார்த்தாலோ ‘வாய்’க்குத்தான் வார்த்தை இருக்கிறது. ‘முகம்’ என்பதற்கு (Face) தமிழ் வார்த்தை இல்லை. ‘முகம்’ என்பது ஸம்ஸ்க்ருத வார்த்தை. அது தமிழ் தாதுவில் வந்ததல்ல. ‘மூஞ்சி’ என்று பேச்சு வழக்கில் என்னவோ சொல்கிறோம். ஆனால் அது இலக்கிய மொழி (Literary language) இல்லை. ஸம்ஸ்க்ருதத்தில் வாய் இல்லை; தமிழில் முகம் இல்லை!

இதனால் பழங்காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகாஸ்தானங்களிலும், தமிழ்ப் பள்ளிகளிலும் படிக்கிற வித்யார்த்திகள் பரஸ்பரம் கேலி பண்ணிக் கொள்வார்களாம். (இப்போது மாதிரி ஸம்ஸ்க்ருதம், தமிழ் என்று கட்சி கட்டிக்கொண்ட குஸ்தி போடாவிட்டாலும் அந்தக் காலத்திலும் அசட்டுத்தனம் கொஞ்சம் கொஞ்சம் இருந்திருக்கிறது! அல்லது ஸ்வாதீனத்தில் தமாஷாகக் கேலி செய்து கொண்டதாக இருக்கலாம்.) தமிழ் மாணவன் ஸம்ஸ்க்ருதம் படிக்கிறவனைப் பார்த்து, ‘வாயில்லாதவன் என்று பரிஹாஸம் பண்ணுவானாம்; அவன் இவனைத் திருப்பி, ‘முகமில்லாதவன்’ என்று கேலி பண்ணுவானாம்!

வக்த்ரம் என்றால் முகம், வாய் இரண்டும். அதனால் தான் நாம் ‘மூஞ்சி’ என்கிறதை ‘வக்த்ரம்’ என்று அந்த ச்லோகத்தில் சொன்ன பிறகு, வாயைக் குறிப்பிடுவதற்காக எந்த வார்த்தையைய்ப போட்டாலும் அதையும் மூஞ்சி என்றே அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் ஏற்பட்டு, ‘டூப்ளிகேட்’ செய்த மாதிரி ஆகிவிடப் போகிறிதே என்று நினைத்துப் பத்மபாதர் வாய்க்குத் தனியாய் வார்த்தை போடாமல் ஊஹித்தறியுமாறு விட்டுவிட்டார் போலிருக்கிறது.

கவிகள் முகம், கண், பாதம், கை ஆகிய எல்லாவற்றையுமே தாமரைக்கு ஒப்பிட்டு ‘முகாம்புஜம்’, ‘நயன கமலம்’, ‘பாத பத்மம்’, ‘கர அரவிந்தம்’ என்றெல்லாம் சொல்வார்கள். தம் பெயரிலேயே ஒரு பத்மத்தை வைத்துக் கொண்டிருக்கிற பத்மபாதாசார்யாளோ இங்கே ஆசார்யாளின் முகத்தைத் தாமரை என்று சொல்லாமல் மாநஸஸரஸ் என்று சொல்லி, அவர் உபதேசிக்கிற பாஷ்யத்தைத் தாமரையின் தேன் என்கிறார். தாமரை என்பது வாய் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனாலும் அப்படி த்வனிப்பொருளாய் தெரிவிக்கிறார். பாஷ்யம் என்றால் ஃபிலாஸஃபி. அது மண்டையை உடைக்கிற பாறை மாதிரிதான் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த ஃபிலாஸஃபியே நம் ஆசார்யாளின் தாமரைப் பூ மாதிரி ம்ருதுவான, அழகான வாயிலிருந்து வந்திருப்பதால், ஸுலபமாகப் பருகக்கூடிய மதுரமான தேனாகப் பெருகியிருக்கிறது!

பாஷ்யங்களின் உட்பொருளான அத்வைதம்தான் தேனின் ரஸம். அந்த ரஸத்தைப் பருகுவதற்காகக் கூட்டம் கூட்டமாக சிஷ்யர்களான வண்டுகள் வந்து மொய்க்கின்றனவாம். இங்கே சிஷ்யர்களைச் சொல்லும்போதுதான் ‘சிஷ்ய’ என்று சொல்லாமல் ‘விநேய’, அதாவது ‘விநயமுள்ளவன்’ என்று சொல்லியிருக்கிறது.

இந்த ச்லோகத்தில் தாமரையைப் பற்றியும் வண்டைப் பற்றியும் வருகிற மாதிரியே ஆசார்யாளைப் பற்றிய இன்னொரு ச்லோகத்திலும் வருகிறது. எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டில் இந்த ச்லோகம் பொறித்திருக்கிறது. அந்தக் கல்வெட்டு எங்கே கிடைத்தது என்று சொன்னால் உங்களுக்கு இன்னம் ஆச்சர்யமாயிருக்கும். அது கம்போடியா தேசத்தில் கிடைத்த கல்வெட்டு!

அந்த அன்ய தேசத்தில் கிடைத்த கல்வெட்டிலே ஆசார்யாளை ‘பகவத் சங்கரர்’ என்று சொல்லியிருக்கிறது. நம் தேசத்தில் அவரை ‘பகவத் பாதர்’ என்றுதான் சொல்கிறோம் என்றால், கம்போடியாக்காரர்கள் இன்னம் ஒரு படி உயர்த்தி ‘பகவான்’ என்றே அவரைச் சொல்லியிருக்கிறார்கள்! அந்த ச்லோகத்திலே ஆசார்யாளின் பாதத்தைத் தாமரையாகச் சொல்லியிருக்கிறது. ‘அங்க்ரி பங்கஜம்’ என்று சொல்லியிருக்கிறது. இந்தப் பாத தாமரையை விட்டு அசைய மாட்டோம் என்று லோகத்தில் ஒரு வித்வான்கூட பாக்கியில்லாமல் (‘நிச்சேஷமாக’ என்று ச்லோகத்தில் இருக்கிறது) தங்கள் தலைகளை அதிலேயே தாழ்த்திக் கிடக்கிறார்களாம். ‘ஸகல வித்வத் ஜனங்களின் சிரஸ்களாகிய வண்டுக்களால் மொய்க்கப்பட்ட பத்ம பாதத்தை உடைய பகவான் சங்கரர்’ என்று அந்தக் கல்வெட்டில் இருக்கிறது:

நிச்சேஷ – ஸூரி – மூர்தாலி – மாலா – லீடாங்க்ரி – பங்கஜாத் ||

முதலில் நான் சென்ன ச்லோகம் பத்மபாதர் நம் பகவத்பாதரைப் பற்றிப் பண்ணினது. இங்கே பகவத் பாதாளின் பாதத்தையோ முகத்தையோ பத்மமாகச் சொல்லாமல் பாஷ்யத்தைப் பத்மத்தின் மகரந்தமென்று சொல்லியிருக்கிறது. வாய்த் தாமரையிலிருந்து ஊறும் அத்வைதத் தேனைப் பருகுகிறார்களாம் அவருடைய சிஷ்யர்களான வண்டுகள். இங்கே ‘சிஷ்யர்கள்’ என்று சொல்வதற்கு ச்லோகத்தில் ‘விநீத விநேய ப்ருங்கா:’ என்று வருகிறது.

‘விநீத’ என்றால் நல்லொழுக்கத்தில் பழக்கப்பட்டவர்கள் (well trained) என்று அர்த்தம். ‘ப்ருங்கா:’ என்றால் வண்டுக் கூட்டம். ‘சிஷ்யன்’ என்பதற்கு ‘விநேயன்’ என்று போட்டிருக்கிறார்.

கம்போடியாக் கல்வெட்டில் ‘நிச்சேஷ ஸுரி’களும், அதாவது மிச்சம் மீதியில்லாமல் அத்தனை அறிஞர்களும், வண்டுக்கூட்டமாக ஆசார்யாளின் பாதபத்மத்தில் தங்கள் தலையைக் கிடத்தி நமஸ்கரிப்பதாகச் சொல்லியிருக்கிறது. ‘மூர்த்தா’ (moordha) என்றால் தலை. ‘மூர்த்தாலிமாலா’ மூர்த்தாக்களாகிய ‘அலிமாலா’. ‘அலிமாலா’ என்றால் வண்டுக்கூட்டம். ‘அலி’ என்றால் வண்டு.

பத்மபாதர் வாய்ப் பத்மத்தைச் சொல்லாமல் பாஷ்யத்தேனை மட்டும் சொன்னார். கம்போடியாக் கல்வெட்டில் பாதபத்மதைச் சொல்லி பாஷ்யத்தேனைச் சொல்லாமல் விட்டிருக்கிறது. ஆனால் நிச்சேஷ ஸூரி ஜனங்களும், அதாவது ஸகல வித்வத் ஸமூஹமும். பாதபத்மத்தில் வண்டுகளாகத் தலைகளைக் கிடத்தியிருப்பதாகச் சொல்லியிருப்பதால், அவர்கள் ஸாமான்ய மக்கள் ஸமூஹத்தைப் போல பக்தியினால் மட்டும் பாத வந்தனம் பண்ணுபவர்களில்லை என்றும், பாஷ்யத் தேனை ரஸித்துத்தான் ஆசார்யாளிடம் பக்தி பண்ணுகிறார்களென்றும் உள்ளர்த்தம் ஆகிறது எனலாம்; பாதத்திலிருந்து பாஷ்யம் வந்ததாகச் சொல்வது பொருந்தாதென்பதாலேயே. பாத பத்மம் என்று மாத்திரம் சொல்லி பாஷ்ய மகரந்தத்தை ஊஹித்துக் கொள்ளும்படியாய் விட்டிருக்கிறது.

அப்பய்ய தீக்ஷிதர் ஆசார்யாளின் மேல் செய்துள்ள ‘அதிகதபிதா பூர்வாசார்யான்’ என்ற ச்லோகத்தில் அவருடைய (ஆசார்யாளுடைய) வாயான பத்மத்திலிருந்து வெளிவரும் அத்வைத ஸூக்திப் பெருக்கு நம்முடைய பிறவிப் பிணியைப் போக்குகிறது என்று சொல்லியிருக்கிறார். ‘ஸூக்தி’ என்பது ‘ஸு உக்தி’ அதாவது ‘உத்தமமான வாக்கு’.

அதிகதபிதா பூர்வாசார்யாந் உபேத்ய ஸஹஸ் ரதா

ஸரிதிவ மஹீந்பாகாந் ஸம்ப்ராப்ய சௌரி பதோத்கதா |

ஜயதி பகவத்பாத ஸ்ரீமந் முகாம்புஜ நிர்கதா

ஜநநஹரணீ ஸூக்திர் ப்ரஹ்மாத்வயைக பராயணா ||

இங்கே வாய்த் தாமரையையும் அதிலிருந்து பெருகும் பாஷ்ய உபதேசப் பெருக்கையும் சொல்லியிருக்கிறது. ஆனாலும் இது தேன் பெருக்கு என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட இதிலே வார்தையில்லை. ஆனால், பத்மத்திலிருந்து தேனில்லாமல் வேறென்ன பெருகும்? இதை ஊஹிப்பது கொஞ்சங்கூடக் கஷ்டமில்லையே!

இப்படியாக ஒன்றிலே வாயைச் சொல்லாமல் தேன், இன்னொன்றில் வாய், தேன் இரண்டையும் சொல்லாமல் வண்டுக்கூட்டம், மூன்றாவதில் வாயைச் சொல்லி, தேனைச் சொல்லியும் சொல்லாமல் விட்டிருப்பது என்று பார்க்கிறோம். ஆனால் மூன்றிலுமே சொல்லாததை ஸுலபமாய் ஊஹிக்கும்படி விட்டிருப்பதிலேயே ரஸம் இருக்கிறது.

இவற்றில் பத்மபாதர், சிஷ்யர்களை விநேயகர்கள் என்பது தான் நம் (ஷட்பதீ) விஷயத்துக்கு ஸம்பந்தமானது.

நம் ஆசார்யாளிடம் ஆச்சர்யம் என்னவென்றால் அவருடைய சிஷ்யர்கள் விநயமுள்ள விநேயர்களாக இருந்தது மட்டுமில்லை. ஜகத்குருவான அவரே எல்லோரையும்விட விநயம் உள்ளவராக இருந்தார்.

ஆசார்யாள் ‘ஸௌந்தர்ய லஹரி’ என்று செய்திருப்பது தெரிந்திருக்கும். பக்தி, கவித்வம், பாஷை அழகு, தத்வச் சிறப்பு, மந்த்ர சாஸ்திர விஷயங்கள், உவமை முதலான அணிகள் அத்தனையும் ஈடிணை இல்லாமல் சேர்ந்திருக்கிற பரம உத்க்ருஷ்டமான ஸ்தோத்ரம் அது. அதோடுகூட அதற்கே அபாரமான மந்த்ர சக்தியும் இருக்கிறது. இப்பேர்ப்பட்ட ஒரு க்ரந்தத்தைப் பண்ணினவருக்கு எவ்வளவு தற்பெருமை ஏற்பட்டாலும் அது ந்யாயம்தான். ஆனால், நம் ஆசார்யாளுக்கோ, லவலேசமாவது இப்படிப்பட்ட தற்பெருமை – தாம் பெரியதாக ஒன்றை ஸாதித்துவிட்டோம் என்று அஹம்பாவம் – இருந்ததா? இல்லவே இல்லை. ‘ஸெளந்தர்ய லஹரி’ முடிவிலே அவர் விநயமே வடிவாக மன்னிப்புக் கேட்கிற பாவனையில் அம்பாளிடம் சொல்கிறார்: ‘அம்மா! சப்த ஸமுத்ரமாக, வாக் ஸமுத்ரமாக இருக்கப்பட்ட உன்னைப்பற்றி ஏதோ இந்த நூறே நூறு ச்லோகம் பண்ணி உன்னை வர்ணிக்க நான் முயற்சி செய்திருக்கிறேனே! இது எப்படித் தெரியுமா இருக்கிறது? ராமேச்வரத்திலே, ஸேது தீர்த்தத்திலே பக்தர்கள் ஸமுத்ர பூஜை பண்ணுகிறபோது அந்த மஹா ஸமுத்திரத்திலிருந்தே ஒரு கை ஜலத்தை அள்ளி அதற்கே அபிஷேகம் செய்வதாக ஓர் உபசாரம் செய்கிறார்களே, அந்த மாதிரிதான் இருக்கிறது’ என்கிறார். இதேபோல பரம பவ்யமாக இன்னும் மூன்று உதாரணமும் கொடுக்கிறார்.2

இப்படிப் பரமேச்வராவதாரமாக இருந்த போதிலும் விநயமே வடிவாக இருந்த ஆசார்யாள், ஒரு சக்தியும் இல்லாமலே, அடக்கமில்லாமல் திரிகிற நம்மோடு சேர்ந்து நின்றுகொண்டு, நமக்கு ப்ரார்த்திக்க சொல்லிக் கொடுப்பதற்காகவே ‘அவிநயம் அபநய’ (‘என் விநயமின்மையைப் போக்குவாயாக!’) என்று ‘ஷட்பதீ ச்லோக’த்தை ஆரம்பிக்கிறார்.

அடக்கம் ஒன்று வந்துவிட்டால் போதும், பாக்கி எல்லா நல்ல குணங்களும் அதன் பின்னே தானாக வந்துவிடும். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்று திருவள்ளுவர் கூடச் சொல்லியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்திலேயே விநயத்தில் பழக்கிவிட வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. வயஸ் ஏறிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு, யௌவனம், பதவி, பணம், பலம் என்று தேடிக்கொள்கிறபோது, விநயம் வருவது ரொம்பக் கஷ்டம். ஆனதால் சின்ன வயஸிலேயே இதில் பழக்கிவிடவேண்டும். மாணாக்கன் என்று சொல்லப்படுகிறவனுக்கு ‘விநேயன்’ என்றே ஆதிநாளில் பேர் வைத்திருந்தது இந்த தத்வத்தைத்தான் காட்டுகிறது.


1யத் வக்த்ர மாநஸ ஸர: பிரதிலப்த ஜந்ம

பாஷ்யாரவிந்த மகரந்த ரஸம் பிபந்தி |

ப்ரத்யாச-முந்முக-விநீத-விநேய ப்ருங்கா:

தாந் பாஷ்ய வித்தக குரூந் ப்ரணதோஸ்மி மூர்த்நா ||

2முதற் பகுதியில் ‘அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?‘ என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is முக்யப் பண்பு விநயமே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸிக்கியர் மதத்தில்
Next