அதிசய அந்தாதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஷட்பதீ ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு ச்லோகத்திலும் ஒரு தினுஸான அழகு ரொம்பிக் கிடக்கிறது. நாலாவது ச்லோகத்தில் ஆசார்யாள் வார்த்தைகளைப் பின்னியிருக்கிற அழகு ஈடிணையில்லாமல் இருக்கிறது.

ஸாதாரணமாக, ‘அந்தாதி’ என்று ஒரு கவிதை வகையைக் கொண்டாடிச் சொல்கிறோம். ‘ஸரஸ்வதி அந்தாதி’, ‘சடகோபர் அந்தாதி’ என்றெல்லாம் கம்பர் பண்ணியிருக்கிறார். ‘திருவாய் மொழி’ எனப்படும் நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களில் பாசுரங்கள் முழுக்க முழுக்க அந்தாதி க்ரமத்தில்தான் இருக்கும். ‘நாலாயிர திவ்ய ப்ரபந்த’த்தில் முதல் மூன்று ஆழ்வார்களும் சேர்ந்து பகவத் தர்சனம் பெற்றவுடன் ஒருத்தருக்குப் பின் ஒருத்தராக அந்தாதிதான் பாடியிருக்கிறார்கள். தற்காலத்தில் ‘அபிராமி அந்தாதி’ ப்ரஸித்தமாகிக் கொண்டு வருகிறது.

‘அந்த’, ’ஆதி’ என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து ’அந்தாதி’ என்றாகிறது. ‘அந்தம்’ என்றால் முடிவு; ‘ஆதி’ என்றால் ஆரம்பம். ஆரம்பமும் முடிவும் இல்லாத பரமாத்மாவை’ ‘ஆத்யந்த ரஹிதன்’ என்று சொல்வது வழக்கம். ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை’ என்று மாணிக்கவாசகர் ‘திருவெம்பாவை’யை ஆரம்பிக்கிறார்.

‘அந்தாதி’ என்று ஒரு கவிதை வகைக்கு ஏன் பெயர் வந்தது என்றால் இதில் ஒரு செய்யுளின் அந்தமான (முடிகிற) வார்தையே அடுத்த செய்யுளின் ஆதி (ஆரம்ப) வார்த்தையாக வரும்.

உதாரணமாக, பெருமாளைப் பாட வந்த பொய்கையாழ்வார் ‘முதல் திருவந்தாதி’யில் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தை ஸ்தோத்ரம் செய்யும்போது,

ஆலமரநீழல் அறம் நால்வர்க்(கு) அன்(று) உரைத்த

ஆலம் அமர் கண்டத் (து) அரன்

என்று ஒரு செய்யுளில் ‘அரன்’ என்பதை ‘அந்த’மான வார்த்தையாக முடிக்கிறார். இதற்கடுத்த செய்யுளில் ஹரி – ஹர அபேதத்தைச் சொல்கிறபோது, ‘அரன்’ என்ற இதே வார்த்தையை ‘ஆதி’ வார்த்தையாக வைத்து ஆரம்பிக்கிறார்.

அரன் – நாரணன் நாமம் ஆன்விடை – புள் ஊர்தி

என்றிப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார்.

இப்படி அந்தாதியாக ஒரு ஸ்தோத்ரத்தில் செய்யுள்களை மாலை மாதிரி கோத்துக்கொண்டே போவதில் ஒரு பெரிய ஸெளகர்யம், நாம் மேலே மேலே ஒவ்வொரு செய்யுளை நினைவு வைத்துக்கொண்டு மனப்பாடம் பண்ண ஸுலபமாகிறது. “இந்தச் செய்யுள் ‘அரன்’ என்று முடிகிறதா? ஸரி, அப்படியானால் அடுத்த செய்யுள் ‘அரன்’ என்றுதான் ஆரம்பிக்கும்” என்று நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.

ஒரு செய்யுளின் அல்லது ச்லோகத்தின் முடிவு, அடுத்ததன் ஆரம்பமாக வைத்து அந்தாதி பாடுவதற்கு நிரம்பப் பாண்டித்யம் இருக்கவேண்டும். நம் ஆசார்யாளோ இதைவிடப் பல மடங்கு கஷ்டமான ஒரு ஸாதனையை ‘ஷட்பதீ’யின் நாலாவது ச்லோகத்தில் அநாயாஸமாகப் பண்ணியிருக்கிறார். ஒரு ச்லோகத்துக்கும் இன்னொரு ச்லோகத்துக்கும் அந்த – ஆதித் தொடர்பு இருப்பதைவிட எத்தனையோ மடங்கு கடினமானதாக, ஒரே ச்லோகத்துக்குள்ளேயே ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் அந்த – ஆதித் தொடர்பு இருக்கிற விதத்தில் இங்கே பதங்களைக் கோத்துக்கொண்டு போயிருக்கிறார். அந்த ஸ்லோகத்தைச் சொல்கிறேன்.

உத் – த்ருத நக – நகபிதநுஜ – தநுஜகுலாமித்ர – மித்ர சசி த்ருஷ்டே

த்ருஷ்டே பவதி

—இதுவரை பதத்துக்குப் பதம் அந்தாதி க்ரமத்தில் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் ‘உத் – த்ருத நக’. இதில் முடிகிற ‘நக’வையே அடுத்த பதத்துக்கு ஆரம்பமாக வைத்து ‘நகபிதநுஜ’ இதன் அந்த்யமான ‘தநுஜ’வை ஆரம்பமாக வைத்து, இதற்கடுத்த பதமான ‘தநுஜ குலாமித்ர’. இந்த ரீதியில் ரொம்பவும் ஆச்சர்யமாக ச்லோகம் போகிறது. ஒரு phrase (சொற்றொடர்) முடிவில் வரும் வார்த்தை அடுத்த phrase-ன் ஆரம்பமாகிறது. ஒரு phrase முடித்துவிடும் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அடுத்த phrase ஆரம்பிக்கிறது. இதை “முக்த பத க்ரஸ்தம்” என்பார்கள். “முக்த” — விட்ட, “க்ரஸ்த” — பிடித்துக்கொண்ட.

முதல் வரி முடித்துவிட்ட “த்ருஷ்டே”வைப் பிடித்துக்கொண்டு இரண்டாவது வரியை ‘த்ருஷ்டே பவதி’ என்று ஆரம்பித்து, அப்புறம் இந்த ‘பவதி’ என்ற அக்ஷரங்களையே பல தினுஸில் திருப்பி,

த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: ||

என்று முடிக்கிறார். முழு ச்லோகத்தையும் சேர்த்துச் சொன்னால் – ஒரு தைலதாரை பிசிர் இல்லாமல், முறிவு படாமல் விழுகிற மாதிரி வார்த்தைக்குப் பின் வார்த்தையாகத் தானாகச் சேர்ந்துகொண்டே போகும்.

உத் – த்ருத நக – நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ர சசி த்ருஷ்டே |

த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: ||

ச்லோகத்தின் உச்சாரண அழகு கெட்டுப்போகக் கூடாதென்று இங்கே சீர் பிரிக்காமல், ஸந்தி பிரிக்காமல் சொன்னேன். பிரித்துச் சொன்னால் ‘நகபிதநுஜ’ என்பது ‘நகபித் அநுஜ’ என்றாகும், ‘பவதிரஸ்கார:’ என்பது ‘பவ திரஸ்கார:” என்று இரண்டு வார்த்தைகளாகப் பிரியும்.

வார்த்தைகளை அழகாகக் கோத்துவிட்டால் போதுமா? இந்த நாளில் கூட ரொம்பவும் அடுக்குச் சொல் அலங்காரம் வந்தவிட்டது என்கிறார்கள். சொல் அடுக்கு அழகாக இருந்தால் மட்டும் ப்ரயோஜனம் இல்லை. அதன் அர்த்தமும் அழகாக, ஆழமானதாக இருக்கவேண்டும். இந்த ச்லோகத்தில் சொல்லழகோடு பொருளழகும் சேர்ந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸம்ஸாரம் நீக்கி ஸதாநந்தம் அருளும் அடி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கருத்திலும் தொடர்சசி காட்டும் ச்லோகம்
Next