ஸிக்கியர் மதத்தில் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மாணாக்கனை ‘சிஷ்யன்’ என்றும் சொல்கிறோம. சிஷ்யன் என்றால் ‘சிக்ஷை பெறுபவன்’ என்று அர்த்தம். குருகுலவாஸம் செய்து குருவிடமிருந்து பாடத்தில் மட்டுமின்றி, நடத்தையிலும் பயிற்சி பெறுகிவன்தான் சிஷ்யன். பாடம், நடத்தை இரண்டையும் சொல்லிக் கொடுப்பதுதான் சிக்ஷை. இப்போது சிக்ஷை என்றால் பாட்டு சொல்லிக் கொள்வதைத் தான் நினைக்கிறோம். ‘ஸங்கீத சிக்ஷை’ என்று சொல்கிறோம். அல்லது ஒரு ஜட்ஜ் தண்டனை விதித்தால், ‘ஆயுட்கால சிக்ஷை, தீவாந்தர சிக்ஷை, என்ற மாதிரி சிக்ஷை விதித்ததாகச் சொல்கிறோம். பாட்டு சொல்லிக் கொள்வதையோ தண்டனையையோ தான் ‘சிக்ஷை’ என்கிறோம். சில ஸமயங்களில் ‘ஸங்கீத சிக்ஷை’ என்பதே ஸங்கீதத்துக்குத் தருகிற தண்டனை மாதிரி ஆகிறது என்கிறார்கள் – அது வேறு விஷயம்!

ஒரு குருகுலத்தில் சிஷ்யனானவன் எப்படி ஆசியிரிருக்குக் கட்டுப்பட்டு விநயமாக இருக்கிறானோ அப்படியேதான் ஒரு மதத்தைச் சேர்ந்தவன் அதன் கொள்கைகளுக்கும், அந்த மதாசார்யருக்கும் கட்டுப்பட்டு அடங்கியிருக்கவேண்டும் என்ற கருத்தில் ஸிக்கிய மதத்தை குருநானக் ஸ்தாபித்தார். அதிலே ஹிந்து மதம். இஸ்லாம் இரண்டின் அம்சங்களும் இருக்கின்றன. இஸ்லாம் மதத்தில் கட்டுப்பாடு ரொம்பவும் ஜாஸ்தி. தங்களுடைய மதக்கோட்பாடுகளுக்கும், வ்ரதாநுஷ்டானங்களுக்கும் முஸ்லீம்கள் கட்டுப்பட்டு இருக்கிறமாதிரி மற்ற மதங்களில் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட அடக்கக் கட்டுப்பாட்டை குருநானக், தாம் ஸ்தாபித்த ஸிக்கிய மதஸ்தர்களுக்கு முக்யமாக வைத்தார். அந்த மதஸ்தர்கள் குருகுலத்தில் மாணவர்கள் குருவுக்குக் கட்டுப்படுகிற மாதிரி மதத்தலைவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று கருதினார். அதனால்தான் அந்த மதத்தலைவருக்கு ‘குரு’ என்றே பெயர் வைத்தார். (‘குரு கோவிந்த் ஸிங்’ என்கிற மாதிரி பெயர்களைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்). மதத் தலைவருக்கு ‘குரு’ என்று பெயர் வைத்ததற்கேற்ப அந்த மதத்தைச் சேர்ந்த மற்ற எல்லோருக்கும் ‘சிஷ்ய’ என்றே பெயர் வைத்தார். ‘சிஷ்ய’ என்பதுதான் ‘ஸிக்’ (Sikh) என்றாயிருக்கிறது. பஞ்சாப் பக்கங்களில் அதாவது ஸிக்கிய மதம் பரவியுள்ள இடங்களில் வேத அத்யயனம் செய்கிறபோது ‘ஷ’ என்ற அக்ஷரத்தை ‘க’ என்றுதான் உச்சரிப்பார்கள். உதாரணமாக ‘ஹவிஷா’ என்று புருஷஸூக்தத்தில் வருவதை அவர்கள் ‘ஹவிகா’ என்றே சொல்வார்கள். அதே ந்யாயத்தில் ‘சிஷ்ய’விலும் ‘ஷ’ என்பது ‘க’வாகி ‘ஸிக்’ என்றாகியிருக்கிறது. இது என் ஊஹம். ‘சிக்ஷக’ என்பது ‘ஸிக்’ என்றாகியிருப்பதாகவும் ஊஹிக்கலாம். குருதான் சிக்ஷகர். மற்றவர் சிஷ்யர். ‘ச’ வை ஷ,ஸ என்றெல்லாம் வடக்கே மாற்றிவிடுவார்கள்! கடைசி எழுத்துக்களை முழுங்கிவிடுவார்கள். ஆகையால் ‘சிக்ஷக’ என்பதும் ‘ஸிக்’ ஆகிவிடமுடியும்.

விநயம் என்பது மனிதனுக்கு இருக்கவேண்டிய முதல் குணம். அதனால்தான் ‘அவிநயம் அபநய’ என்றார் நம் ஆசார்யாள். அவிநயம் போனால் அடக்கம் வந்துவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சங்கரரும், சிஷ்யர்களும், விநயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இருவித அடக்கம்
Next