குரு, ஆசார்யர்* என்ற வார்த்தைகளை உசந்த மட்டத்தில்தான் உபயோகிக்கிறோம். ஸாதாரண லெவலில், ஒன்றைச் சொல்லிக் கொடுக்கிறவருக்கு “வாத்தியார்” என்றே பெயர் சொல்கிறோம். பெரிதாக தீக்ஷை கொடுத்து மந்த்ரம், பூஜை எடுத்து வைப்பவரையும், யஜ்ஞம், ஹோமம் விஸ்தாரமாக நடத்திக் கொடுப்பவரையும் ஆசார்யர் என்கிறோம். சின்னதாக திவஸம், திங்கள் பண்ணி வைப்பவரையும், சதுர்த்தி பூஜை, த்வாதசி பூஜை நடத்தித் தருபவரையும் வாத்தியார் என்கிறோம். தத்வ சாஸ்த்ரமோ, வேறே சாஸ்த்ரமோ, ஸங்கீதம் முதலானதோ ஒருத்தரையே ஆச்ரயித்து அவரிடம் பல வருஷம் கற்றுக்கொண்டால், அவரை குரு என்கிறோம். ஸ்கூலில், காலேஜில் பல பேரில் ஒருத்தராகப் பாடம் சொல்லிக் கொடுப்பவரை வாத்தியார் என்று சொல்கிறோம். பள்ளி ‘ஆசிரியர்’, கல்லூரி ‘ஆசிரியர்’ என்பதாக எழுதும்போதும், ப்ரஸங்கத்திலும் மட்டும் ஆசிரியர் என்கிறோம். பேச்சு வழக்கிலே ஆசிரியர் என்று சொல்வதில்லை; வாத்யார்தான். “ஆசார்யர்” என்பதுதான் ஆசிரியராயிருக்கிறது.
தமிழ் நாட்டில் மட்டும் எப்படியோ எழுத்தாளர்களையும் பத்ரிகை எடிடர்களையும் கதாசிரியர், பத்ரிகாசிரியர் என்றெல்லாம் ‘ஆசிரியர்’ பேர் கொடுத்துச் சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது. கல்விச் சாலையில் எழுத்தறிவிப்பவன் ஆசிரியன் எனப்படுவதிலிருந்தே எழுத்தைத் தொழிலாகக்கொண்ட ரைட்டர்கள், எடிடர்கள் ஆகியவர்களையும் ஆசிரியரென்று சொல்லும் வழக்கம் வந்துவிட்டது போலிருக்கிறது. அல்லது, நடைமுறை எப்படி இருந்தாலும், கதை எழுதுகிறவர்களும் பத்ரிகை நடத்துகிறவர்களும் ஆசார்ய ஸ்தானத்திலிருந்துகொண்டு நல்லறிவை வளர்ப்பவர்களாக இருக்க வேண்டுமென்ற அபிப்ராயத்தில் அவர்களை ஆசிரியர்களாகச் சொல்லும் வழக்கம் உண்டாயிருக்கலாம்.
பேச்சு வழக்கில் சொல்லும்போது ஸமய ஸம்பந்தமானாலும் ஸரி, மற்ற கலைகள் சாஸ்த்ரங்கள் ஸம்பந்தமானாலும் ஸரி, நமக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுப்பவரை ‘வாத்தியார்’ என்றே சொல்கிறோம்; ஆசிரியர், ஆசார்யர் என்றெல்லாம் அல்ல.
‘உபாத்யாயர்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைதான் வாத்யார் என்றாகியிருக்கிறது.
உபாத்யாயர் என்றால் என்ன?
உப அத்யாயர்தான் உபாத்யாயர்.
அத்யாயர் என்றவுடன் “அத்யாயம்” நினைவு வரும்.
*“தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியிலுள்ள “குரு, ஆசார்யர்” என்ற உரை பார்க்க.