வேதத் தொடர்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘அத்யாயம்’ என்றால் தொடர்கதையில் ஒவ்வொரு வாரமும் வருகிற பாகம் என்று சொல்வீர்கள்! இது தற்காலத்தில் ஏற்பட்ட பேர். ஒரு புஸ்தகத்தின் ஒரு ஸெக்ஷனுக்கு ‘அத்யாயம்’ என்ற பேர் பிற்காலத்தில் வந்தது. ஆதியில், எழுதவே கூடாத புஸ்தகமாக, காதால் கேட்டுக் கேட்டே பாடம் பண்ண வேண்டிய புஸ்தகமாக உள்ள வேதத்தைப் படிப்பதற்குத்தான் அத்யயம், அத்யயனம், அத்யாயம் என்றெல்லாம் பேர் இருந்தது. வேதத்தை வைத்துத்தான் நம் வாழ்க்கையில் ஸகலமுமே. ஆதலால், பிற்பாடு கதை, காவ்யம், ஸெக்யுலர் ஸயன்ஸ், ஆத்மார்த்தமான சாஸ்த்ரம் எதுவானாலும் அதில் படிக்க வேண்டியவற்றைப் பகுதி பகுதியாக வரையறை செய்தபோது அவற்றுக்கும் அத்யாயம் என்று பெயர் கொடுத்தார்கள். புஸ்தகத்தின் ஸெக்ஷன் (பகுதி) , ஸப் ஸெக்ஷனுக்கு (உட்பிரிவு) அநேகப் பெயர்கள் இருப்பதில் அத்யாயம் என்பதும் ஒன்றாயிற்று. காண்டம், கண்டம், ஸர்கம், படலம், பர்வம், பரிச்சேதம், உச்சவாஸம், உல்லாஸம், அங்கம், ப்ரகரணம், ஸ்கந்தம் என்றிப்படி அநேகப் பெயர்களில் ஒரு புஸ்தகத்தின் பகுதிகளைச் சின்னதும் பெரிசுமாகப் பிரிப்பதுண்டு. அவற்றிலே வேத அடிப்படை கொண்ட வார்த்தையாக அத்யாயம் என்பது இருக்கிறது.

எப்படி ஸகலத்திலும் வேத ஸம்பந்தமிருக்கிறது என்பதற்கு இன்னொன்று சொல்கிறேன். Lesson என்பதைப் ‘பாடம்’ என்கிறோம். அது ஜாக்ரஃபியானாலும், “வேதம் பொய்” என்று சொல்கிற நம்முடைய ஆராய்ச்சியாளர்களின் ஹிஸ்டரியானாலும், எந்த லெஸனும் ‘பாடம்’தான். இதே போலப் பள்ளிக்கூடத்தைப் ‘பாடசாலை’ என்கிறபோதும் அதிலே ‘பாடம்’ வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது! நாஸ்திகம் சொல்லிக் கொடுப்பதற்கே ஒரு ஸ்கூல் வைத்தால் அதுவும் பாடசாலைதான். ஆனால் ‘பாடம்’ என்பதற்கு ஒரிஜினல் அர்த்தம் என்னவென்றால் வேதம் ஒதுவதுதான். நித்ய கர்மாக்களில் ஒன்றாக ப்ரஹ்ம யஜ்ஞம் என்று வேத அத்யயனம் செய்வதற்கே பாடம் என்று பெயர். “பாட (tha)” என்று அழுத்திச் சொல்லவேண்டும்.

வேத வாக்யங்களைக் கற்று ஒப்பிப்பவன் ‘பாடி’, உதாரணமாக ‘கனம்’ என்ற முறையில் வேதத்தின் பதங்களைக் கோத்து வாங்கிச் சொல்வதற்கு அறிந்தவர் கனபாடி. ஒருத்தரோடு சேர்ந்து வேத அத்யயனம் பண்ணுகிற மாணவனை (‘மாணவன்’ என்ற வார்த்தைக்கு அப்புறம் வருகிறேன்) ஸஹபாடி என்பார்கள். நடைமுறையிலோ, வேதஸம்பந்தம் இருக்கவேண்டுமென்றில்லாமல் எந்தத் துறையிலும் நம்முடன்கூட வேலை செய்பவரை ‘சகபாடி’ என்கிறோம். தமிழ் தேசத்தில் வேத வழக்கு எப்படி ஆழ ஊறியிருக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குரு, ஆசார்யார் வாத்தியார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உபாத்யாயரும் ஆசார்யரும்
Next