கருத்திலும் தொடர்ச்சி காட்டும் ச்லோகம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உத் – த்ருத நக

‘நகம்’ (nagam) என்றால் மலை. ‘கம்’ (gam) என்றால் நடப்பது, அசைவது, சலிப்பது. அசையாமல் சலிக்காமல் இருப்பதால்தான் மலைக்கு ‘அசலம், ’அகம்’, ‘நகம்’ என்றெல்லாம் பெயர் ஏற்பட்டிருக்கிறது. பர்வதராஜ குமாரியாக இருக்கப்பட்ட அம்பாளை ‘கிரிஜா’ (கிரி என்றாலும் மலைதானே?) என்கிற மாதிரியே, ‘அகஜா’, ‘நகஜா’ என்றெல்லாமும் சொல்வதுண்டு. பிள்ளையாரின் மேல் எல்லோரும் சொல்கிற ஸ்தோத்ரம் ஒன்றுகூட ‘அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம்’ என்று ஆரம்பிக்கிறது. இவர் கஜ ஆநநர் அதாவது ஆனை முகர். ‘கஜாநநத்’துக்கு ‘சொல்லிலக்கணப்படி’ (opposite) ‘அகஜாநநம்’. ஆனால் வார்த்தையின் அர்த்தப்படி பார்த்தாலோ, இந்த கஜாநநர், அகஜாவான பார்வதியின் ஆநந (முக) பத்மத்தை மலர்விக்கும் அர்க்க (ஸூர்ய) னாக இருக்கிறார்!

அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம்

அகம், நகம் இரண்டுக்கும் ஒரே அர்த்தம். மலை என்று பொருள். ‘உத்-த்ருத நக’ என்றால் ‘மலையைத் தூக்கியவனே, மலையைத் தாங்கியவனே’ என்று அர்த்தம். ‘கிரிதர கோபாலன்’ என்று மீராபாய் எப்போது பார்த்தாலும் பாடிக்கொண்டிருந்தது இந்த அவஸரத்தைத்தான்.

பகவான் இரண்டு ஸந்தர்ப்பங்களில் மலையைத் தூக்கியிருக்கிறான். அம்ருதம் எடுப்பதற்காக க்ஷீரஸாகரத்தில் மந்தர மலையை மத்தாகப் போட்டு வாஸுகிப் பாம்பை நாணாகச் சுற்றிக் கடைந்தபோது, மஹா விஷ்ணுவேதான் அந்த மலை ஸமுத்ரத்தில் ஆடாதபடி அதை அடியிலிருந்து ஆமை ரூபத்தில் தாங்கிக் கொண்டிருந்தார். அப்புறம், க்ருஷ்ணனாக அவதாரம் பண்ணினபோது, இந்த்ரனின் கோபத்தினால் பெரிய மழை உத்பாதம் ஏற்பட்டபோது, கோவர்தனகிரியைக் குடையாகத் தூக்கி கோகுலம் முழுவதையும் மழையிலிருந்து காப்பாற்றினார். அவர்தான் கிரிதர கோபாலன். நம்முடைய கர்ம பாரம் ஒரு மலை மாதிரி. இதை பகவான்தான் சுண்டு விரல் நுனியிலே பாலக்ருஷ்ணன் கோவர்தன கிரியைத் தாங்கின மாதிரித் தாங்க வல்லவன்: “உத்-த்ருத நக”.

“நகபிதநுஜ-“: ’நகபித்’, ‘அநுஜ’ என்ற இரண்டு வார்த்தைகள் சேர்ந்து ‘நகபிதநுஜ’ என்றாகிறது. ‘நகபித்’ என்றால் ‘மலைகளைப் பிளந்தவன்’ என்று அர்த்தம். பூர்வத்தில் மலைகளுக்கு இருந்த இறக்கைகளை தேவேந்திரன் வஜ்ராயுதத்தால் வெட்டினான் என்று கதை. இந்த தேவேந்த்ரனுக்கு ‘அநுஜன்’ என்றால் ‘உடன் பிறந்தவன்’ என்று அர்த்தம். ‘உடன் பிறந்தவன் ‘என்றால் மட்டும் போதாது. ‘பின்னால் பிறந்தவன்’, அதாவது தம்பிதான் அநுஜன். முன்னால் பிறந்த அண்ணா, பின்னால் பிறந்த தம்பி இரண்டுபேருமே “உடன் பிறந்தவர்”தான். இவர்களில், முன்னால் பிறந்த அண்ணாவைப் “பூர்வஜன்” என்றும், பின்னால் பிறந்த தம்பியை “அநுஜன்” என்றும் சொல்லவேண்டும்.

தேவேந்த்ரனுக்குத் தம்பியாகப் பிறந்தவர் பகவான்.

ராமாநுஜன் என்றால் ராம அநுஜன். அதாவது ராமனுக்குத் தம்பியான லக்ஷ்மண ஸ்வாமி. லக்ஷ்மணன் ஆதீசேஷ அவதாரம். சேஷாவதாரமாகவே வைஷ்ணவர்கள் சொல்கிற ராமாநுஜாசாரியாருக்கு லக்ஷ்மணன் என்றே பூர்வாச்ரமத்தில் பெயர்.

விஷ்ணு எப்போது இந்த்ரனுக்குத் தம்பியாகப் பிறந்தார்? வாமனாவதாரத்தின் போதுதான். இந்த்ராதி தேவர்கள் யாவரும் கச்யப மஹர்ஷிக்கும் அதிதி என்கிற அவருடைய பத்னிக்கும் பிறந்தவர்கள். மஹாபலியை அடக்குவதற்காக பகவான் வாமனராக அவதாரம் செய்தபோது, அதிதி – கச்யப தம்பதிக்குத்தான் பிள்ளையாகப் பிறந்தார். இதனால், இந்தரனுக்கு அநுஜனாகிவிட்டார். ‘உபேந்த்ரன்’ என்றுகூட இதனால் அவருக்கு ஒரு பெயர் உண்டு.

க்ருஷ்ணாவதார காலத்தில் இந்த்ரனின் கர்வத்தை அடக்கி அவனை அடிபணிய வைப்பதற்காகத்தான் கோவர்தன கிரியைத் தூக்கி ‘உத்-த்ருத நக’ராக ஆனார். பூர்வத்தில் வாமனாவதாரத்தில் அதே இந்த்ரனுக்கு ஸஹோதரனாக – ‘நகபிதநுஜ’னாக – இருந்திருக்கிறார்! அப்போது மஹாபலியை அடக்கி இந்த்ரனுக்கு தேவலோக ஆதிபத்யத்தை மீட்டுக் கொடுத்தார். பகவானுக்குத் தனியாக ஒரு மனுஷ்யர் மீது ப்ரியம், அப்ரியம் என்பதில்லை. ஒருவர் அடக்கத்துடன் தர்ம வழியிலே வர நினைத்தால் ப்ரியமாயிருப்பார், அவரே அஹங்கரித்துக்கொண்டு அதர்மமாகப் போனால் தண்டிப்பார். ஒருத்தர் செய்யும் நல்லது – கெட்டதுகளை வைத்தே அவரது ப்ரியாப்ரியங்கள். ஒரே ஆஸாமியின் விஷயமாக இப்படி அவர் மாறுபட்டுச் செய்ததை ஒரே ச்லோகத்தில் அடுத்தடுத்து ஆசார்யாள் கோத்துக் கொடுத்திருக்கிறார்: “உத்-த்ருதநக, நகபிதநுஜ”.

“தநுஜ – குலாமித்ர”: ‘தநுஜர்’ என்றால் அஸுரர்கள். “தநு” என்பவளின் பிள்ளைகள்தான் தநுஜர்கள். தேவர்களுக்குப் பிதாவான அதே கச்யபரின் பத்னிதான் தநுவும். தேவர்கள், அஸுரர்கள் அனைவருக்கும் அவரே பிதா. மாதாக்கள் வேறு வேறு. அதிதியின் பிள்ளைகளான தேவர்களை ஆதித்யர் என்கிறார்கள். ‘திதி’ என்றும் கச்யபருக்கு ஒரு பெண்டாட்டி உண்டு. அவளுடைய பிள்ளைகள் தைத்யர்கள். இவர்களும் அஸுரர்கள்தான். தநுவின் பிள்ளைகளை தநுஜர் என்பது போலவே தானவர் என்றும் சொல்வதுண்டு.

‘நகபிதநுஜ’ என்கிறபோது வந்த ‘தநுஜ’ என்பது இரண்டு வார்ததைகளின் ஸந்தியில் ஏற்பட்டது. அதை ‘நகபித் அநுஜ’ என்று பிரித்தால்தான் அர்த்தமாகும். ‘நகபி’, ‘தநுஜ’ என்று பிரித்தால் தப்பு. பின்னாடி ‘தநுஜ குலாமித்ர’ என்று வருவதற்கு அந்தாதி க்ரமத்தில் படி போடுவதற்கே, ஸ்ரீ ஆசார்யாள் ‘நகபிதநுஜ’ என்பதில் இரண்டு வார்த்தைகளின் ஸந்தியில் ஒரு ‘தநுஜ’வை முடிச்சுப் போட்டிருக்கிறார்!

அநேக ச்லோகங்களில் இப்படி வேடிக்கையாக வரும். ‘அகஜாநந பத்மார்க்கம்’ ச்லோகத்தில்கூட ‘அநேக – தந்தம் பக்தாநாம் ஏக தந்தம் உபாஸ்மஹே’ என்று வருகிறது. ‘இதென்ன வேடிக்கை? ஒருத்தரையே ஏக தந்தர், அநேக தந்தர் என்றால் – அதாவது ஒரு தந்தம் உள்ளவர், பல தந்தம் உள்ளவர் என்றால் – எப்படி ஸரியாகும், என்று தோன்றுகிறது. ‘அநகே – தந்தம்’ என்பது ‘அநேகதம்’ என்ற வார்த்தையாகவும், அதை அடுத்து வரும் ‘தம்’ என்ற வார்த்தையாகவும் பிரியும். அநேக – தம் – தம் என்பது ‘அநேக தந்தம்’ என்றாகும். ‘பக்தாநாம் அநேகதம்’ என்றால் பிள்ளையார் அவருடைய பக்தர்களுக்கு அநேக விதமான நலன்களை அருள்கிறார் என்று அர்த்தம். ‘தம் உபாஸ்மஹே’ என்றால் ‘அவரை உபாஸிக்கிறேன்’ என்று அர்த்தம். அவருக்கு ஒரே ஒரு தந்தம்தான் உண்டு ஒற்றைக் கொம்பர். ஏக தந்தர். இந்த ‘ஏக தந்தம்’ என்பதே வார்த்தை விளையாட்டில் இன்னொரு தரம் வந்தால் கவிதைக்கு அழகு செய்கிறது என்பதற்காக ‘அநேக தந்தம்’ (அநேகதம் தம்) பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே’ என்று ச்லோகத்தில் வைத்திருக்கிறது. Prose- order படி இருந்தால் “பக்தாநாம் அநேகதம் ஏகதந்தம் தம் உபாஸ்மஹே” (பக்தர்களுக்குப் பலவற்றை, அநேக நலன்களை தரும் ஒற்றைக் கொம்பரான அவரை உபாஸைனை செய்கிறேன்) என்று இருக்கவேண்டும்.. எந்த பாஷையிலும், ‘பொயட்ரி’யில் வார்த்தைகளை முன் பின்னாக வைக்கலாம் என்ற விதிப்படி இங்கே மாற்றியிருக்கிறது.

‘தநுஜ குலாமித்ர’ என்றால் தநுஜ குலமான அஸுரர்களுக்குப் பகைவர் (அமித்ர) என்று அர்த்தம்.

இந்த்ரனுக்குத் தம்பியாகக் காச்யப – அதிதி தம்பதிக்கு பகவான் அவதரித்தபோது, தநுஜர்களும் அவருக்கு பித்ருபக்ஷத்தில் (அப்பாவை வைத்துப் பார்த்தால்) அண்ணாமார்கள்தான், தநுஜர்கள் அவருடைய மாற்றாந்தாயின் பிள்ளைகள். ஆனால் உறவுமுறை பார்க்காமல் தர்மாதர்மங்களையே பகவான் பார்ப்பவராதலால் அவர்களுக்கு அமித்ரராக (பகைவராக) இருந்தார்.

ஒரு ஸமயத்தில் நல்லவனாகவும் ஒரு ஸமயத்தில் அப்படியில்லாமலும் இருக்கிற இந்த்ரனிடம் அவர் அன்போடு தம்பியாக இருந்து மஹாபலியிடமிருந்து அவனுடைய ராஜ்யத்தை க்ரஹித்து அவனுக்கு அதைத் திரும்பக் கொடுத்துமிருக்கிறார்; தண்டிப்பவராக கோவர்தனத்தைத் தூக்கிப் பிடித்து, அவர் சக்கையாய் மழை பெய்து அப்புறம் தானே சக்தியெல்லாம் இழந்து சக்கை மாதிரி வந்து காலில் விழும்படியும் பண்ணினார். எல்லா ஸமயங்களிலுமே கெட்டவர்களாக இருக்கிற தநுஜர்களும் ஸஹோதரர் முறையாக வேண்டியவர்களானாலும், அவர்களுக்கு ‘அமித்ரர்’ என்றே சொல்லும்படியாக எப்போதும் இருக்கிறார்.

ஒரு வார்த்தையின் முடிவை அடுத்த வார்த்தையின் ஆரம்பமாக கோத்துக்கொண்டு போவதுபோலவே பகவானின் நிக்ரஹாநுக்ரஹங்கள் (தண்டிப்பதும் அருள்வதும்) எப்படி இருக்கின்றன என்ற ‘ஐடியா’வையும் ச்லோகத்தில் ’டெவலப்’ பண்ணிக் கோத்துக் கொடுத்தாற்போல இருக்கிறது!

“மித்ர சசி த்ருஷ்டே”: மித்ர என்றால் நண்பர் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ‘பந்து மித்ரர்’கள் என்று சொல்கிறோம். ‘மித்ர’னுக்கு opposite ‘அமித்ரன்’. இங்கே, ‘மித்ர சசித்ருஷ்டே’ என்னும்போது ‘மித்ர’ என்றால் ‘ஸூர்யன்’ என்று அர்த்தம். ஒரே வார்த்தையை வெவ்வேறு அர்த்தத்தில் ப்ரயோகிக்கிற அலங்காரத்தை இங்கே ஆசார்யாள் கையாண்டிருக்கிறார்.

வேதம் நெடுகிலும் ஸூர்யனை மித்ரன், மித்ரன் என்று சொல்லியிருக்கிறது. அந்தக் காலத்தில் வைதிகமான ஸூர்யோபாஸனை லோகம் பூராவிலுமே பரவியிருந்தது. தேசாந்தரங்களிலும் (அந்நிய நாடுகளிலும்) இந்த “மித்ர” என்ற பேர் அப்படியே வழக்கில் இருந்திருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்பு எகிப்து (Egypt) தேசத்தில் இரண்டு ராஜாக்கள் செய்து கொண்ட உடன்படிக்கை (Treaty of Rameses II With the Hittites) கூட ‘மித்ரா வருண’ ஸாக்ஷியாகச் செய்து கொண்டதாக இருக்கிறது!

“மித்ர – சசி – த்ருஷ்டே” என்கிற இடத்தில் ‘மித்ர’ என்றால் ஸூர்யன். ‘சசி’ என்றால் சந்த்ரன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெள்ளை வெளேர் என்று இருக்கிற சந்த்ரனுக்குள்ளே நிழல் மாதிரி ஒன்று கறுப்பாய்த் தெரிகிறதல்லவா? உற்றுப் பார்த்தால் இது ஒரு முயல் மாதிரி தோன்றும். முயலை ஸம்ஸ்க்ருதத்தில் ‘சசம்’ என்பார்கள். ‘முயலைத் தன்னிடத்தில் கொண்டது’ என்பதால் சந்த்ரனுக்கு சசாங்கன் என்றும், சசி என்றும் பெயர்.

மித்ரனையும் சசியையும், அதாவது சந்த்ர ஸூர்யர்களை இரண்டு கண்களாகக் கொண்டவனைத்தான் ‘மித்ர சசி த்ருஷ்டே’ என்று சொல்கிறார். பகவானின் விச்வ ரூபத்தில், விராட் ஸ்வரூபத்தில், அவனுக்கு ஸூர்யன் வலது கண், சந்த்ரன் இடது கண்.

இந்த்ரனுக்கு அநுஜன், தநுஜர்களுக்கு அமித்ரன் என்றெல்லாம் வாமனாவதாரத்தை நினைவூட்டியதன் தொடர்ச்சியாக வாமன ப்ரஹ்மசாரி த்ரிவிக்ரமனாக விச்வரூபம் எடுத்து சந்த்ர – ஸூர்யர்களைக் கண்களாகக் காட்டியதையும் இப்போது ஞாபகப்படுத்துவதுபோல் இருக்கிறது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பூர்வ பாகத்தில் சொல்கிற “பூ: பாதெள” என்ற ச்லோகத்தில் ‘சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே” என்று வருகிறது. இதுவேதான் “மித்ர சசி த்ருஷ்டே”.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அதிசய அந்தாதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தர்சனத்தால் ஸம்ஸார நீக்கம்
Next