உபாத்யாயரும் ஆசார்யரும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வாத்யார் – உபாத்யாயர் – அத்யாயம் என்பதிலிருந்தோம். அத்யாயம் என்கிற வேதக் கல்வியைச் சொல்லிக் கொடுப்பவர் எவரோ அவர் அத்யாபகர். வேதம் கற்றுக் கொடுப்பதற்கு ‘அத்யாபனம்’ என்றும், கற்றுக்கொள்வதற்கு ‘அத்யயனம்’ என்றும் பெயர். கற்றுக் கொடுப்பவர் அத்யாபகர். உப-அத்யாபகர்தான் உபாத்யாயர். உபாத்யாபகர் என்றில்லாமல் ‘உபாத்யாயர்’ என்றே இருக்கிறது.

‘உப’ என்று ஒரு வார்த்தைக்கு முன்னே சேர்க்கிற Prefix-குப் பல அர்த்தங்கள். அதில் நமக்கு குறிப்பாகத் தெரிவது, மூலமாக முக்யமாக இருக்கப்பட்ட ஒன்றுக்குக் கீழே, அதற்குத் துணையாக, அதன் கார்யத்தையே சின்ன அளவில் செய்வதாக இருப்பதை ‘உப’ என்பது. அங்கம்-உபாங்கம்; புராணம்-உபபுராணம்; ஜனாதிபதி-உபஜனாதிபதி. “உப” என்பது, “உப” போடாமல் வரும் மூலத்துக்கு subordinate (கீழ் ஸ்தானத்தில் அடங்கியிருப்பது). முக்யமாயிருப்பதற்கு இது கீழ் லெவல். ‘உப’ போடாதது ஸுபீரியர்; ‘உப’ போட்டது இன்ஃபீரியர் என்ற அர்த்தத்திலேயே பொதுவாக வருகிறது.

‘உபாத்யாயர்’ என்பவர் அத்யாபகருக்கு உதவியாக துணையாக, அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர். அத்யாபகருக்கு உள்ள பெருமை இவருக்கு இல்லாமல் கொஞ்சம் இன்ஃபீரியராக நினைக்கும்படியும் சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. அது என்னவென்று சொல்கிறேன்.

வேதம் கற்றுக் கொடுப்பவரான அத்யாபகர் என்பவரில் இரண்டு தினுஸு உண்டு; ஒன்று ஆசார்யர், இன்னொன்று உபாத்யாயர் என்று ஸ்ம்ருதிகளில் சொல்லியிருக்கிறது. ஆசார்யருக்கும் உபாத்யாயருக்கும் என்ன வித்யாஸமென்று ஸ்ம்ருதிகளில் ரொம்பவும் சிறப்பாகக் கருதப்படும் மநுஸ்ம்ருதியிலிருந்து தெரிகிறது.

ஆசார்யரென்பவர் வயிற்றுப் பிழைப்புக்காகப் பாடம் சொல்லிக் கொடுப்பவரல்ல. பிராம்மணனின் கடமை தனக்குத் தெரிந்த வித்யை தன்னோடு அழியாமல் என்றும் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படிச் செய்வது என்ற ஒன்றுக்காகவே அவர் குருகுலம் அமைத்துப் பாடம் சொல்லித் தருவார். சேர்கிற சீஷ (சிஷ்ய)ப் பிள்ளைகளிடம் அவர் ஃபீஸ் (தக்ஷிணை) பேசிக்கொள்ள மாட்டார். பாடமெல்லாம் கற்றுக் கொடுத்து முடித்த பிறகுதான் – ஸாதாரணமாக இதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் ஆகும் – சிஷ்யனே விஞ்ஞாபித்துக் கொண்டதன் மேல் அவர் ஏதாவது தக்ஷிணை கேட்பார். பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்தாலும் த்ருப்தியாயிருந்து விடுவார். ஸத்வித்யை ஸத்பாத்ரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற ஒன்றுக்காகவே தொண்டை தண்ணி வற்றப் பாடம் சொல்லிக் கொடுத்து அதோடு ‘ஸ்கூல் பீரியட் முடிந்தபின் மாணவன் தொல்லையில்லை’ என்றில்லாமல் அவனைத் தன்னுடனேயே வருஷக்கணக்கில் சேர்ந்து வஸிக்கும்படியாக குருகுலம் வைத்துக்கொண்டு, அவன் நல்ல ஒழுக்கசாலியாக உருவாவதற்கும் பொறுப்பு எடுத்துக்கொள்பவரே ஆசார்யார்.

இப்படி அநேக குருகுலங்கள் அங்கங்கேயும் இருந்த தேசம் இது என்று நினைத்தாலே பெருமையாயிருக்கிறது. பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதாக இது முடிந்து போகக் கூடாது என்பதற்காகத்தான் இதையெல்லாம் ‘ஆசார்ய’ப் பெயர் போட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் தொண்டைதண்ணி வற்றச் சொல்லிக் கொண்டிருப்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேதத் தொடர்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  போதனை ஜீவனோபாயமாக
Next